அதுவாகவே வருகிறது - அ.முத்துலிங்கம்

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ரு வெள்ளைக்காரர் கும்பகோணம் சந்நிதித் தெருவில் அலைந்து திரிந்தார். அவருக்கு வயது 40 இருக்கும். வருடம் 1988. அரைக்கை சட்டை அணிந்திருந்தார். தலை கலைந்திருந்தது. முகத்தில் வியர்வை ஓடியது.
‘யாரைத் தேடுகிறீர்கள்?’

‘நான் அமெரிக்காவிலிருந்து வருகிறேன். என் பெயர் ரொபர்ட் கானிகல். சுந்தரேசன் என்பவரைச் சந்திக்கவேண்டும்.’

‘அப்படியா? சுந்தரேசன் என்னுடைய தகப்பனார். அவர் இறந்துவிட்டார். நான் அவருடைய மகன்; பெயர் சம்பந்தம். நான் அமெரிக்காவில் மருத்துவராக இருக்கிறேன். விடுமுறையில் இருக்கிறேன். என்னால் உதவ முடியுமா?’

‘நிச்சயமாக. கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜனைப் பற்றி புத்தகம் எழுதுகிறேன். அதற்கான விவரங்களைத் திரட்ட வந்திருக்கிறேன்.’

அப்படித்தான் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. மருத்துவர் சம்பந்தம் வேறு யாரும் இல்லை. சமீபத்தில் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை கொடுத்து ஹார்வார்டு தமிழ் இருக்கையை ஆரம்பித்துவைத்த இரண்டு மருத்துவர்களில் ஒருவர். ராமானுஜனைப் பற்றிய புத்தகம் 1991-ம் ஆண்டில் வெளிவந்தபோது, அந்தப் புத்தகத்தில் மருத்துவர் சம்பந்தத்துக்கு நன்றி கூறப்பட்டிருக்கிறது.

ரொபர்ட் கேட்ட உதவிகள் ஆச்சர்யப்பட வைத்தன. ராமானுஜன் படித்த பள்ளிக்கூடத்துக்குப் போய் அங்கே சில நிமிடங்கள் உட்கார்ந்தார். ராமானுஜன் வழக்கமாகப் போகும் கோயிலுக்குச் சென்று அங்கும் சில மணி நேரம் அமர்ந்திருந்தார். அவர் நடந்திருக்கக்கூடிய வீதிகளில் நடந்தார். பஸ்ஸில் பயணித்தார். ரயிலில் போனார். காற்றை மணந்தார். மரங்களைப் பார்த்தார். பறவைகளையும் மிருகங்களையும் உன்னிப்பாகக் கவனித்தார். அது தாங்காமல் ஒரு மாடு அவர் பின்னால் வந்து அவரை முட்டியது. எந்த ஒரு சின்ன விஷயத்தையும் தவறவிடக் கூடாது என்ற கவனத்துடன் குறிப்புப் புத்தகத்தில் எழுதிவைத்துக்கொண்டார்.

இறுதியில் ஓர் ஆசை இருந்தது. தயக்கத்துடன் கேட்டார். ராமானுஜன்போல தரையில் சப்பணம் கட்டி அமர்ந்து வாழை இலையில் கையினால் பிசைந்து உண்ண வேண்டும். அவரை உட்கார்த்தி சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என்று பரிமாறினார்கள். ரசம் ஊற்றியபோது, அது வாசலை நோக்கி ஓடியது. மறித்து அள்ளிக் குடித்தார். ராமானுஜத்துக்கு ரசத்தில் அலாதிப் பிரியம். ரொபர்ட்டும் ரசித்துச் சாப்பிட்டார்.

ஐந்து வாரங்கள் இந்தியாவில் சுற்றி அலைந்தார் ரொபர்ட். அவர் படித்த கல்லூரி, வாழ்ந்த வீடுகள், வேலை பார்த்த இடங்கள் எனச் சகலத்தையும் பார்த்தார். நூற்றுக்கணக்கானவர்களைச் சந்தித்துப் பேசி, தகவல்கள் சேகரித்தார். அவர் எழுதிய புத்தகம் `The Man Who Knew Infinity’, 1991-ம் ஆண்டில் வெளிவந்தது. அதில் ஓர் இடத்தில் இப்படி எழுதியிருப்பார்... ‘கொடுமுடியில் ஓர் அறையில் பல்லியுடன் வாசம் செய்தேன்.’

ராமானுஜனுடைய தாயார் பெயர் கோமளத்தம்மாள். 22 டிசம்பர், 1887-ம் ஆண்டில் ராமானுஜன் பிறந்தார். மூன்று வயது மட்டும் ராமானுஜன் பேசவே இல்லை. சாரங்கபாணி சந்நிதித் தெருவில் அவர்கள் வீடு இருந்தது. இரண்டு வயதில் அவருக்கு அம்மைபோட, வேப்பிலைப் படுக்கையில் வைத்து இரவு பகலாக வைத்தியம் பார்த்து கோமளத்தம்மாள் அவரைக் காப்பாற்றினார். பள்ளிக்கூடத்தில் படிக்க ஆரம்பித்ததுமே அவருடைய கணிதத் திறமை வெளிப்படத் தொடங்கியது. கணிதத்தில் ஒவ்வொரு தடவையும் அவருக்குத்தான் ஆகக்கூடிய மதிப்பெண். ஒருமுறை வகுப்புப் பையன் ஒருவன் ஒரு மார்க்கில் அவரை முந்திவிட்டான். ராமானுஜன் பின்னர் அவனுடன் பேசவே இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick