பேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள் : வெங்கடேசன்

முத்திரத்தையும், தூரத்து மலைகளையும் எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நினைவு, மனதிலே ஓட்டம், அசைவு ஒன்றுமில்லாமல் சூன்யமாக நிம்மதியாக இருக்கும். அப்படியொரு நிம்மதி தி.ஜானகிராமனின் எழுத்துகளைப் படிக்கும்போதும் கிடைக்கிறது.

தமிழ் இலக்கிய உலகில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமுறைகளைக் கடந்தும் படிக்கக்கூடிய எழுத்தாளராக தி.ஜானகிராமன் இருக்கிறார். ஆண் – பெண் மன உலகின் விந்தையான வாழ்க்கையை அறிய விரும்பும் மனம் தி.ஜா-வில் அடைக்கலமாகும்.

நான் என்னுடைய இருபதாவது வயதில், தி.ஜா.வைச் சென்றடைந்தேன். இருபது வயது, தி.ஜா.வைச் சென்றடைய மிகச் சரியான வயதாகக்கொள்ளலாம். அல்லது இன்னும் தாமதமாக, இருபத்தைந்து வயதுக்குமேல்கூட தி.ஜா.வைச் சென்றடையலாம். அவர் முன்வைக்கும் ஆண் – பெண் மன உலகின் ஆழத்தை அறிய வேண்டுமானால், அந்த வயதின் பக்குவம் தேவைப்படுகிறது. வயதிற்கும் பக்குவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலில், பெரும் உண்மையில்லை எனினும், நம் சமூகத்தில், ஒவ்வொரு கட்டமாகவே வாழ்வின் படிகளைக் கடக்க நாம் வழக்கப்படுத்தப்படுவதால், வயதும் அனுபவத்தோடு பொருத்தப்படுகிறது.

இருபது வயதில் தி.ஜா.வைப் படித்தபோது, நான் தரையிலிருந்து ஓரடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தேன். பெரும் சுரங்கத்தினை மூடியிருந்த சிறு பாறையை விலக்கிவைத்த வெளிச்சம்போல், அக உலகத்திற்குள் தி.ஜா-வின் நாவல்கள் உயிர்பெற்றன. உடலையும் மனதையும் ஓர் அகல் விளக்கைப்போல் அன்பால் எரியச் செய்து, ஓர் ஆணுக்காகவும் பெண்ணுக்காகவும் காத்திருக்கச் செய்யும் ரசவாதத்தை தி.ஜா. வாசகருக்குள் உருவாக்கிவிடுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick