காலிகிராபி - வரவனை செந்தில்

ஓவியங்கள் : ரமணன்

‘ப’போன்றதொரு அமைப்புடன் இரண்டு கால்பந்து மைதானம் அளவிலான அந்த காம்பவுண்டில், எழுத்தால் எழுத்தர்களை வாழவைக்கும் மூன்று முக்கிய அரசு அலுவலகங்கள் இருந்தன. அந்த மாவட்டதுக்கான கிளைச் சிறையும், நான்கைந்து தாசில்தார்களை உள்ளடக்கிய தாலுகா அலுவலகமும், சப்-ரிஜிஸ்டரர் ஆபீஸ் என்கிற பத்திரப் பதிவு அலுவலகமும் இருந்தன. ‘வாயிருந்தால் அழுதுவிடும்’ என்று சொல்லக்கூடிய அளவில், வாடிப்பட்டி தோற்பறையாய் ஓயா உழைப்பு அந்த அலுவலக காம்பவுண்டின் இரும்புக்கிராதி கதவுகளுக்கு எப்போதும் உண்டு. காலை ஏழு மணிக்கெல்லாம் பத்திர எழுத்தர்களின் உதவியாளர்கள் வரிசையாக வந்துவிடுவார்கள். பழைய மல் துணியைக்கொண்டு கையோடு எடுத்து வந்த தட்டச்சு மெஷின்களை அங்கே வைத்துத் துடைக்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த அலுவலக வாசல்களில் உள்ள தரைதான் அவர்களின் அலுவலகங்கள். அதைக் கூட்டிப் பெருக்கி, சாணி தெளித்து வைத்திருப்பார்கள். சாணியின் டிகிரி கலவை ஆளாளுக்கு மாறுபடும். தெளித்த சதுரங்களின் நிறம் கூடக்குறைய இருப்பதைக்கொண்டு இடத்தை அடையாளம் காணலாம். சரியாக எட்டு மணிக்கெல்லாம் பத்திர எழுத்தர்களும் ஸடாம்ப் வெண்டர்களும் வந்துவிடுவார்கள். ‘பத்தி கொளுத்தி, மந்திரம் சொல்லி, முணுமுணுத்து’ என ஆளுக்கு ஒரு ஸ்டைலில் தொழிலைத் தொடங்குவார்கள். பத்திர எழுத்தர்கள் இருபுறமும் சேர்த்து நூறுக்கும் மேலிருப்பார்கள். அவர்களிடம் எழுதக் கொடுத்திருக்கும் ஆள்கள் என அவர்கள் ஒரு முந்நூறு நானூறு பேர் இருப்பார்கள். வேம்பும், அரசும், வாகை மரங்களும் கலந்து கட்டி நிறைந்துள்ள அந்த இடத்தில் எப்போதும் நிழல் மேயும்.

பத்திரப்பதிவு அலுவலகத்தின் அரச மரத்து அடியில், ‘கர்சிவ்’ பூலோகம் பிள்ளை அமர்ந்திருப்பார். அவருக்கு நேர் எதிரே பத்திரப்பதிவு அலுவலக வாசல். பூலோகம் பிள்ளை அமர்ந்திருந்து பார்த்தால், சப்-ரிஜிஸ்டரர் ‘டயாஸில்’ வீற்றிருப்பது பளிச்சென்று தெரியும். அவரிடம் யார் நின்று பேசுகிறார்கள் என்றுகூட தெளிவாகத் தெரியும். அதனால்தான் கூட்டம் அம்மும். அஷ்டமி, நவமியற்ற வளர்பிறை நாட்களில்கூட பதிவு அலுவலக வாசலை மறைக்கும்படி யாரையும்  நிற்கவிட மாட்டார். இங்கிருந்தே ரிஜிஸ்டரர் அய்யாக்களின் மனவோட்டத்தைக் கணித்துவிடுவார். அதனால்தானோ என்னவோ, அவரிடம் மட்டும் கூட்டம் குமியும். ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் பதிவுக்கோ, தாலுகா வேலையாகவோ வந்தால், கூட்டத்தைவிட்டுத் தள்ளி நின்றபடியே, “என்ன பூலோகம்...” என்று சத்தமாகக் கூப்பிட்டு, அதற்குப் பூலோகம் போடும் பவ்யக் கும்பிடைப் பெற்று, அவரிடத்தில் தங்கள் அதிகாரம் செல்லும் என்பதை ருது செய்துகாட்டி நகர்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick