புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ன்றைய நிலையில் பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையைப் பற்றி அறியாதவர்கள் இந்தத் தேசத்தில் இல்லை. நவம்பர் 8-ஆம் தேதி இரவு முதலே இந்தியர்கள் அனைவரும் இந்த நடவடிக்கையைப் பற்றி மெள்ள மெள்ளத் தகவல்களை அறிந்துகொண்டு இன்றைய நிலையில் ஆய்வாளர்களாகவே உருமாற்றம் அடைந்திருக்கிறார்கள். முதன்முறையாக ஒரு மக்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த அடுக்குகளையும் ஒரே நேரத்தில் ஒரு விஷயம் பாதித்திருக்கிறது என்றால், அது இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான்.

ஒரு தேசத்தில் புழக்கத்தில் இருந்து 86.4% ரொக்கப் பணம் நான்கு மணி நேர அவகாசத்தில் இனி வர்த்தக நடவடிக்கைகளுக்குச் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன் பின் தொடர்ந்து கடந்த 50 தினங்களில் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டபடி இருக்கிறது. இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து வாசித்து அறிய முற்பட்டதிலும் புயல்போல் திட்டமிட்டுக் கிளப்பிவிடப்பட்ட வதந்திகளையும் எதிர்கொண்டதில்தான் ஒரு தேசமே ஆய்வாளர்களாக உருமாறியிருக்கிறது.

முதலில் இந்தக் கடும் நடவடிக்கையை, கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்கும், தீவிரவாதத்துக்கான நிதி மூலதனங்களை முடக்குவதற்கும், கறுப்புப் பணத்தைத் துல்லியமாகத் தாக்குவதற்கும் என பிரதமர் அறிவித்தார். இந்தியாவில் புழங்கும் கள்ள நோட்டுகள் என்பது வெறும் ரூ.400 கோடிதானே, அதற்கு ஏன் ரூ.17 லட்சத்து 60 ஆயிரம் கோடியை செல்லாக்காசாக அறிவிக்க வேண்டும். உலகம் முழுவதுமே தீவிரவாதிகள் ரொக்கப் பணத்தைத் தங்கள் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது இல்லை என்றும் அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் டிரான்சாக்‌ஷனுக்கு மாறிவிட்டார்கள் என்பதை, ஏற்கனவே உலகம் முழுமையும் விவாதித்திருக்கிறார்கள். இதனை இந்திய நாடாளுமன்றமும் விவாதித்திருக்கிறது. கறுப்புப் பணம் என்பது புழக்கத்தில் இருக்கும் ரொக்கப் பணத்தில் வெறும் 6% தானே என்பதாக, ஒவ்வொரு வாதத்துக்கும் ஆவணங்களுடன் எதிர்வாதங்கள் தொடங்க, அன்றில் இருந்து தினசரி ஒரு விளக்கம் கொடுத்து விவாதத்தில் ஈடுபடாமல் மொத்தத் தேசத்தையும் திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இன்றையத் தேதியில் இந்தத் திட்டத்தை கொண்டுவந்தவர்களுக்கே இதை எதற்குக் கொண்டுவந்தோம் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, பொருளாதார அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் பொதுமக்களுக்கு என்றுமே இருவேறு கருத்துகள் இருந்தது இல்லை. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இடதுசாரிகளைத் தவிர்த்து முதலாளித்துவக் கட்சிகள் அனைத்துக்குமே அதில் தீவிரமாக ஈடுபடுவதில் கொஞ்சம் சுணக்கம் இருக்கிறது என்பதை வரலாற்றை கொஞ்சம் உற்றுநோக்கினால் எளிதாக புரியும்.

டி-மானிட்டைசேஷன் என்று அழைக்கப்படும் இந்த பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை ஏற்கனவே 1946 மற்றும் 1978 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு, அதனால் பெரிய பலன் ஒன்றும் கிட்டவில்லை என்பதை கடந்த மத்தியஅரசு அமைத்த பல குழுக்கள் தெளிவுபடுத்துகின்றன. 1946 மற்றும் 1978 ஆகிய காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, இது ஒரு பத்திரிகை செய்தி மட்டுமே. அன்றையத் தேதிகளில் ஒழிக்கப்பட்ட பெரிய மதிப்பிலான ரூபாய் தாள்களை சாமானியர்கள் பார்த்ததுகூட கிடையாது. ஆனால், இன்றையத் தேதியில் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1,000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் தினக்கூலிகள் வாங்கும் சம்பளப் பணம் என்கிற அளவில் இந்தச் சமூகத்தில் அசைவியக்கத்தைத் தீர்மானிக்கும் ஒரு கருவியாக அது விளங்கிவருகிறது.

இந்தியாவின் 86% பரிவர்த்தனைகள் ரொக்கத்தில்தான் நடந்து வந்தது. இந்தியாவில் 80% வேலைவாய்ப்புகளை வழங்கிய முறைசாராத் தொழில்கள் அனைத்தும் ரொக்கத்தில்தான் நடத்தப்படுகிறது என்பதை அரசு நன்கு அறியும். இந்திய நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்புகள், விவசாயிகளின் அன்றாடச் செலவுகள், சிறு வியாபாரிகள், குறு தொழில்கள் என அனைத்துமே ரொக்கம்தான். இப்படி தேசத்தின் 86% பரிவர்த்தனைகளை முடக்கிவிட்டால், அதனால் என்ன பலன் கிடைக்கக்கூடும் என்பது பெரும் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.

உலகின் இரண்டாம் பெரும் ஜனத்தொகை உள்ள ஒரு தேசம், வங்கிகள் நோக்கி அலறியபடி ஓடியது. ஆனால் இத்தனைப் பெரும் கூட்டத்தைச் சமாளிக்கும் அளவுக்கு நம்மிடம் வங்கிகளும் இல்லை, வங்கி ஊழியர்களும் இல்லை. இதில் விவசாய நடவடிக்கைகளின் முதுகெலும்பாகத் திகழ்ந்த கூட்டுறவு வங்கிகள் இந்த மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் தாள்களை பெறக்கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்தது. 100 கோடி ஜனங்களும் இரண்டு லட்சம் வங்கி கிளைகள் நோக்கிச் சென்று தங்களின் பணத்தை கணக்கில் வரவு வைக்கவும், மாற்றவும் ஒரு மாதம் முழுவதும் காத்துக்கிடந்தார்கள். வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, தங்களின் அன்றாடச் சேமிப்புகள் நிர்மூலமாகிவிடுமே என்கிற பதற்றத்தில், எதையும் செய்ய முடியாமல் மொத்த சமூகமே ஒருவித பதற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, இதுவரை 20 வங்கி ஊழியர்கள் உட்பட, 150 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

பெரிய மதிப்பிலான ரூபாய் தாள்களில்தான் கறுப்புப் பணம் பதுக்கப்படுகிறது. அதனால்தான் 1,000 ரூபாய் தாளை ஒழித்தோம் என்றவர்கள் ஒழித்த கையோடு 2,000 ரூபாயை வெளியிட்டார்கள். சாமானியர்கள் பணம் பெற கடும் உச்சவரம்புகளை அரசு அறிவித்தது. சாமானியர்கள் 4,000 ரூபாய் பெற வங்கிகளின் முன் எல்லாவித சர்க்கஸ் வித்தைகளிலும் ஈடுபட்டார்கள். ஆனால், மறுபுறம் ஒவ்வொரு கறுப்புப் பண முதலையும் சர்வசாதாரணமாக இந்தியா முழுமையிலும் தங்களின் பழைய பணத்தை கோடிக்கோடியாக புதிய 2,000 ரூபாய் தாள்களில்  மாற்றினார்கள். தனியார் வங்கிகள் இதில் முனைப்புடன் செயல்பட்டன. இந்தப் பண மாற்றம் ஒரு பெரும் தொழிலாகவே செழித்தது. இதன் வாயிலாக ஒரு ‘புதிய வேலைவாய்ப்பு’ துரிதமாகவே உருவானது. திரும்பிய பக்கமெல்லாம் தரகர்கள் விதவிதமான கமிஷன் தொகைகளுடன் பேரத்தில் ஈடுபட்டார்கள்.

தங்களின் சொந்தச் சேமிப்பை, வாழ்நாள் உழைப்பை வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் சாமானியர்கள் தவித்தார்கள். 50,000 திருமணங்கள் நின்றுபோயின.குடும்பங்கள் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கின. ஆனால், இதே காலகட்டத்தில்தான் 650 கோடி ரூபாய் செலவில் பா.ஜ.க-வின் முக்கியஸ்தரான ஜனார்தன ரெட்டி மகள் திருமணம், அருண் ஜெட்லி மகள் திருமணம், நிதின் கட்கரி மகள் திருமணம் என கோடிகள் புழங்கும் திருமணங்கள் நடந்தேறின. மருத்துவச் செலவுகளுக்கு, அவசரமான அறுவை சிகிச்சைகளுக்கு என பணம் கிடைக்காமல் சாமானியர்கள் வங்கிகள் முன் மண்டியிட்டுக் கிடந்தார்கள்.

இந்தியா முழுவதிலும் தொழில்கள் முடங்கின; பொருளாதாரப் புள்ளி விவரங்கள் மயங்கி விழுந்தன; வேலைவாய்ப்புக் குறியீடுகள் பாதாளம் நோக்கிச் சென்றன; ஏற்றுமதி/இறக்குமதி பாதிக்கப்பட்டது; விவசாயிகள், விதைகளையும் உரங்களையும் வாங்க முடியாமல் தவித்தார்கள்; விவசாயிகள், தங்களின் அறுவடையை விற்க முடியாமல் தவித்தார்கள். ஒரு முட்டுச்சந்தில் தேசமே திணறியது, புலம்பியது. கண்ணீர் மல்கக் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றது. ஆனால், இதுபற்றி எந்த வகையான ஒரு ஜனநாயகப்பூர்வமான விவாதத்தையும் நிகழ்த்த பா.ஜ.க கட்சியினர் அனுமதிக்கவில்லை. பொருளாதாரத்தை அதன் மொழியில் பேச மறுத்தவர்கள், ஆவணங்கள் - புள்ளிவிவரங்களுக்குப் பதில் சொல்ல மறுத்தவர்கள், தொடர்ந்து மதத்தின் மொழியில் பேசினார்கள். மகா யக்னம், தர்மம் - அதர்மம், தேசப்பற்றாளர் - தேசவிரோதி, சிலுவைப்போர் என்று அனைத்தையும் இருமுனைப் போராக மாற்றினார்கள். பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து விவாதங்களில் ஈடுபடாமல் தனது கைபேசி செயலி மூலம் தனக்குத்தானே வாக்கெடுப்புகள் நடத்தி மகிழ்ந்தார். அரசு செலவில் தினசரி முழுப் பக்க விளம்பரங்கள் கொடுத்தார். தங்களின் தலைவனுக்கு எதிராகப் பேசுபவர்கள் அனைவரும் தேசத்துரோகிகளே என்ற கோஷங்கள் காதைக் கிழித்தன. இந்த 50 தினங்கள் ஜனநாயக ஆட்சியின் சுவடுகளே இல்லாமல், ஒரு மன்னராட்சியை, சர்வாதிகார ஆட்சியை இந்த நாட்கள் நினைவுபடுத்தின.

ரத்தன் டாடா, சந்திரபாபு நாயுடு முதல் நிதிஷ் குமார் வரை முதலில் இதற்கு ஆதரவு தெரிவித்த பலரும் மெள்ள மெள்ள இதன் சங்கடங்கள் பூதாகரமானவை என்பதை அறிந்து வருத்தங்களைப் பதிவுசெய்யத் தொடங்கினார்கள். மாநில அரசுகளின் செயல்பாடுகள் முடங்கின. அரசுகளின் செயல்பாடுகளே முடங்கும்போது சாமானியர்களின் கதி என்ன என்பதை நீங்கள்தான் கற்பனைசெய்து பார்க்க வேண்டும்.

இரண்டரை லட்சம் ரூபாய் வரை வங்கிக் கணக்குகளில் போடலாம். அதுவும், உங்கள் பணமாகவே அது இருக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் அது உங்கள் பணம்தான் என்பதை விசாரணைக்கு உட்படுத்துவோம். அதை நிரூபிக்கும் பொறுப்பு உங்களுடையது என்கிற எச்சரிக்கைகளின் ஊடே நகர்ந்தன நாட்கள். உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்ட நேரம் இந்தியப் பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தது. இந்தியர்களின் சேமிப்புப் பழக்கம் குறித்து வெகுவாகப் பாராட்டிப் பேசப்பட்டது. இந்தியக் குடும்பப் பெண்களின் சேமிப்புகள் ரொக்கமாக உள்ளது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. வங்கிக் கலாசாரத்துக்கு இன்னும் பழக்கப்படாத மக்கள், தங்களின் அவசரத் தேவைக்கு யாரிடமும் கையேந்த விரும்பாத சுயமரியாதை மிக்கவர்களாக தங்களின் சேமிப்பை ரொக்கமாகவே வைத்திருப்பதைப் பாதுகாப்பு உணர்வு அளிக்கும் ஒரு செயலாகக் கருதினார்கள். நம் கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அளவுக்கு தேசிய வங்கிகளால் நெருங்கிச் செல்ல முடியவில்லை. தேசிய வங்கிகள் தங்களின் செயல்பாட்டு மொழியை ஹிந்தி/ஆங்கிலமாக வைத்திருப்பதும் அதன் அதிகாரத் தோரணையான செயல்பாடுகளால் சாமானியர்களை நெருங்க முடியவில்லை. மக்களிடம் இந்த நெருக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது வங்கிகளின் தோல்விதானே ஒழிய, இதில் கிராமப்புற மக்களைக் குறைகூற இயலாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick