நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பால் லீ : விந்தைக் கலைஞன்

வீன ஓவியர்களில் புத்தம் புதுப் புனைவாக்கங்களில் மிக அதிகபட்ச சாத்தியங்களைக் கண்டடைந்தவர், சுவிஸ் – ஜெர்மன் ஓவிய மேதையான பால் லீ (1879-1940). மிகவும் தனித்துவமான ஓவிய மொழி மூலம், புலப்படும் தோற்ற உலகுக்கு அப்பாற்பட்ட புலப்படா உலகின் மெய்மையையும், கனவுலகில் உறைந்திருக்கும் மனித ஆழ்மனக் குணங்களையும் ஓவியப் படைப்புகளாக உருவாக்கிய விந்தைக் கலைஞன். தன் வாழ்நாளில் 9,000 ஓவியங்களுக்கு மேல் உருவாக்கிய அற்புதப் படைப்பாளி. தன் இளமைக்கால நாள்குறிப்பில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்; `முன்னதாக, பூமியில் தோற்றம்கொண்டிருக்கும் பொருள்களை வெளிப்படுத்தினோம். நாம் பார்த்தவற்றை, பார்க்க விரும்பியவற்றைப் படைத்தோம். ஆனால், இன்று புலப்படும் பொருள்களுக்கு அப்பாலுள்ள மெய்மையை அறிய பிரயாசைப்படுகிறோம்’. இந்தப் பிரயாசைகளின் வெளிப்பாடுகளே இவருடைய ஓவியங்கள்.

மனித ஆழ்மன வெளிப்பாடுகளான கனவுப் பிரதேசத்தில் சஞ்சரிப்பதன் வாயிலாக அவற்றின் மெய்மையைத் தம் படைப்புவெளியில் கண்டறிய பால் லீ முற்பட்டார். தொன்மையான வடிவமைப்பு முறைகள், குறியீடுகள் மற்றும் படிமங்கள் மூலம் அறியும் பிரயாசைகளாக அவருடைய ஓவிய ஆக்கங்கள் அமைந்தன. மனித இனத்தைத் தொன்மமாகத் தொடரும் கூட்டு நனவிலியை (collective unconscious) ஃப்ராய்டுக்குப் பிந்தைய உளவியல் மேதையான யுங்கைப்போலவே ஏற்றுக்கொண்டவர். ‘இன்றைய நவீனக் கலைகளில் இடம்பெறும் தொன்மையான வடிவமைப்புக் கூறுகளும் சங்கேதங்களும் இப்படியாகத் தொடர்ந்துகொண்டிருப்பவைதாம்’ என்று அவர் கருதினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick