ரோஸுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் - வியாகுலன்

ஓவியம் : ரமணன்

னநலக் காப்பக வாயிலில்
ரோஸுக்கு மாத்திரைகள் கொடுக்க
முதியவர் காத்திருக்கிறார்

ரோஸ் அவரையும்
இசை நாற்காலி விளையாட்டையும்
மட்டுமே அறிந்தவள்

இரவுகள் அவளது உறக்கத்தை
விநோதமான ஓரிடத்தில் ஒளித்திருந்தன

தனது மத்திம வயதிலும்
அவ்விடத்தை அவள் தேடிக்கொண்டுதானிருக்கிறாள்

ஓசைகள் நிரம்பிய செவிகளுக்குள்
தனது கீதத்தைத் தொலைத்திருந்தாள்

பட்சிகள் நிறைந்த கண்களுக்குள்
தனது வனத்தைத் தொலைத்திருந்தாள்

கீதத்தையும் வனத்தையும்
முதியவர் மாத்திரைகளாக மாற்றித்
தன்னிடத்தில் வருவதாக
எண்ணிக்கொள்வாள்

பருக்கைகளையவள் தும்பைப்பூக்களாகப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான்
நிறங்களிழந்த வண்ணத்துப்பூச்சியை
வாலில் நூல்கட்டி சிறுவனொருவன்
விளையாடிக்கொண்டிருந்தான்

ரோஸின் இமைகளை அவ்வண்ணத்துப் பூச்சிதான்
நெடுநேரம் இமைக்கவிடாமல் செய்திருந்தது
சிறுவன் வண்ணத்துப்பூச்சியோடு
மறைந்துபோன பிற்பாடே
இமைகள் மூடும்

இமைகள் மூடப்பட்ட அவ்விருளில்
தவறவிட்ட உறக்கத்தை அவள்
கண்டடையவில்லை

ரோஸ் பேரிளம்பெண் - அவளது
செய்கைகள் குழந்தைகளினுடையவை
ரோஸ் குழந்தை - அவளது
செய்கைகள் பேரிளம் பெண்ணுடையவை
ரோஸ் முதியவள் - அவளது
கண்கள் மட்டும் குழந்தைகளினுடையவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick