நீர்மை மற்றும் நீ பற்றிய குறிப்புகள் - யதார்த்தன்

வானம் (முதலாம் ஒன்று)

எனதன்பே
புன்னகை மிக்க வார்த்தைகளை பொழிவதற்குத் தயாராகும்
வானத்தை உனக்காக விரித்திருக்கிறேன்
நட்சத்திரங்கள் ஆணிகளாக இறுக்கப்பட்ட
நீண்ட கரிய மெத்தை விரிப்பாக வானம்
எங்கிருந்தும் அதை இழுத்துப்  போர்த்திக்கொள்ளலாம்.

கடல் (இரண்டாம் ஒன்று)

நீர்மையின் துர்க்குறிகள் உனதுடலில்
பெருங்கடலாக உனதுடல்
கடலுடலின் (என்பு தோல் தசையில்) விம்மி விழும்
தளும்பலின் சொல்
சர்ப்பமொன்றின் பிரசவத்தைப்போல்  குழையும் கடலுடல்.

நிலம் (மூன்றாம் ஒன்று)

கடல் அசையும் நிலம்
நிலம் அசையாக் கடல்


மழை (நான்காம் ஒன்று)

பறவையின் கண்ணீரே 
மழை.


நதி (ஐந்தாம் ஒன்று)

மீண்டும் மீண்டும் பார்க்கிறாய்
உன்னிடமொரு நதியுள்ளது என்பதை
நீ என்னிடம்
அப்போது சொல்லியிருக்கக் கூடாது
அப்போது நான்
அன்பின் பெயரில் உதிரும் இலைகளில்
வசித்து வந்தேன்
அன்பே மரமொரு முழுப் புனிதச்சொல். 
சொல்லாத வார்த்தைகளெல்லாம்
தொண்டைக்குள் ரோமங்களாய் முளைக்கும்
இப்போது நீ கடலில் இருந்து வந்தவள் என்பதை நான்
நம்பியாகவேண்டும்.
எனினும் உன்னுடைய நதி பற்றி
சொற்களை உறிஞ்சும்
வண்ணத்திகளுடன் பேசியபடியுள்ளேன்
எனதன்பே,
நீர் பரவும் காமம்
நிலம் பெருகும் காதல்
கொல்லுதலின் பொருட்டு காதல்
ஜனித்தலின் பொருட்டு  காமம்
கொல்லும் போதே வாழவேண்டியிருக்கும்
நதிகொண்டவளே
மீண்டும் மீண்டும்
திரும்பிப்பார்க்கிறாய்.

கண்ணீர் (ஆறாம் ஒன்று)


எனதன்பே
கண்ணீர் என்பது நதிகளின் சொல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick