கவிதை - பாதசாரி | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

கவிதை - பாதசாரி

முதிர்வு

பறவைகளில் கிழடு அது எனச் சுட்ட
யாருக்கும் மனசு வராது இல்லையா
சிறகுகள் முற்ற முற்ற கூடும் விவேக பலம் மேலும்
உறக்கத்தில் நகர்ந்த கனவுக்கேது கால அலகு
காற்றில் காலம் கரைதலே பறத்தல்
வாழ்வெனில் காற்றில் வாழ்தல்
வாழ்வில் மலர்ந்த சிரிப்பில்
மழலைக்கும் மூப்புக்கும்
ஒளி வீசும் ஒரே மணம்.

மானசீகம்

நீளும் கரிய நெடுஞ்சாலையில்
தரையில் விரையுமென் வாகனத்தோடு
துள்ளித் தாவித் துள்ளிக் காற்றோடு ஓடி வரும்
வண்ண வண்ண ஓராயிரம் மலரிதழ்கள்...


மரண தேவதையின் கன்னத்திலோர்
மானசீக முத்தம்.


சட்டை

இந்தச் சட்டை எனக்குப் பிடித்திருக்கிறது
இதைப் பிறிதொருவருக்கு அணிவித்துப் பார்த்தே
தேர்ந்தெடுத்துவைத்துள்ளது மனசு ஆக
எதுவுமே ஏற்கனவே அணியப் பட்ட சட்டை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick