தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி | Distinguished fiction writer C.S.Lakshmi - Ambai - Tamil literature - Vikatan Thadam | விகடன் தடம்

தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : யோகி

ங்கைகொண்டசோழபுரத்தை நாங்கள் அடைந்தபோது, மாலைப் பொழுது. வானம் லேசாக இருட்டிக்கொண்டிருந்தது. சற்று நேரத்திலேயே பூப்போல மழைத்துளிகள் உதிரத் தொடங்கின. பதினொன்றாம் நூற்றாண்டில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்ட சோழீசுவரர் ஆலயம். மழைத்தூறல் விழுந்த ஈரப்புல்வெளியும் கண் முன்னால் உயர்ந்திருக்கும் சோழர் காலக் கட்டடக் கலையும் அந்தச் சூழலுக்கு ஒருவித செவ்வியல் தன்மையை வழங்கியிருந்தது. நீல வண்ணப் பருத்திச் சேலை அணிந்திருந்த அம்பை, சுண்ணாம்புக் கல்லாலான பெரிய நந்தியை ஒரு குழந்தையைப்போல ரசித்துக் கொண்டிருந்தார். அவரது ஒவ்வொரு வியப்பையும் எனது கணவரும் மகனும் தங்கள் அலைபேசியால் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

அந்தப் புகைப்படங்களை அவ்வப்போது வாங்கிப் பார்த்தவர், ‘இதை எனது போனுக்கும் ஷேர்பண்ணு கார்க்கி’ என்றார் ஆர்வத்துடன். ஸ்பேரோ விருதினைப் பெற கார்க்கி என்னுடன் மும்பை வந்திருந்தான். அப்போதிலிருந்தே அம்பையின் மீது மரியாதை கலந்த அன்பு அவனுக்கு. இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளுமை. அந்த எந்தச் சுமைகளையும் ஏற்றிவைத்துக்கொள்ளாமல் ஒரு கிராமத்துச் சிறுமிபோல நூற்றாண்டுப் பழமையான ஆலயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார் அம்பை.

ஒரு மழைக்காலத்தில் நூலகத்திலிருந்து எங்கள் மாமா எடுத்துவந்த சிறுகதைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்தேன். (வயதுக்கு வந்தால், பெண்பிள்ளைகள் தங்களது அத்தனை சுதந்திரத்தையும் கல்வியையும் இழந்திருந்த காலம் அது.) கதையில் சிறுமி ஒருத்தி வயதுக்கு வந்துவிடுகிறாள். அன்று அவள் அம்மா வீட்டில் இ்ல்லை. அவளை தேவதைபோலக் கொண்டாடும் அம்மா. இயற்கையாகப் பருவம் உடலில் ஏற்படுத்தும் மாற்றத்தை ஒட்டி சமூகமும் உறவும் அவளுக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள் அவளைக் கலவரமடையச் செய்கிறது. தன் தாய் எல்லாவற்றையும் சரியாக்கிவிடுவாள் என்று நம்புகிறாள். தனக்கு நடனம் சொல்லிக்கொடுப்பதாகச் சொல்லியிருந்த தாய் அவள். அம்மாவின் அரவணைப்பில்தான் இன்னும் வசதியாக, பாதுகாப்பாக உணர முடியுமென அந்தச் சிறுமி கருதுகிறாள். ஆனால், அந்தத் தாய் வந்ததும் ‘இந்த எழவுக்கு இப்ப என்ன அவசரம்’ என்கிறாள். ‘அம்மா ஒரு கொலைசெய்தாள்’ எனும் அந்தக் கதை அதுவரை நான் படித்திருந்த கதைகளிலிருந்து விலகி இருந்தது. இவர் நமக்காக எழுத வந்த தேவதை என எண்ணினேன். ஒரு கிராமத்துச் சிறுமியான எனக்கு பெண்ணியம் போன்ற தத்துவங்களெல்லாம் அப்போது தெரியாது.ஆனால், பண்பாடு என்கிற பேரில், நடைமுறை எனும் பேரில், யதார்த்தம் எனும் பேரில், நல்லபெண் எனும் பேரில், இந்த சமூகம் பெண்ணின் சிந்தனையில் பூட்டியிருந்த தளைகளை உணர முடிந்தது.

சுயமரியாதையும் கட்டற்ற விடுதலை உணர்ச்சியும் கொண்டிருந்த எனக்கு, அம்பை ஏதோ நெருக்கமான உறவு போலத் தோன்றினார். அவரை அவரது கதைகள் வழியாகப் பின்தொடர்ந்தேன். இப்படி என் சிறுவயது நாளில் நான் படித்து வியந்த கதைசொல்லியோடு, சமகாலப் பெண்களுக்கு சுதந்திரத்தின் மீது, தற்சார்பு உணர்வின் மீது, சுயமரியாதையின் மீது வேட்கை ஏற்படுத்திய எனது பண்பாட்டு ஆசிரியையோடு, பின்நாட்களில் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைக்குமென நான் எண்ணியது இல்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, அம்பை முதன்முதலாக விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது நான் எழுத ஆரம்பிக்கவில்லை. எனது கணவரும் கவிஞருமான கரிகாலனைப் பார்க்கவே அந்த வருகை. அவருக்குக் கதா விருதைப் பரிந்துரை செய்ததும் அம்பைதான். அப்போது ஒரு வாசகியாக அவரது கதைகள் எனக்கு ஏற்படுத்தியிருந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். பிறகு குழந்தைகள், அவர்களது கல்வி எனப் பேச்சு நீண்டது. அப்போது இலக்கிய உலகம் குறித்துப் பேசவும் என்னிடம் அதிக விஷயங்கள் இல்லை. அவர் வந்து சென்ற சில தினங்களில் மீண்டும் அவரது கதைகளைப் படிக்கத் தொடங்கினேன். அவர் வந்து சென்றதன் தாக்கமோ என்னவோ, ஏதாவது எழுதலாம்போலத் தோன்றியது. ஒரு சில நாட்கள் கழித்து எழுதத் தொடங்கியிருந்தேன். எல்லாம் அற்புதம்போலவே நிகழ்ந்தன. பிறகு எனக்கு அவ்வப்போது அம்பையோடு நேரிலோ, தொலைபேசியிலோ பேச சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு முறை அவரிடம் பேசும்போதும் எனது சக்தி அதிகரித்தது. தமிழில் எழுத வரும் இளைஞர்களை பொறுப்போடு தட்டிக்கொடுத்து வளர்க்கும் பண்பு அவரிடம் இருந்தது. எனது நாவல்கள் குறித்து விலாவாரியாகப் பேசி அதன் அவசியங்களை எடுத்துக்கூறி எனது சோர்வைப் போக்கினார்.தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கம் மிகுந்த சொற்களை அளித்தார். அ.மங்கை, வ.கீதா என எனது நட்பு வட்டத்தை விரிவுபடுத்தினார். ஸ்பேரோ சார்பாக விருது கொடுக்க அந்த நிறுவனம் முடிவெடுத்தபோது அவர் என்னைத் தெரிவு செய்து எனது இசைவைக் கேட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick