இருத்தலின் அழகு - கார்த்திக் திலகன்

நீயும் நானும் அமர்ந்திருக்கிறோம்.
என் பக்கமாக இருக்கும் மௌனத்தை
நான் உன் பக்கமாக நகர்த்திவைக்கிறேன்.
நீயோ சிரித்துக்கொண்டே அதை
என் பக்கமாக நகர்த்திவைக்கிறாய்.
மொழியின் விளையாட்டைவிட
மௌனத்தின் விளையாட்டு
நமக்குப் பிடித்துவிடுகிறது.
தேவதச்சன் வருகிறான்.
நமக்காக ஒரு ஜன்னலை இழைத்துக் கொடுக்கிறான்.
மரத்தையும் கம்பிகளையும் கொண்டு
துண்டு துண்டு வானத்தை
அதில் பொருத்துகிறான்.
இருத்தலின் அழகை இன்மையின் அழகு பூரணமாக்கிவிடுகிறது.
கவிதை ஒன்றை எழுதி உன்னிடம் நீட்டுகிறேன்.
நீ கவிதையை எடுத்துக்கொள்கிறாய்.
நான் வெற்றுக் காகிதத்தை
திரும்ப எடுத்துச் செல்கிறேன்.
இருத்தலின் பாரத்தை
இன்மை சமப்படுத்திவிட்டது.
லாவோட்சு சொல்கிறான்:
பாண்டத்தின் பலன் அதன் உட்குழிந்த வெற்றுப்பகுதியில்தான் இருக்கிறது.
நண்பா!
நானந்த பாண்டத்தை எடுத்துக்கொள்கிறேன்.
நீயதில் நிரம்பியிருக்கும் வெற்றிடத்தை எடுத்துக்கொள்ளேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick