நீ கடவுளைப் போன்றதொரு பேரியக்கம் - அய்யப்ப மாதவன்

ரிக்கும் வெயிலில் உலர்திராட்சைகள்போல் ஆகிவிட்ட உதடுகள்
மீண்டும் கனிந்துவிட ஒரு முத்தம் கேட்டேன்.
நீயோ நெம்பிவிட முடியாத ஒரு பாறையின்
ஸ்திரத்தன்மையிலிருந்துகொண்டு மறுத்துவிட்டாய்.
என்னிதயம் நெருப்பில் வேகும் இரும்பைப்போல கனன்றுவிட்டது
கோடையில் புழுங்கும் உடலில் உன் ஸ்பரிசமற்றிருப்பது
பெருந்துயரென நீயேன் அறியவில்லை
உன் விரலின் சின்னத் தொடுதல்கூட இல்லாத
இந்தத் தீம்பிழம்பான நாட்களை
எப்படிக் கடந்துவிடுவேன் எனத் தெரியவில்லை
உன் ஒரு முத்தமென்பது என் ஆயுட்காலத்தில்
எத்தனை வருடங்கள் நீட்டிக்குமென்பதை நீ தெரிந்திருக்கவில்லை
ஆம், நீயென்பது வெறும் நீயாகிய உருவம் மட்டுமில்லை
என் வாழ்வையே உயிர்க்கவைத்திருக்கும்
கடவுளைப் போன்றதொரு பேரியக்கம்.
உன்னைக் கண்டுவிட்ட பொழுதிலிருந்து
என் மரணம் தள்ளிப்போயிருப்பதை உணர்ந்திருக்க மாட்டாய்
நீ என் செதில்கள் அலைபாயும் கடல்
உன் ஒவ்வொரு துளியின் தொடுவுணர்விலும்
என் காதல் விஸ்வரூபமெடுக்கும்
அகம் புறம் என யாவும் மறைந்துவிடும் ஆழ்மனதில்
நீ மட்டுமே விழித்திருக்கிறாய்
உன்னைத் தவிரவும் வேறொருவரும் இல்லாத பொழுதுகள்
வாய்க்கப் பெற்ற நான் உன் ஒரு முத்தத்திற்கென
பல நூற்றாண்டுக்கால எரிமலையின் வாயைப்போல
கொதித்து வறண்ட இதழ்களோடு காத்திருப்பேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick