ஜெயலலிதா: இனி எதைப் பேச வேண்டும் நாம்? - ஜெயராணி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படம்: ஸ்டில்ஸ் ரவி

ரணம் ஒருவரின் எல்லா தவறுகளையும் தடயம் இல்லாமல் அழித்து, எல்லா குற்றங்களில் இருந்தும் விடுவித்து, புனிதப்படுத்திவிட முடியுமா? முடியும். ஜெயலலிதாவுக்கு அவ்வாறே முடிந்திருக்கிறது. நேற்று வரை எது சர்வாதிகாரம் எனக் கண்டிக்கப்பட்டதோ, அது இன்று தலைமைப்பண்பு; எது ஆணவமாக அறியப்பட்டதோ, அது கம்பீரம்; திமிர் என விமர்சிக்கப்பட்டது எல்லாமே இன்று திறமையாகப் போற்றப்படுகிறது; செயலின்மை எனக் கருதப்பட்டவை, செயற்கரியச் சாதனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. தர்மபுரியில் மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டபோதும்,  தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து மக்கள் உயிரைப் பறித்தபோதும், சிறையில் இருந்த நாட்களில் ரத்தத்தின் ரத்தங்கள் தமிழகத்தை வன்முறை பூமியாக்கியபோதும், செம்பரம்பாக்கம் ஏரி நீரைத் திறந்துவிட்டு, ‘யார் செத்தால் எனக்கென்ன’ என்று அமைதி காத்தபோதும், ‘இவரெல்லாம் ஒரு பெண்ணா?’ எனத் தூற்றியவர்கள், இன்று அனைத்தையும் மன்னித்து, ‘இரும்புப் பெண்மணி’ என்ற பட்டத்தோடு ஜெயலலிதாவை வழியனுப்பி வைத்திருக்கின்றனர். சுமார் 40 ஆண்டுகால  அரசியல் வாழ்வில்,  குடும்ப உறுப்பினரின் இழப்பைப் போன்ற நெருக்கத்தை மக்கள் உணர்ந்திருக்கலாம். அது மட்டுமல்ல, எப்போதும் தன்னை மிடுக்காகக் காட்டிக்கொள்ளும் ஒருவர், நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடப்பது ஒருவிதக் கழிவிரக்கத்தைக் கோரியிருக்கலாம். அதெல்லாம் மனித இயல்புதான்.  அதனாலேயே ஜெயலலிதாவின் அத்தனை தவறுகளையும் எல்லோருமே மன்னித்துவிட்டனர். மன்னிப்பு மாபெரும் நற்பண்புதான், மறுப்பதற்கு இல்லை. அதுவும் மரணித்துவிட்ட ஒரு (சர்வாதிகாரத்) தலைவருக்கு மன்னிப்பைத் தவிர வழங்குவதற்கு (பாதிக்கப்பட்ட) மக்களுக்கு வேறு வழி இல்லை. இப்படியான மன்னிப்பு அனைவருக்கும் கிடைக்கப் பெறுவது இல்லை. ஜெயலலிதாவுக்கு அளப்பரியதாக அது வழங்கப்பட்டுள்ளது.  

நல்லது. ஆனால், எது அச்சுறுத்துகிறது என்றால், இந்தச் சமூகத்தின் மறதி. எட்டுத் திக்கிலும் இருந்து ஓங்கி ஒலித்த புகழஞ்சலிகள், ஜெயலலிதாவை மன்னிக்க மட்டுமில்லை, அவரின் அனைத்து எதிர்மறைச் செயல்பாடுகளையும் மறந்துவிட்டதைச் சுட்டிக் காட்டியது. ரத்தத்தின் ரத்தங்களை விட்டுத் தள்ளுங்கள்... பொதுச் சமூகம், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், ஊடகத் துறை, திரைத் துறை, எழுத்தாளர்கள், சமூகப் போராளிகள் என எல்லோருமே ஜெயலலிதாவிடம் ஏதோவொரு நல்லதைத் தேடியதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது; அவரது ஏதோவொரு குணத்தோடு தம்மை இணைத்துப் பார்க்க எல்லோருமே முயன்றனர். அரசியல் தலைவர்கள், ‘அவர் போராடும் குணம் கொண்டவர்’ என்றனர்; பெண்கள், அவரை ‘ஆணாதிக்கத்தைத் தகர்த்தவர்’ என்றனர்; ஊடகங்கள் பலவாறு அவரைப் போற்றிப் பாடின; கொள்கை ரீதியாக வேறுபட்டவர்கள்கூட அவரது புகைப்படத்தை முகநூலில் ‘ப்ரொஃபைல் பிக்சர்’ வைத்தனர். நல்லது கெட்டதை சீர்தூக்கிப் பார்க்கவியலாத  உணர்ச்சிவசப்பட்ட சமூகமே, கும்பல் மனப்பான்மைக்கு ஆட்படுகிறது.  ஒட்டுமொத்தத் தமிழகமே ஜெயலலிதாவிடம் இல்லாத மனிதப் பண்புகள் பலவற்றைக் கூறி அவரைப் புனிதப்படுத்துவதைப் பார்க்கும்போது, பேராபத்துமிக்க மறதி இங்கே கட்டமைக்கப்படுவதை உணர முடிந்தது. மக்களின் மறதி ஒரு சமூக நோய். தமிழகம் அந்த நோயால் வீழ்த்தப்பட்டுக்கிடக்கிறது என்பதை ஜெயலலிதாவுக்கு கிடைத்த புகழஞ்சலிகள் நிரூபிக்கின்றன.

ஜெயலலிதா இறந்த பிறகான இந்த ஒரு மாத காலத்தில், அவரைப் பற்றி ஆகச் சிறப்பானதொரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியினரும் போற்றிப் புகழ்பாடும் இப்படியொரு திருப்பத்தை ஜெயலலிதாவே கற்பனை செய்திருப்பாரா தெரியவில்லை! 

கோடிக்கணக்கான தமிழர்களின் ஒற்றைத் தலைவியாக முப்பதாண்டு காலம் அரியணையில் வீற்றிருந்தவர்தான். அந்த அரியணையில் ஏறி அமர ஒரு பெண்ணாக நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்தான். மும்முறை அவரது பதவி முடக்கப்பட்டதில் ஆறு முறை முதல்வரானார். தமிழக மக்கள் அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்தனர் அல்லது அதற்கான ‘சூழலை’ அவர் உருவாக்கிக்கொண்டார். இறுதி வரையில், இறுதி ஊர்வலம் வரையில் ஜெயலலிதாவை அந்த அரியணையில் இருந்து இறக்காமலேயே  வழியனுப்பிவைத்தது தமிழகம். ஆனால், அந்த நல்லுணர்வுக்குத் தகுதியான தலைவராக ஜெயலலிதா இருந்தாரா என்ற விஷயத்தை நாம் நேர்மையாக அணுக வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick