நெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா

ஓவியங்கள் : செந்தில்

ந்தச் சித்திரை மாதத்தில், மூலங்குடியின் தெற்கு பார்த்த பண்ணைவீட்டுக்கு வந்துசேர்ந்தபோது, சுட்டெரித்த வெயில் தணிந்துபோய் வானம் இருள்கொண்டிருந்தது. சடுதியில் புழுக்கம் எழுந்து உடம்பெங்கும் வியர்வையை வரச்செய்தது. ஆட்கள் யாருமற்று அந்த வீடு தனிமையில் உறைந்துபோயிருந்தது. தனிவீடுகளில் அதிக அளவில் நாய்கள் வளர்ப்பார்கள். ஆனால், இங்கு நாய் இல்லாமலிருந்தது வியப்பு அளித்தது. புறவாசல் பக்கம் எட்டிப்பார்த்தான். வயிறு பசித்தது; காலையில் குடித்த பச்சைப்பயறுக் கஞ்சி போன இடம் தெரியவில்லை. வீட்டின் பின்புறம் நீண்டிருந்த தென்னந்தோப்பில் நிறைய மரங்கள் தெரிந்தன. கருங்குயில் ஒன்று குரல் எழுப்பியது. சட்டென்று சூழல் மாறியது. குளிர்ந்த காற்று உடல் தழுவ மழை பிடித்துக்கொண்டது. கடும்காற்றுடன் பெரும் மழை கொட்டியது. உற்சாகம் பீறிட பழைய நடவுப் பாடல் ஒன்றை முணுமுணுத்தான். பெய்துகொண்டேயிருந்தது மழை.

மரங்கள் அடர்ந்த தோப்பில் பெய்த மழை, அவனுக்குப் பருவமழைக் காலத்தை ஞாபகப்படுத்தியது. நினைவுகள் முன்னும் பின்னுமாகச் சுழன்றன. ஆளில்லாத வீட்டிலிருப்பது பயமாக இருந்தது  என்றாலும், யாராவது ஆட்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தான். அப்போது தொப்பலாக நனைந்த மேனியோடு ஆடைகள் உடம்பில் ஒட்டியிருக்க, சரசரக்க வந்துகொண்டிருந்தாள் நீலப்பெருங்கண்ணி. ‘அவர் சொன்ன பெண் இவள்தானோ?’ ஐந்தடிக்கும் குறையாத உயரத்தில் சற்று உடல் பருத்து, கன்னம் குழிவிழும் சதுரமான முகஅமைப்பில் இருந்தாள். வயது நாற்பதுக்கு இரண்டு மூன்று கூடக்குறைச்சலாக இருக்கலாம். முகத்தில் நல்ல தெளிவு தெரிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick