தேன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மலையாள மூலம் : பால் சக்காரியா - தமிழில் : பவா செல்லதுரைஓவியங்கள் : பாலசுப்ரமணியன்

ப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என  உங்களுக்குத் தோன்றினாலும் இது ஓர் உண்மைக் கதையின் விவரிப்பு, சமீப நாட்களில் உலகெங்கும் நடக்கிற ஒன்றுதான். வசீகரமானதொரு  வனமும்,  அதையொட்டிய ஒரு குக்கிராமமும் மட்டும்தான் இக்கதையின் நிலப்பரப்பு.

சர்ச்சைகள் எழுவதற்கு இதில் ஒன்றும் இல்லையென்றாலும், ஓர் எழுத்தாளன் என்ற முறையில் இக்கதையின் நிகழ்விடத்தையும், அதன் மனிதர்களையும், அவர்களின் அந்தரங்கத்தையும் பாதுகாப்பது என் கடமை. என் கடமையைச் செய்ய நீங்கள் என்னை முழுமையாக அனுமதிக்க வேண்டும்.

தேவதைகள் உலவினாலும், இல்லாவிட்டாலும் வனமென்பது எப்போதும் போதையேற்றும் ஒரு சொர்க்கமே. அங்கே நடந்த நிகழ்வுகளின் ஓர் ஓவியத்தை முழுமையடையச் செய்ய அதன் பின்புலமாக உள்ள காட்டைப் பற்றிய சிறு விவரிப்பை முதலில் தந்துவிடுகிறேன். இந்தப் பகுதியை, காடுகளைப் பற்றி அறிய விருப்பமுடையவர்கள் மட்டும் இனி வாசித்தால் போதுமானது.

நீங்கள் இப்போது தரிசிக்க இருக்கும் இக்காட்டில் வியாபித்திருக்கும் சில மரங்கள்: நாய்க்கொல்லி, கத்திப்பிடி, மொட்டுமூக்கன், கல்சுருளி, முளகுநாறி, கடுவாப்பிடுக்கன், மூட்டில்தூறி, வெருகுதீனி, உண்டகண்ணி, அண்ணான்வழுக்கி, பூதம்கொல்லி, பாதிரி.

இவ்விரிந்த காட்டில் ஜீவித்திருக்கிற காட்டுவாசிகளான சிறு விலங்குகளில் என்னுள் பதிந்த சில: கடந்தல், குளவி, பேன், செல், வண்டு, மின்மினி, தும்பி, எட்டுக்காலி, அட்டை, தோட்டப்புழு, ஞாஞ்ஞூல், மண்ணிரை, தேள், சிதல், எறும்பு, தேனீ, தொழுகையன், பூச்சிகள், கொசு, ஈ, குழியான், பட்டாம்பூச்சி, வெட்டுக்கிளி, சில்வண்டு, சாழி, வழுதாரை, தேரை, வெள்ளத்திலாசான்.

இவர்களுள் பலருக்கு உப ஜாதிகள் உண்டென்பது எனக்குத் தெரியும். நானறிந்து மதம் இருப்பதாகத் தெரியவில்லை. பூச்சியினம் என்பதே இவர்களின் பொதுப் பெயர். மதமில்லாதவர்கள் என்பதால், கடவுள் மட்டுமே இவர்களுக்குத் துணை. காட்டுக்கு வெளியே தேனீக்களைத் தவிர மற்றவற்றைப் பூச்சிக்கொல்லிகளால் அழித்துக்கொண்டிருக்கிறோம்.

இக்காட்டில் வாழ்க்கைப் போராட்டம் நடத்தும் நீர்வாழினங்களும், நீரிலும் நிலத்திலும் வாழ்பவையுமான இறைவனின் படைப்புகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

மீன்கள்: வட்டோன், விரால், பள்ளத்தி, மானத்துக்கண்ணி, வாழக்காய் வரையன், கல்லொட்டி, கல்நக்கி, நெற்றியேப் பொன்னன், துப்பல் குடியன்.

தவளைகள்: தீவயிறன், நீர்சொறியன், கரிவயிறன், பிலிகிரியன், காட்டு மணவாட்டி, பிள்ளராத் தவளை, மேனோன் குருடி, உம்மன் குருடி, சதுப்பன் சிலப்பன்.

தவிர, அணில், சீங்கண்ணி, முதலை, ஆமை, கரையாமை, சூரல் ஆமை, பீமன் ஆமை, வெள்ளை ஆமை, சித்திர ஆமை, நட்சத்திர ஆமை இவையும் அவற்றினூடே வாழ்பவைதாம்.

அக்காட்டாற்றின் நீர் தளும்பலில் ஒமேகா 3 குறைவுதான் என அறிவியல் சொல்கிறது. ஒமேகா 3 இல்லாத அத்திசை நமக்கெதற்கு, ருசி மட்டும் போதுமே! ஆமைக்கறி ருசிக்குப் பெயர் பெற்றது. தவளைகளின் கால்கள் இன்றும் உலகம் முழுக்கப் பறந்துகொண்டிருக்கின்றன. அடுத்த ஜென்மத்தில் காலில்லாமல் பிறக்க வேண்டுமெனத் தவளைகள் மனமுருகிப் பிரார்த்திப்பதில் ஏதாவது தவறுண்டா? அந்தத் தவளைகளின் பிரார்த்தனைகளுக்கு யாரும் காது கொடுத்ததாகத் தெரியவில்லை. ‘கொன்றால் பாவம், தின்றால் போச்சு’ என்ற வழக்கு அவற்றின் மீது அப்படியே செயல்படுத்தப்படுகிறது. மனித வாழ்வின் நெடுந்தூண்களாகக் கொல்வதும் உண்பதும் கழிப்பதும் என்றென்றும் இறுகிப்போயுள்ளன.

எந்தக் காட்டிலும் முலையுள்ளவர்களே முக்கியமானவர்கள். யானை, கடுவா, புலி என்று எந்த விலங்குகளையும் நீங்கள் கவனித்தால், இது உங்களுக்கு உறுதிப்படும். காட்டின் முலைகளுக்கு ஒரு வேறுபாடு உண்டு. நாட்டிலிருப்பவைபோல அவை உடல் சார்ந்தவையோ, கவர்ச்சிகரமானவையோ அல்ல. காடுகளில் பால் ஊட்டுவதற்கு மட்டுமே அவை பயன்படுகின்றன. காட்டின் பெண் விலங்குகளுக்கு தங்கள் முலைகள் குறித்த பெருமிதங்கள் எதுவும் இல்லை. தவிர முலைக் கச்சைகளைத் தேடி அலைவதற்கான அவசியமும் இல்லை.

இந்தக் காட்டில் முலையுள்ளவர்களில் சிலர்: கேழமான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சுண்டெலி, ஈனாம்பேச்சி, பெருச்சாளி, அணில், வௌவால், நரி, நீர்நாய், கரடி, குரங்கு, கடுவா, புலி, காட்டுநாய், குள்ளநரி, கீரி, வெறுகு, மரநாய், யானை, முயல், முள்ளம்பன்றி, காட்டுப் பூனை, அதனூடே சோம்பேறிக் கரடிகளுக்கு நாம் திரும்பிவர வேண்டும்.

வெயிலும் மழையும் ஒன்றாகப் பெய்யும் சில நாட்களில் இக்காட்டிலுள்ள வனவாசிகள் முலையோடு சம்பந்தப்பட்ட ஓர் அலாதியான காட்சியைக் காண்பார்கள். அப்படியான சில அபூர்வ கணங்களில், அழகே வடிவான ஒரு வனமோகினி தன் உடலின் சரிபாதியை பாதிரி மரத்தினடியிலுள்ள பாறையில் அமர்ந்து உன்னி கிருஷ்ணனுக்குப் பாலூட்டுவதைப் பார்க்கலாம். அவர்களைச் சுற்றி தேனீக்கள் ரீங்காரமிட்டபடி இருக்கும். வண்ணத்துப்பூச்சிகளும், பெயர் தெரியாத சில பூச்சிகளும் அவற்றைச் சுற்றிப் பறக்க, தூரத்திலிருந்து பறவைகள் இக்காட்சியை கவனித்துக்கொண்டிருக்கும். பொந்துகளில் இருந்து பூதங்கள் மெல்லிய குரலில் இசைக்க, கானுலா வருகின்ற தெய்வங்கள் அவற்றை நோக்கிப் புன்னகைக்கும்.

இருபுறத்திலிருந்து பிருந்தாவன விளையாட்டு, பசுக்களை மேய்க்கிற கண்ணன் வயிறு நிறையப் பால் குடித்த தெம்பில் அப்பூதத்தைக் கட்டிப்பிடித்து, வயிறு வரை எம்பி நின்று, ஒரு முத்தம் கொடுத்து உடனே அதன் மடியில் இருந்து குதித்து, அருகில் இருந்த அருவியை நோக்கிக் கால் கொலுசு சப்தமிட, அரைஞாண்கொடி துள்ளியாட வேகமாக ஓடுவான்.

அப்போது பூதகியின் அழகு மத்தாப்புப்போல ஒளிரும். அதன் உதட்டில் தேங்கி நிற்கும் மென்மையான புன்னகையுடன், இன்னமும் பால் சுரக்கும் மார்புகளோடு கனவில் ஆழ்ந்து அது லயித்திருக்கும். நீண்ட குளியலில் களைப்புற்றிருக்கும் உன்னிகிருஷ்ணன், அதன் மடியில் தலைசாய்த்து உறங்கிக்கொண்டிருப்பான்.

இக்காட்சியைக் காணும் வனவாசிகளின் உற்சாகம் சொல்லில் அடங்காதது. அதற்கொரு குறிப்பிட்ட காரணம் உண்டு. பூதகி அவர்களில் ஒருத்தி. அந்த மனுஷியால் எவரையும், குறிப்பாக குழந்தையை ஒருபோதும் வஞ்சிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.


அவர்கள் எக்காளமிட்டுக் கூவுவார்கள்.

இக்காட்சியே உண்மை. வனவாசிகளின் வாழ்வியல் உண்மை. அசுரர்களின் பிறப்பின் உண்மை. இது சத்தியம்.

இக்காட்டின் ஊர்வனவற்றில் சில இனங்களை இப்போது காணலாம்.

பல்லி: குட்டிவிரலன் பல்லி, பொன்னன் மரப்பல்லி, தங்க மரப்பல்லி, ஆனைமலைப்பல்லி, பொன்முடி மரப்பல்லி, சித்ரகன் பல்லி, ப்ரசாதிப் பல்லி, புள்ளிப் பல்லி, சிதல்பல்லி, வரையன் பல்லி.

ஓணான்: பச்சை ஓணான், முள் ஓணான், கூனன் பாறை ஓணான், சங்கன் ஓணான், மர ஓணான்.

அரணை: நீலக்கோடு மரஅரணை, பாம்பு அரணை, ரெண்டு கோடு மண் அரணை, பழனிமண் அரணை, துருக்குபூனை அரணை, செம்பண் அரணை, மணல் அரணை.

பாம்பு: முழமூக்கன், குழி மண்டலி, பச்சை நாகம், கொம்பேறி மூக்கன், சுருட்டை, மோந்தை உந்தி, கரிக்குரியன், சோளபச்சோலன், கரடி இரு தலையன், ரத்த குத்தன், ஆசம்புமேலி வாலன், கொக்குருட்டி, தாய்ப்பால் குடியன், பாண்டன் முள் வாலன், கருந்தலையன்.

இவையன்றி, உடும்புகளும் எலிகளும் உண்டு.

இவற்றுக்கும் ஜாதிகள் உள்ளன, மதங்கள் இல்லை. எல்லோரும் இறைவனின் குழந்தைகள். மதமின்றி, ஜாதி மட்டும் வாய்த்திருப்பது எத்தனை அற்புதமானது.

சிவசிவா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick