அபத்தக் கேள்விகளின் கீறல்கள் - யவனிகா ஸ்ரீராம்

ஓவியம் : ஹாசிப்கான்

முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் முடிந்திருந்தன
எருமைகளின் பரிணாமத்தில்
கொம்புகள் எனப் பெயர் பெற்றது
உண்மையில் அதன் கால்நகங்களே

அதன்படி பன்றி மற்றும் யானையின் தந்தங்கள்
அவற்றின் வாய்நகங்கள் என்றும்
மனித நகங்கள் ஒருவரையொருவர் கீறிக்கொள்ளப் பயன்படும்
காதலுக்கான பிரச்சனை என்றதும்
பலத்த கரவொலி எழுந்தது

மீன்களின் செதிள்கள் சிப்பிகள்
பாம்புகளின் சட்டை ஆமைகளின் முதுகு
பறவைகளின் அலகுகள் முட்டைகளின் ஓடுகள்
குறித்து மறுசுற்றில் பேசலாம் என்றார்கள்

வாழைப்பூ மடல் வரகரிசித் தவுடு
பனையின் மட்டைகள் மக்காச்சோளக் கோதுகள்
கொட்டைகளின் மூடி இருவிதையிலைத் தோல்கள் யாவும்
ஈரம் காயாதிருக்க வேண்டித் துளிர்த்த
இறந்த காலங்களா என்றொரு விவாதம் முன்வைக்கப்பட்டது

அண்டம் பிண்டம் கண்டம் தண்டம்
என்றொருவர் எழுந்து கத்தினார்

அப்படியெனில் வானுயர்ந்த இக்கோபுரங்கள்தான்
இப்பூமியின் கொம்புகளா சரி அவற்றின் நகங்கள் எங்கே?
எனவும் வெடித்தெழுந்த ஒருவர்
மிக அபத்தமான கேள்வியெனக் கோபித்து வெளியேறினார்
கனத்த மௌனம் நிலவ
அரங்கத்தின் மூலையில் மெல்ல ஆடைவிலக்கி
தங்கள் கீறல்களைப் பார்த்து குறும்பாய்ச் சிரிக்கத்துவங்கியிருந்தது ஒரு கூட்டம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick