குற்றங் களைதல் - சம்பு

ஓவியம் : ரவி

ரு மொக்கவிழ்வதுபோல் ஞாபகம் விரிந்து
நினைவு மடிப்புகளில் உறுத்துகிறது
கடந்துவந்த ஒரு குற்றம்
அத்தருணத்தின் பலவீன மனதை
சிக்கரி கலக்காத தூய சுயநலத்தை
செய்யத் தூண்டி பெருகிய வன்மத்தை
நினைவில் அறைந்தபடி
அது குதித்து வந்து நிற்கிறது
உடன்
வெளிறிப்போய் எடுத்தயெடுப்பில்
அதைத் தடவிக்கொடுத்து கழுத்து நெறிக்க
மயிற்தோகை தேடி அலைகிறோம்
அதுவோ
கண்ணிகளில் சிக்காமல் கானகவெளி பாயும்
கறுப்பு முயல்
வெகுதொலைவில் நின்றபடி
நம் குற்றமுகம் பதிந்த
வரலாற்றின் பதாகையை உயர்த்திப் பிடிக்கிறது
அங்கம் பதறும்படி நீரிலமிழ்ந்து
கொதிக்கும் சிரசைக் குளிர்விக்க முனைகிறோம்
நம் கண்களை நோக்கி ஒரு மீன்குஞ்சென
நீந்திவருகிறது அக்குற்றம்
அருகில் காணக் கூசும் அதை
இத்தனைகாலம் எங்கிருந்தாயென்கிற
வெற்று அங்கலாய்ப்பு
கொல்லுந்துணிவைத் தரப்போவதில்லை
தவிர
துருத்தும் சிறுமடிப்பைச் சீவியெறிய
கொலைவாள் வேண்டுமா
ஒரு குறுங்கத்தி போதும்தானே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick