ஐம்பாலை - நக்கீரன் | Tamil Poetry - Nakkeeran - Vikatan Thadam | விகடன் தடம்

ஐம்பாலை - நக்கீரன்

ஓவியம் : ரமணன்

குறிஞ்சிப் பாலை

நாராய் நாராய் செங்கால் நாராய்
தென்திசை வலசை முடித்து வடதிசை திரும்புகையில்
வழியில் பளபளக்கும் கருங்கல் கட்டடம் அனைத்துக்கும்
மலைக் குறவர்கள் சார்பாக ஒரு முத்தமிட்டுச் செல்
அவை எம் குறிஞ்சி

முல்லைப் பாலை

ஆயரே நீர் முல்லை நிலம் கொண்டு வா
நான் சீமைப் பசுக்கள் கொணர்கிறேன்
கலந்து மேய்ந்ததும் கொம்பு உனக்கு மடி எனக்கு
இந்தாரும் உடைந்த உம் மோர்ப் பானைகளுக்கு ஈடாக
பால் பாக்கெட்டுகள்

மருதப் பாலை

வெள்ளாம்பல் பூத்திருந்த வாவிதான்
ஒரத்துப்பாளையம் கலந்ததில் அரக்காம்பல் பூத்த பழனமாயிற்று
உழவனின் நீருக்குள் உன் நீர் கழிக்கும் ஊரனே
உன் விரைப்புட்டிகளைக் குனிந்து பார்
ஒன்று கோக் மற்றொன்று பெப்சி

நெய்தல் பாலை

உமணத்தி தன் சுருக்குப் பைக்குள்
பரதவரின் கடலை நிரப்பி வந்தாள்
திறந்து பார்க்கையில் உப்பும் இல்லை மீன்களும் இல்லை
எல்லாமே வாஸ்கோடகாமாவின் கப்பல்கள்

பாலைப் பாலை

ஆறலைக் கள்வர்களும் விரட்டப்பட்டார்கள்
நியூட்ரினோ கெயில் மீத்தேன் தாதுமணல்
நானிலமெங்கும் பெருச்சாளிகளின் குடைச்சல்கள்
சிலப்பதிகாரத்தின் அடுத்த பதிப்பை
மறக்காமல் திருத்திடு இளங்கோ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick