மேலாதிக்கத்தை எதிர்கொள்வது எப்படி? - இமையம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம்

‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று’
 
- திருவள்ளுவர்.

ணவன் மனைவியாக இருந்தாலும், உறவினர்களாக, நண்பர்களாக, சகோதரர்களாக, குழந்தைகளாக, சமூகமாக இருந்தாலும், உடன்பட்டு இசைந்து வாழாதவர்களுடைய வாழ்க்கை என்பது ஒரே குடிலுக்குள் ஒரு பாம்புடன் வாழ்வதற்கு ஒப்பாகும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில் மட்டுமல்ல... இன்றும் திருவள்ளுவர் எழுதியது பொருத்தமாகத்தான் இருக்கிறது. பிராமணிய இந்து மதக் கருத்தியல் மேலாதிக்கம் நிறைந்த இந்தியச் சமூகத்தில், தலித்துகள் வாழ்வது என்பது பாம்புடன் வாழ்வதைவிடவும் கொடூரமானது.

பிராமணிய கருத்தியல் மேலாதிக்கம் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எல்லா துறைகளிலும், எல்லா இடங்களிலும் செயல்படுகிறது. காற்றைப்போல அது எல்லா இடத்திலும் இருக்கிறது. இந்து மதம் என்ற பெயரால் பிராமணியம் உருவாக்கிய மேலாதிக்கக் கருத்தியலைப் பாதுகாப்பது இடைநிலைச் சாதியினர். கருத்தியலை உருவாக்கியவர் களைவிட, அதைப் பாதுகாப்பவர்கள்தான் குற்றவாளிகள் என்பது குறித்து, மேலாதிக்கத்தை எதிர்த்து வெளியேறுதல் (அம்பேத்கார் புத்த மதத்தைத் தழுவியது, கிறித்துவர்களாக, முஸ்லீம்களாக மாறுவது), அடங்கிப் போவது, அடங்க மறுத்தல் என்பது குறித்து நான் பேசப் போவதில்லை. தலித்துகளின் சிறுசிறு முனகல்கள்கூட சமூகச் சீர்குலைவாகச் சித்தரிக்கப்படுவது, தலித்துகள் அடங்கிப்போவதுதான் சமூக அமைதிக்கு உகந்தது என்ற போதனை குறித்தும் நான் பேசப் போவதில்லை. பிராமணியக் கருத்தியலை ஒழிக்காமல், அதனுடைய மேலாதிக்கத்தை ஒழிக்க முடியாது. அதனால், ‘அடங்க மறு, அத்து மீறு’ என்று புரட்சிகர வசனம் பேசப்போவதில்லை. AIIMS, JIPMER போன்ற நிறுவனங்களில் NEET தேர்வு ஏன்  கொண்டுவரப்படவில்லை. IIT, IIM போன்ற கல்வி நிறுவனங்களின் உலகத்தரம் எப்படி இடஒதுக்கீட்டின் மூலம் தாழ்ந்துவிடும். இந்தியா வல்லரசாவதற்கு இடஒதுக்கீட்டு முறை எப்படித் தடையாக இருக்க முடியும்?  நீங்கள் உருவாக்க விரும்பும் வல்லரசு யாருக்கானது என்ற கேள்விகளை எல்லாம் நான் கேட்கப் போவதில்லை. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை நீக்கி, பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவந்து, இந்தியா முழுவதும் தரப்படுத்தப்பட்ட ஒற்றைக் கல்வி முறையை, அதுவும் இந்தி வழியாக உருவாக்குவோம் என்று சொல்வது அநீதியல்லவா என்று கேட்கப்போவதில்லை. அதேமாதிரி முற்றும் துறந்து சந்நியாசியானவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய மந்திரி, மாநில மந்திரி, முதல்வர் ஆவது பற்றியும், சந்நியாசிகள் எல்லாம் வங்கிக் கிளைகள் மாதிரி நாட்டுக்கு நாடு தியானக் கிளைகளும் சொத்துகள் வைத்திருப்பதைப் பற்றியும் நான் எதுவும் பேசப்போவதில்லை. ‘‘இந்தியாவில் நிறவெறி கிடையாது. தென்னிந்தியாவில் இருக்கும் கறுப்பர்களுடன்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்” என்று பி.ஜே.பி-யின் முன்னாள் எம்.பி.தருண் விஜய் கூறியிருக்கிறார். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் கறுப்பாக இருக்கிறார்களா; பிராமணிய இந்து மதம் அவர்களைக் கறுப்பாகச் சித்திரிக்கிறதா; பிராமணிய இந்து மதக் கருத்தியல் அவர்களை இருட்டுக்குள் வைத்திருப்பதால், அவர்கள் கருப்பாகத் தெரிகிறார்களா என்று நான் கேட்கப்போவதில்லை.

சாதியை, சாதிய மேலாதிக்கத்தை உருவாக்கியவர்கள் - சாதியை, சாதிய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கருவிகளை, அடிப்படைகளை உருவாக்கியவர்கள், பாதுகாப்பவர்கள் யார்; சாதிய மேலாதிக்கத்தின் தன்மைகள் என்ன; சாதியைக் காப்பாற்றும் சினிமா குறித்தெல்லாம் நான் பேசப்போவதில்லை.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஊர்வலத்தில் கலந்துகொண்டு, பொதுக்கூட்டத்திலும் பேசிவிட்டு, வீட்டிற்குச் சென்று தந்தையின் கருமகாரியச் சடங்குகளைப் பிராமணரை வைத்து செய்பவர் குறித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் முதல் கட்டத் தலைவர்களாக இருப்பவர்கள், தீண்டாமை ஒழிப்பு மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருபவர்கள் எல்லாம் தங்களுடைய பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதி அடைமொழியை ஏன் நீக்காமல், நீக்க விரும்பாமல் இருக்கிறார்கள் என்பது குறித்து, இடதுசாரி இயக்கத்தின் வேட்பாளராக ஏழு முறை தேர்தலில் நின்று வென்றவர், ஒருமுறை மக்களவையின் சபாநாயகராக இருந்தவர், தன்னுடைய பேரனுக்கு பூணூல் அணியும் விழாவை சிறப்பாகக்கொண்டாடியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏனோ இந்த நேரத்தில் ஜோதிபாசு, பட்டாச்சார்யா, E.M.S நம்பூதிரிபாட் போன்ற பல பெயர்கள் நினவில் வந்து தொலைக்கிறது. அடையாளச் சிக்கல் என்பது அடிப்படையில் சாதியச் சிக்கல்தான்.

நான் எழுத்தாளன். அதனால், அறிவுத் தளத்தில், இலக்கியத் தளத்தில் இருக்கிற மேலாதிக்கம் குறித்து மட்டுமே பேச விரும்புகிறேன்.

 1980-1990 காலகட்டத்தில் கன்னட, மராத்திய மொழியில் எழுதப்பட்ட தன் வரலாற்றுக் கதைகளின் வழியாக, தமிழில் தலித் இலக்கியம் குறித்த உரையாடல் தொடங்கியது. அந்த வகையில் கன்னட, மராத்தி தன் வரலாற்றுக் கதைகளுக்குத் தமிழ் தலித் இலக்கியம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

சித்தலிங்கையா, வசந்த் மூன், பேபி காம்பிளி, சரண்குமார் லிம்பாலே, ஓம்பிரகாஷ் வால்மீகி, அர்ஜுன் டாங்ளே, ஊர்மிளா பவார் போன்றவர்களுடைய தன் வரலாற்றுக் கதைகளைவிட, லஷ்மண் மானே, லஷ்மண் கெய்க்வாட், கிஷோர் சாந்தாபாய் காலே ஆகியோர் எழுதிய,  ‘உபாரா’, ‘உச்சாலியா’, ‘குலாத்தி’தான் தமிழில் அதிகம் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டது. இந்த மூன்று தன்வரலாற்றுக் கதைகளும் தலித் தன்வரலாற்றுக் கதைகள் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப் பட்டிக்கின்றன. இவைதான் தமிழில் ‘தலித்’ இலக்கியத்திற்கு சிறந்த முன்னுதாரணங் களாக அடையாளம் காட்டப்பட்டன.

லஷ்மண் மானே, லஷ்மண் கெய்க்வாட், கிஷோர் சாந்தாபாய் காலே மூவரும் நாடோடிப் பழங்குடியினத்தவர்கள். அவர்கள் எழுதிய ‘உபாரா’, ‘உச்சாலியா’, ‘குலாத்தி’ ஆகிய மூன்று தன்வரலாற்றுக் கதைகளும் இரண்டு விதமான கதைகளைச் சொல்கின்றன. முதல் கதை, பொதுச் சமூகத்தால் தங்களின் சமூகம் பட்ட அவமானம். இரண்டாவது கதை, தங்களுடைய சமூகம் மகர், மங் போன்றவர்களுக்கு ஏற்படுத்திய அவமானம். இந்த மூன்று நூல்களையும் படிக்கிற மனசாட்சியுள்ள எவரும் இவை தலித் தன்வரலாற்றுக் கதைகள் அல்ல என்று சொல்வார்கள். ஆனால், தமிழ் மற்றும் இந்திய அறிவுலகம் தலித் தன்வரலாற்றுக் கதைதான் இவை என்று கொண்டாடின. இது எப்படி, ஏன், எதனால் நிகழ்ந்தது என்று கேட்பதும், அறிவுஜீவிகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும், இவற்றை மொழி பெயர்த்தவர்களுக்கும், வெளியிட்ட வர்களுக்கும் இவை தலித் தன்வரலாற்றுக் கதைகள் அல்ல என்பது தெரியுமா, தெரியாதா என்று கேட்பதும் குற்றமாக இருக்காது என்று நம்புகிறேன். (இவற்றைப் பேசக் கூடாது என்று அர்ஜூன் டாங்ளேவும், ஜனநாயகச் சக்திகள் என்பவர்களும் சொல்கிறார்கள். அதாவது, உள் சாதி முரணைப் பேசக் கூடாது என்று. நாடோடிப் பழங்குடியினத்தவரும், மகர், மங்கும் ஒன்றல்ல. உண்மையை எழுதியவர்கள் என்ற முறையில் லஷ்மண் மானே, லஷ்மண் கெய்க்வாட், கிஷோர் சாந்தாபாய் காலே ஆகியோர் மீது பெரும் மதிப்பு எனக்குண்டு).

மராத்தியிலிருந்தும், கன்னடத்திலிருந்தும் வந்த தன்வரலாற்றுக் கதைகளின் மூலமாகத் தமிழிலும் தன்வரலாற்றுக்கதைகள் எழுதும் முயற்சிகள் நடைபெற்றன. அந்த முயற்சிகள் தன்னெழுச்சியாக நடக்கவில்லை. மாறாக தூண்டப்பட்டன. கெட்ட வார்த்தை போட்டு எழுத வேண்டும். அப்படி எழுதுவதுதான் ‘தலித்’ இலக்கியம் என்ற இலக்கிய வரையறையும் தரப்பட்டது. கெட்ட வார்த்தை போட்டு எழுத மாட்டேன் என்று சொன்னவர்கள், ‘நான் எழுதுவது இலக்கியம் - தலித் இலக்கியம் அல்ல’ என்று சொன்னவர்கள் மீது ‘தலித் பிராமணன்,’ ‘பிராமண அடிவருடி’ என்று முத்திரை குத்தப்பட்டது. (தமிழகத்தில் மட்டும்தான், ‘நான் தலித் எழுத்தாளன் அல்ல’ என்று அறிவித்த நிலை இருந்தது. பிற மாநிலங்களில் அப்படி இல்லை.) இந்த முத்திரை குத்தும் செயலில் ஈடுபட்டவர்கள் அறிவுஜீவிகளும் இலக்கியவாதிகளும்தான்.

முன்பெல்லாம் ‘தலித்’ எழுத்தாளர்களிடம் பேட்டி எடுக்கும்போது, “தலித் இலக்கியம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்பார்கள். இப்போது ‘`தலித் இலக்கியம் தேக்கமடைந்ததற்குக் காரணமாக எதை நினைக்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். இந்த இரண்டு கேள்விகளும் தலித் எழுத்தாளர்களிடம் மட்டுமே கேட்கப்படுகிற, அவர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டிய, அவர்களுக்கென்று மட்டுமே ஒதுக்கப்பட்டவையாக இருக்கின்றன. இந்தக் கேள்விகள் பிறசாதி எழுத்தாளர்களிடம் இதுவரை கேட்கப்படவில்லை. பிறசாதி எழுத்தாளர்களிடம் கேட்பதற்கென்றே அதி உன்னதத் தூய இலக்கியப் பத்திரிகையாளர்கள் பிரத்யேகமான கேள்விகளை வைத்திருக்கிறார்கள். பிறசாதி எழுத்தாளர்களிடம், ‘‘தமிழ், இந்திய, உலக இலக்கியச் சூழல் எப்படியிருக்கிறது, இன்றைய இலக்கியப் போக்கு எப்படியிருக்கிறது, இலக்கியம் ஏன் எழுதப்பட வேண்டும், ஏன் படிக்கப்பட வேண்டும், இலக்கியத்திற்கும், வாழ்க்கைக்குமான உறவு என்ன, கல்விக்கும் இலக்கியத்திற்குமான உறவென்ன, இலக்கியச் செயல்பாட்டில் மொழியின் செயல்பாடு எந்த அளவிற்கு முக்கியமானது?” என்பன போன்ற கேள்விகளையே கேட்பார்கள். தலித் எழுத்தாளரிடம் கேட்கும்போது, ‘‘உங்களுடைய இளமைக் காலம் எப்படியிருந்தது, பள்ளிக்கு எப்படிச் சென்றீர்கள், பள்ளி, கல்லூரியில் சந்தித்த இழிவுகள் என்ன, இளமைக் காலத்தில் சந்தித்த கொடூரங்கள் என்ன, உங்களுடைய படைப்புகள் - உங்களுடைய வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களா?” என்பது போன்ற கேள்விகளையே கேட்பார்கள். கேள்வி கேட்பவரின் உள்நோக்கத்தை, கேட்கப்படும் கேள்விகளின் தன்மையை அறியாமல், தலித் எழுத்தாளர்கள், ‘‘என்னுடைய இளமைக்காலம் பன்றிக் குடிசை போன்றிருந்த ஒரு வீட்டில் கழிந்தது. இடமில்லாமல் தெருவில் படுத்திருப்போம். எங்களோடு பன்றிகளும் படுத்திருக்கும். பன்றிகளோடுதான் விளையாடுவோம். எங்கள் வீட்டின் வாசல் முன், சாக்கடை இருக்கும். அதில் கொசுக்கள் இருக்கும். அதில் குதித்து குதித்து விளையாடுவோம். எப்போதும் எங்கள் தெருவில் சண்டையும் சச்சரவுமாக இருக்கும். கெட்ட கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டிக்கொள்வார்கள். செத்த மாட்டை என் அப்பா தூக்கி வரும்போதும், மாட்டை அறுக்கும்போதும் நான் காக்கைகளை ஓட்டிக்கொண்டிருப்பேன். என் அப்பா பறைமேளம் அடித்துக்கொண்டு போகும்போது நானும் கூடவே போவேன். இரவில் சோறே இருக்காது. பட்டினிதான் கிடந்தோம். பள்ளியில், கல்லூரியில் என்னை ஒதுக்கிவைத்தார்கள். ‘கோட்டா’ பையன்கள் என்று கிண்டலடித்தார்கள். என்னுடைய எழுத்து என்பது - என்னுடைய வாழ்க்கைதான். அதில் பொய்க் கலப்பில்லை. தலித் இலக்கியம் என்று வந்தபிறகுதான் என்னுடைய எழுத்துகள் சமூக அங்கீகாரம் பெற்றன” என்று வாக்குமூலம் கொடுத்து சாட்சியமளிப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick