ஊடலின் இரவு - எஸ். பிருந்தா இளங்கோவன்

ரடங்கி
வெகுநேரமாகிறது
சுவர்க்கோழிகள் எழுப்புமோசை
சாமத்துப் பேய்களின்
மெல்லிய சலங்கையொலி போல் இசைக்கிறது
தெருவில் நாய்கள்
மார்கழிக் குளிரில்
குரலோய்ந்து முடங்கிவிட்டன
எவனோ ஒரு திருடன்
எங்கோ ஒரு வீட்டின்
ஓட்டைப் பிரித்துக்கொண்டிருக்கக்கூடும்
எண்ணிறந்த
குருட்டுச் சிந்தனைகளுடன்
புரண்டு புரண்டு படுக்கிறேன்
ஜன்னலினூடே தெரியும்
ஆகாயச் சதுரத்தின் நட்சத்திரங்களை
இடமிருந்து வலமாகவும்
வலமிருந்து இடமாகவும்
எண்ணிச் சோர்ந்துவிட்டேன்
தூங்குவது போல்
பாவனை செய்துகொண்டிருக்கிறாய் நீ
ஈரம் உலர்ந்த விழிகளால்
விட்டத்தை வெறிக்கிறேன் நான்
காலையில் நீ
வீசியெறிந்து விட்டுப் போன
ஒற்றைக் கடுஞ்சொல்
நம்மிருவருக்கும் இடையில்
சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது
நம் நேசத்தை வென்றுவிட்ட களிப்புடன்.
இந்த இரவு
இன்னும்
எவ்வளவு மீதமிருக்கிறதென்று
தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick