நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அரூப ஓவியம் வாஸ்ஸிலிகாண்டின்ஸ்கி: ஓவிய வெளியில் அரூப இசை

வீன ஓவியக்கலை வளர்ச்சியில் முற்றிலும் புதிதான ஒரு பிராந்தியத்தைக் கண்டடைந்த மகத்தான கலை எழுச்சி வடிவம், அரூப ஓவியம். ஃபாவிஸ ஹென்றி மத்தீஸ் வண்ணத்திலும், க்யூபிஸ பிகாஸோ வடிவத்திலும் நிகழ்த்திய பாய்ச்சல்கள், நவீன ஓவியக்கலை மரபில், அதன் பிராந்தியத்தில், சில புதிய திறப்புகளாக அமைந்தபோதிலும், வாஸ்ஸிலி காண்டின்ஸ்கியின் அரூப வெளிப்பாடுகள் நவீன ஓவியக்கலைவெளியில் ஒரு புதிய பிராந்தியத்தைக் கண்டடைந்தன. அதே சமயம், அரூப ஓவியத்தின் முன்னோடிகள் என மத்தீஸையும் பிகாஸோவையும் காண்டின்ஸ்கி போற்றினார். “மத்தீஸ் – வண்ணம், பிகாஸோ – வடிவம். ஒரு மகத்தான குறிக்கோளின் இரண்டு இலக்குகள்” என்று காண்டின்ஸ்கி குறிப்பிட்டிருக்கிறார். 1905-ல் படைக்கப்பட்ட மத்தீஸின் ‘தொப்பியணிந்த இளம்பெண்’ ஓவியம் (மத்தீஸின் மனைவி அமேலியின் உருவப் படைப்பு) வண்ணத்தில் பிரத்யேக உணர்வுகளை அரூபக் குணத்துடன் வசப்படுத்தியது. பிகாஸோவின் ‘அவிக்நோன் இளம் பெண்கள்’ வடிவத்தில் பகுப்புரீதியான அணுகுமுறையின் மூலம் உருவங்களை அரூப குணத்துடன் வெளிப்படுத்தியது. ஆனால், காண்டின்ஸ்கி 1910-ல் உருவாக்கிய தலைப்பிடப்படாத  ஓர் ஓவியம்தான் முதல் முழுமையான அரூப ஓவியம். முற்றிலுமான ஒரு புதிய அனுபவவெளிக்குப் பார்வையாளனை அழைத்துச் சென்ற படைப்பு. எவ்வித    முன்மாதிரியும் அற்ற ஓவியம். உலகம் முழுவதும் வலுவாகத் தடம் பதித்த ஒரு கலை இயக்கத்துக்கு வித்திட்ட படைப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick