இன்றிரவு நீ உறங்கிவிடு மகளே... - ஜெயராணி

ஓவியம் : செந்தில்

ம் இறக்கைகளை சற்றே ஒதுக்கி
குஞ்சுகள் வீடடைய இடம் தரும்
சின்னஞ்சிறிய பறவைக்கே வாழ்வின் மீது
அத்தனை பிடித்தமிருக்கும்போது…
நடுங்கும் உன் விரல்களை
அமைதிப்படுத்திக்கொண்டு
என் கைகளுக்குள் விழி மூடு மகளே!

நேற்றிரவு நீ உறங்கிக்கொண்டிருந்தபோது
உன் குடிசை கொளுத்தப்பட்டது.
தன் கத்திரிப்பூ நிற பாவாடையைத் தூக்கிப் பிடித்து
கன்றுக்குட்டியின் முதல் துள்ளலோடு
இச்சேரி முழுக்க உன்னோடு ஓடி விளையாடிய
மஞ்சுக்குட்டி குடிசையோடு பொசுங்கிப்போனாள்.

உண்மைதான்.

சூடு பொறுக்காத அவளது அழுகுரல்
உன் மூளையில் ஒலிக்கிறதா?
பொசுங்கிய அவளது உடல்கறியின் நெடி
உன் இதயத்தின் அடியாழத்தில் பிரட்டுகிறதா?

அதனாலென்ன மகளே...
நாளைய விடியலின் நிறம் எதுவாகவும் இருக்கட்டும்.
இன்றிரவு நீ விழி மூடு.

நீ பிறந்ததிலிருந்து - இது பத்தாவது முறை.
பத்து வயதுக்காரி சொல்வதற்கு
பத்து குடிசையெரிப்புக் கதைகள்!
இந்தச் சேரி வாழ்வு
உனை அனுபவங்களுக்குப் பழக்கவில்லை மகளே
சாவுக்குப் பழக்குகிறது.

ராசுத் தாத்தாவைப்போல
மல்லிகா அக்காவைப்போல
பாபு அண்ணாவின்
பெயர் வைக்கப்படாத
பச்சிளம்பிள்ளையைப்போல
நேற்று பொசுங்கிப்போன
மஞ்சுக்குட்டியைப்போல
ஒருநாள் நீயும் பொசுங்கிப்போவாய் என
சாவுக்குப் பழக உனை நிர்பந்திக்கிறது

“நிராகரிக்கப்பட்ட வாழ்வே சாவெனும் பாடத்தைக்
கற்றுக்கொண்டு அமைதி பெறு.”

மகளே... நாளையின் மணம்
பொசுங்கிய நெடிகொண்டதாகவே இருக்கட்டும்.
வெளிச்சம் மறையும் ஒவ்வோர் இரவும்
உனக்காக நான் புனையும் பாடலின் முதல் வரி
‘இன்றிரவு நீ உறங்கிவிடு’ என்பதே!

உன் பிள்ளைகளுக்கு நீ பாட
நான் கைமாற்றிக் கொடுக்கும்
ஒற்றைச் சொத்தும் இதுதான்.

நடுங்கும் உன் விரல்களை
அமைதிப்படுத்திக்கொண்டு - இன்றிரவு
என் கைகளுக்குள் விழி மூடு மகளே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick