தமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம் : பிரேம் டாவின்ஸி

ற்றே குள்ளமான உருவம். சிவந்த நிறம். வாசிப்பின் வீச்சினைக் காட்டும் அகலமான பரந்த நெற்றி, தடித்த மூக்குக் கண்ணாடி, முழுக்கைச் சட்டை, வேட்டியின் ஒரு நுனியை ஒரு கையில் பிடித்தவாறு பாளையங்கோட்டை தெற்குக் கடைத்தெருவில் நடந்து செல்லும் அவரை ‘வானமாமலை வாத்தியார்’ என்றுதான் ஊர் மக்களுக்குத் தெரியுமே தவிர, ‘தமிழ்நாட்டுக் கோசாம்பி’ என்று தெரியாது. அவர் மறைந்த பிறகு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதும் தெரியாது.

அவர் எந்தக் கல்லூரியிலும் பணியாற்றியது இல்லை. ஆனாலும், இன்றையத் தமிழ் ஆய்வுலகத்துக்கு அவர் பேராசிரியர் நா.வானமாமலைதான். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஒரு பழுத்த வைணவக் குடும்பத்தில் பிறந்தவர். நாற்பதுகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈர்க்கப்பட்ட தோழர்கள் ஆர்.நல்லகண்ணு, ஏ.நல்லசிவம், பாலவிநாயகம், பின்னாளில் புகழ்பெற்ற வழக்கறிஞரான நாங்குநேரி என்.டி.வானமாமலை, பாளை என்.சண்முகம், ஆர்.எஸ்.ஜேக்கப் ஆகியோரோடும் கட்சிப்பணியாற்ற முன்வந்த தோழர். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு, பின்னர் கட்சியின் நெருக்கடியான காலத்தில் பள்ளிப் பணியை உதறிவிட்டு வந்தவர். தான் பிறந்த நாங்குநேரி வட்டத்தில் ஜீயர் மடத்துக்கு எதிராகத் தோழர் நல்லகண்ணு விவசாயிகளைத் திரட்டிப் போராடியபோது அவருக்குப் பின்னிருந்து உதவியவர் அவர். பொதுவுடைமைக் கட்சிக்கான சிறு வெளியீடுகளைத் தமிழாக்கித் தந்தவர். ஒருமுறை பாளை நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. சிறை வாழ்க்கையும் அவருக்கு வாய்த்திருந்தது. 50-களின் கடைசிப் பகுதிகளின்போது கல்வியுலகமும், தமிழ் ஆராய்ச்சி உலகமுமே அவருக்கு ஆர்வமாக இருந்தன. பெரியாரிடமிருந்து பிரிந்து வந்த பொதுவுடைமைக்காரரான சாத்தான்குளம் அ.ராகவன் நட்பும் அதற்கு ஒரு காரணமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick