ஏழு மீன் கடந்து… - ஆதிரன்

ஓவியம் : ரமணன்

னிதன் நடக்கிறான்
பசிக்கிறது
அவனது தாய் முன் செல்கிறாள்
சூரியனின் எதிர் நிறத்தில்
அவள் சருமம்
அலைகளை எழுப்புகிறது
கருப்பு நதி அவள்…
முன் செல்கிறாள்
படிக விசும்பில் முழுத் தணுப்பு
வானில் மீன்.

மனிதன் நடக்கிறான்
பசிக்கிறது
அவனது நதி முன் செல்கிறது
கபில நிறத்தில் அதன் பரப்பின்
நெட்டலையில் கோணுகிறது
அவன் முகமும் இரண்டு கரையும்
அவன் தாயென்றழைத்ததும்
திரும்பிப் பார்த்த நதியில் மீன்.

மனிதன் நடக்கிறான்
பசிக்கிறது
மானின் இதயத்தைக்
கிழித்தளித்துவிட்டு
பதிலுக்கும் சில கற்களை
தானமாய் பெறுகிறான் தகப்பன்
நிலைத்த மேகமென விரைத்த
மானின் விழிகளில் சிவந்த மீன்

மனிதன் நடக்கிறான்
பசிக்கிறது
விழிபட்ட நிலத்திலெல்லாம் பூக்கிறது
தானியங்கள் பால் சுரப்பிகளுடன்
தண்டுகள் நைந்து நெளிய
கணுக்களில் முட்டித் ததும்புகிற
முடிவிலை இலைகளின் படபடப்பில்
மிதக்கிறது பச்சய மீன்

மனிதன் நடக்கிறான்
பசிக்கிறது
தோளில் ஆட்டை சுமந்த தாயை
நட்டுவைக்கிறான் நதியோரத்து மணலில்
புலுக்கைச்சுவை நீரில் கொதிக்கிறது உலை
உவர்ப்பைக் கண்டுவிட்ட போதத்தை
சுருட்டிய இலையில் அடைக்கிறான்
ஈரம் பாரித்த தாயின் இடுப்பிலிருந்து
பிய்ந்து விழுகிறது வெளிர்மஞ்சள் நிற மீன்

மனிதன் நடக்கிறான்
பசிக்கிறது
உலோகங்களுக்குக் காதுகள் முளைக்கின்றன
சேவகம் புரிகிற பாவனையில்
நதிகளைக் குடிக்கிறது அவை
விசும்பின் வளைகளில் ஊறும் கோள் நண்டுகள்
அவனது நாக்குகளைத் தாமிரமென திரிக்கிறது
நாவல்நிறக் கழிவுகள் அனைத்தாலும்
அச்சிடப்படுகிறது உலகம் முழுக்க
சிறகு முளைத்த காகித மீன்

மனிதன் நடக்கிறான்
பசிக்கிறது
அவனது சட்டைப் பையிலிருந்து
ஒரு பறவையை எடுக்கிறான்
அவனுக்கான சாத்தியங்களைப்
பட்டியலிடுகிறது அந்த மிளிர் சாம்பல் பறவை
அவன் தன்னைத்தானே வியந்துகொள்கிறான்
நெகிழி மலைக்கு ஒரு கடவுச்சீட்டை கோருகிறான்
சிகரெட்டிலிருந்து தெறித்த பொறியில்
தீயும் அந்த மலையில் கசியும் வாடையில்
தனது நினைவுகளைப் பரப்புகிறது
பழுப்பு நிற ஆதி மீன்.

மனிதன் நடக்கிறான்
பசிக்கிறது
சாலை முடக்கில் நின்று
தலையைத் தூக்கிப் பார்க்கிறான்
ஒளிப்பதிவுக் கருவி ஒன்று
அவனைக் கூர்ந்து நோக்கியதும்
அவன் சட்டையைத் தூக்குகிறான்
தொப்புளுக்கு பதிலாக சாவித்துவாரம் இருப்பது
உறுதி செய்யப்படுகிறது. பீப் சத்தத்திற்குப் பிறகு
அருகிலிருந்த குப்பைத்தொட்டியில்
ஏழு மீன்களைக் கக்கிவிட்டு
நடக்கிறான் பச்சை விளக்கு எரியும் சாலையில்.

மனிதன் நடக்கிறான்
பசிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick