நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பால்காகின்: தொன்ம மதிப்புகளின் குறியீடு

பின் இம்ப்ரஷனிஸ இயக்கத்தின் மற்றுமொரு மகத்தான படைப்பு சக்தி, பால் காகின் (1848-1903). வான்காவைப் போன்றே அகவுலக வெளிப்பாடுகளில் கவனம் செலுத்தியவர். ஒளி சார்ந்த  கருத்துகளில் இம்ப்ரஷனிஸவாதிகள் கொண்டிருந்த அதீதமான ஈர்ப்புக்கு மாறாக, வண்ணங்களின் பிரத்யேகக் குணாம்சங்களிலும் வண்ணத்தை அர்த்தபூர்வமாக வெளிப்படுத்துவதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தவர் காகின். வண்ணங்கள் தீர்க்கமான வெளிப்பாட்டு சக்தியாக, ஓவியத்தில் அமைய வேண்டும் எனக் கருதியவர். வண்ணங்கள் குறித்த தீட்சண்யமான அணுகுமுறையே படைப்பின் ஆற்றலைக் கட்டமைக்கிறது என்ற கருத்தாக்கத்தை வலுவாகக் கொண்டிருந்தார். எனினும், வான்காவின் அடர்த்தியான, தடிமனான தூரிகைத் திட்டங்களுக்கு மாறாக, காகினின் வண்ணப் பகுதிகள் தட்டையாகவும், தொனி வேறுபாடுகள் அற்றவையாகவும், அரூப வடிவங்களை நோக்கி நகரக்கூடியவை யாகவும் அமைந்தன.
தொடக்கத்தில், இம்ப்ரஷனிஸ பாணியில் நிலக்காட்சிகளை ஒரு தருணத்தின் பதிவு என்பதாக ஒளியின் நுட்பமான ஜாலங்களோடு இவர் உருவாக்கினார். ஆனால், ஓவியத்தை முழு நேரத் தொழிலாகப் பின்னர் ஏற்றுக்கொண்டபோது, தன்னுடைய நாற்பதுகளில் புதிய கலை வெளிப்பாடுகளைக் கண்டடைய வேட்கை கொண்டார். இந்தச் சமயத்தில் இம்ப்ரஷனிஸம் என்பது பொக்கானது, அர்த்தமற்றது என்று அவர் கருதினார். அதற்கு எதிரான கருத்தாக்கங்களில், அணுகுமுறைகளில், கலைச் செயல்பாடுகளில் அவருடைய கவனம் குவிந்தது. இந்தத் தேடல்தான், இறுதியில், ஆற்றல்மிக்க, வீர்யமான காட்சி மொழியைக் கண்டடைய உதவியது. குறியீடுகளும் தொன்மங்களின் பெருமதிகளும் இவருடைய ஓவியங்களின் பிரதான அம்சங்களாகின.

1886-ல், தன்னுடைய 38-வது வயதில், தன் தொழிலைக் கைவிட்டு, பாரீஸிலிருந்து வெளியேறி, பிரான்ஸின் ஒரு மாகாணமான பிரிட்டானியில் உள்ள ‘போன் - அவென்’ என்ற இடத்துக்குச் சென்றதில் இருந்து இவருடைய முழுநேர ஓவிய இயக்கம் தொடங்கியது. அங்கு அவர் வரைந்த, ‘சமயப் பேருரைக்குப் பின்னான பார்வை அல்லது ஒரு தேவதையுடன் ஜேக்கப்பின் மல்யுத்தம்’ என்ற ஓவியம் அதுவரை அவர் மேற்கொண்டிருந்த யதார்த்த மற்றும் இம்ப்ரஷனிஸ பாணி ஓவியங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டிருந்தது. பிரிட்டானியின் பரிசுத்தமான பண்பாட்டுச் செழுமையும், அதன் தொன்மையான நாட்டுப்புற வாழ்வியலும், இன்னமும் அந்த மக்களிடம் காணப்பட்ட இடைக்காலத்திய கத்தோலிக்க இறைப்பற்றும் அவரை வெகுவாக ஆகர்சித்திருக்கின்றன. அங்கு வசிக்கும் மக்கள், வெகு இயல்பாகவும் சகஜமாகவும் அவர்களுடைய மாசற்ற சூழலில் வாழ்வதாக எண்ணினார்.

இந்த ஓவியத்தில் பிரிட்டானியப் பெண்கள், கஞ்சியிடப்பட்ட மொடமொடப்பான அவர்களுடைய ஞாயிற்றுக் கிழமையின் வெள்ளைத் தொப்பிகளோடும் கறுப்பு ஆடைகளோடும் இருக்கின்றனர். அவர்கள் அப்போதுதான் தேவாலயப் பிரசங்கத்தில் கேட்டிருந்த, புனித ஆவியுடன் ஜேக்கப் நடத்தும் சண்டையைத் தங்களுடைய மனக் கண்களால் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் இறைப்பற்றோடு பரிசுத்த ஆவியை வணங்கி நிற்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick