நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் -3 - சி.மோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பன்.இம்ப்ரஷனிஸம்பால் செசான்: நவீன ஓவியத்தின் தந்தை

மகால வாழ்வியக்கச் சலனத்தின் ஒரு கணத்தை, மனம் கிரஹித்து உணர்ந்த விதத்தில், ஒரு வரைமாதிரியின் அநாயாசமான தன்மையோடு, ஒளி மற்றும் வண்ணம் சார்ந்து ஓவியங்களாக்கிய இம்ப்ரஷனிஸவாதிகளின் அணுகுமுறையை பால் செசான் நிராகரித்தார். நவீன ஓவியமானது, நித்திய மதிப்புமிக்கதாக, புதிய அழகியல் அம்சங்களை உட்கொண்டிருக்க வேண்டுமென்று அவர் கருதினார். இம்ப்ரஷனிஸம் என்பது இன்னும் திட்பமானதாகவும், மிகத் துல்லியமான வெளியீட்டு அம்சங்களைக் கொண்டதாகவும் அமைய வேண்டுமென விரும்பினார். பிரயாசைப்பட்டார்; ஓவியத்திற்கான புதிய விதிகளை வகுத்துக்கொண்டார்; கண்டடைந்தார்; ஒரு காட்சியைக் கண் உள்வாங்கும் எல்லாப் பின்னங்களோடும் நுட்பங்களோடும் வடிவமைப்புகளோடும், பிரத்தியேகப் பார்வையோடும் ஓவிய வெளியில் உருவாக்க தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டார். அவர் தன்னுடைய படைப்புப் பொருளைப் பகுத்துப் பார்க்கவும் தொட்டு உணரவும் விரும்பினார். இந்தப் பயணத்தில் ‘பார்த்தல்’ என்பதைத் ‘தொடுதல்’ என்னும் ஓர் அழகிய மாயமாகக் கண்டடைந்தார்.

ஓவியப் பயணத்தின் தொடக்கத்தில் இம்ப்ரஷனிஸ பாணியில் படைப்பாக்கங்களில் ஈடுபட்ட செசான், அதன் போதாமையை உணர்ந்து, அதிலிருந்து விலகி, காட்சியை நுட்பமான பகுப்புகளாகப் பிரித்தறிந்து சித்திரிக்கும் ஒரு புதிய பாணிக்குத் தன்னைத் தீவிரமாக உட்படுத்தினார். பாரம்பரியக் கலை மரபில் உருவான மேதைகளின் படைப்புகள் பற்றிய அவருடைய ஆழ்ந்த அறிவு, வடிவம் மற்றும் கட்டமைப்பின் அழகியலை இம்ப்ரஷனிஸம் இழந்திருப்பதை அவருக்கு உணர்த்தியது. அதை மீண்டும் கைப்பற்றும் முனைப்பு கொண்டார். இதன் காரணமாக, 19-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் உருவான இம்ப்ரஷனிஸ இயக்கத்துக்கும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான புதிய சிந்தனைகளுக்கும் தேடல்களுக்கும் புதிய ஓவிய பாணிகளுக்கும் ஒரு பிணைப்பாகவும் கலை ஆளுமையாகவும் திகழ்ந்தார். அவரைத் தொடர்ந்து உருவான ஓவிய ஆளுமைகளான மத்தீஸ் மற்றும் பிக்காஸோ போன்றோர், ‘எங்கள் எல்லோருக்குமே அவர் தந்தை’ என்றனர்.

பால் செசான், இயற்கையை நேருக்கு நேராக அணுகியபோது – இம்ப்ரஷனிஸவாதிகள் எவ்விதக் குறிக்கோளுமின்றி அணுகியதற்கு மாறாக – இயற்கையில் காணப்படும் கோடுகள், தளங்கள் மற்றும் வண்ணங்களை மிகவும் நுட்பமாகக் கண்டறிந்து, அவற்றை ஓவிய வெளியில் வெகு தீர்க்கமாகவும் அறிவார்த்தமாகவும் வடிவமைப்பதில் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டார். கோடுகள், தளங்கள் மற்றும் வண்ணங்களுக்கிடையேயான உறவுகளையும் அவற்றின் தனித்துவப் பண்புகளையும் கண்டறிந்தார். வண்ணங்களும் அவற்றின் பல்வேறு சாயைகளும் காட்சியைப் புலப்படுத்துவதில் வெவ்வேறு மதிப்புகள் கொண்டிருப்பதை அறிந்தார். இதமான வண்ணங்களைப் பின்னோக்கி நகர்த்தியும், அழுத்தமான வண்ணங்களை முன்னோக்கி நகர்த்தியும் சூழலின் மாயத்தை வசப்படுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick