நா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம் : கார்த்திகேயன் மேடி

1962 - 63-ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு. கவிஞர் அபி, இளங்கலை மூன்றாமாண்டு. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், முதுகலைத் தமிழ் இறுதியாண்டு. கவிஞர் இன்குலாப், எனக்குப் பின்னால் அடுத்த ஆண்டு இளங்கலைத் தமிழில் சேர்கிறார். அவருடைய வகுப்புத் தோழர் – பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்து மறைந்த கா.காளிமுத்து.

மதுரை தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25-ம் நாள், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் முன் ஆலோசிப்பு நடந்தது. நண்பர்கள் காமராசன், காளிமுத்து ஆகியோர்,  ‘இந்தியே ஆட்சி மொழி’ என்று அறிவிக்கும் சட்டப் பிரிவு பிரதியை எரிப்பதென முடிவு செய்தனர். ‘சட்டத்தை’ எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றும் முன் கைது செய்யாமலிருக்க, ஒரு தலைமறைவு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினோம்.  எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-ம் நாள் அன்று  மாணவர்கள் சுற்றிலும் பாதுகாப்பாக வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி, சட்டப் பிரிவுப் பிரதிக்குத் தீயிட்டார்கள். அதன்பின் தங்களின் எதிர்காலம் இருண்டுபோகும்; கல்வியைத்  தொடர இயலாது என்பதை இருவரும் அறிவார்கள். தமிழக மாணவச் சமுதாயத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு அவர்தம் வாழ்வைப் பலியிடுதலை மூலப்பொருளாக்கிற்று.

படிப்புக் காலத்தில் நா.காமராசன், கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். ஆலைத் தொழிலாளியான என் சிற்றப்பா வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு வெளியில் தனி அறை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். படிக்கிற நாள்களிலும், முதுகலை முடித்த பின் அரசியல் கூட்டங்களுக்குச் சொற்பொழிவுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிற காலத்திலும் நா.கா  என்னுடைய அறையில் அவ்வப்போது வாசம் செய்தார். நா.கா. பத்து வயதிலிருந்து  ஆஸ்த்மா சீக்காளி. தனது சட்டையை நீக்கி  ‘கூட்டு நெஞ்சை’க் காட்டுவார். அவர் என்னுடன் தங்கிய இரவுகளில் தூங்கியதை நான் கண்டதில்லை. ‘களக், களக்’ என்று இரவு முழுதும் இருமிக்கொண்டிருப்பார்.சளியைக் கையில் எடுத்து அறைச் சுவர்களில் இழுகி வைத்ததால், கொத்துவைத்த அம்மிக் கல்போல் காய்ந்த சளிக்கற்றைகள் ஒட்டிக்கிடந்தன. இருமி இருமிக் களைப்பாகி எத்தனை மணிக்குத் தூக்கம் அவர் கண்களைத் தழுவும் எனச் சொல்ல இயலாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick