கதைகளின் கதை: குழூஉக்குறி - சு.வெங்கடேசன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள் : ஜி.ராமமூர்த்தி

ரு பனை நீளத்துக்கு நீண்டதொரு தண்ணீர்த் தொட்டியை, முதன்முதலில் மாட்டுச் சந்தையில்தான் பார்த்தேன். சின்னஞ்சிறு வயதில் ஏற்பட்ட அந்த பிரமிப்பு இன்று வரை நீங்கவில்லை. எண்ணற்ற மாடுகள் ஒரே நேரத்தில் குடிப்பதற்கு ஏதுவான தண்ணீர்த் தொட்டி அது. சந்தை நடைபெறும் நாளில் அதில், நீர் இறைத்து ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். மாடுகளின் மீதான கரிசனம் அப்படி...

மாட்டுச் சந்தை நடைபெறாத நாள் ஒன்றில், அந்தத் தொட்டியில் குளித்தால் என்ன என்று தோன்றியது. நண்பர்களை இணைத்துக்கொண்டு மாட்டுச் சந்தையை நோக்கிப் பயணம் போனோம். சந்தையைக் குத்தகைக்கு எடுத்தவர் எங்களை அனுமதிக்கவில்லை. எப்படியாவது அந்தத் தொட்டியில் குளித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தோம். மாட்டுச் சந்தைக்குள் எல்லோரும் சாணி எடுக்க முடியாது. அதற்குத் தனிக் குத்தகை உண்டு. அவர்கள் மட்டுமே சாணி எடுக்க முடியும். அந்தக் குடும்பத்துப் பையன் சில நாட்களிலேயே எங்கள் நண்பன் ஆனான். அவனுடைய அம்மா சொன்னவுடன் அந்தக் குத்தகைக்காரர் எங்களை குளிக்க அனுமதித்துவிட்டார். அதற்கான காரணம் அப்போது எங்களுக்குப் புரியவில்லை. 

வியாழக்கிழமை சந்தை முடிந்ததும் வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்தையைத் துப்புரவு செய்யும் பணி நடக்கும். தண்ணீர்த் தொட்டியையும் சுத்தம் செய்துவைப்பார்கள். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நாங்கள் புறப்பட்டுப் போவோம். எங்களின் வருகைக்காகவே இவ்வளவு வேலையும் நடந்துள்ளதாக மனம்  மகிழ்ச்சியடையும்.

காலையிலேயே போய் தண்ணீரை இறைத்து ஊற்றத் தொடங்குவோம். தொட்டி நிறைவதற்கு மதியம் வரை ஆகும். அதற்குப் பின் நீச்சல் விளையாட்டு ஆரம்பமாகும். நீருக்குள் மூழ்கிப் பார்க்கும்போது, பாறையில் உளியால் கொத்தப்பட்ட வரிவரியான கோடுகள் நெளிந்து நெளிந்து ஆடும். தென்னைமரத்தில் ஏறிச்செல்லும் அணிலைப்போல, நாங்கள் தொட்டியின் வரிகளைக் கடந்து நகர்வோம்.

ஆளரவமே இல்லாத அத்துவானக் காட்டுக்குள் இருந்த மாட்டுச் சந்தைக்கு, வியாழக்கிழமை பிறந்துவிட்டால் எங்கிருந்தோ பலநூறு பேர் வந்து குவிந்துவிடுவார்கள். அதுவும் விதவிதமான மாடுகளுடன். எத்தனை வகையான நிறங்கள். அப்பொழுது ஈன்ற கன்று முதல் இனி அடிமாட்டுக்குத்தான் ஆகும் என்று முடிவுசெய்யப்பட்ட காளை வரை எல்லாவற்றையும் பார்க்கலாம்.

தன்னோடும் தன் குடும்பத்தோடும் ஒன்றாக இருந்த ஓர் உயிரினத்தை விற்க வரும் விவசாயினது தவிப்பும் வாழ்வில் நெருக்கடியில் இருந்து அதை விற்றே ஆகவேண்டிய சூழலும் அவனது முகத்தில் நிழலாடும். விவசாயப் பண்பாடும் வணிகப் பண்பாடும் ஒன்றை ஒன்று ஊடறுக்கும் இடம்தான் மாட்டுச் சந்தை.

மாட்டை விற்பது என்று முடிவெடுத்துவிட்டால், அதனை சந்தைக்குத் தயார்செய்ய வேண்டும். அங்குதான் விவசாயப் பண்பாட்டின் எல்லை முடிந்து, வணிகப் பண்பாட்டின் நிலப்பரப்பு  தொடங்குகிறது. ஒரு வார காலமாவது மாட்டுக்கு நல்ல தீனி போடுவார்கள். பால் மாடு என்றால், முதல் நாள் இரவுக்குப் பின் பாலே பீய்ச்சாமல் நிறைமடுவோடு சந்தைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அதேபோல மாட்டுக்கு நன்றாகத் தண்ணீர்காட்ட வேண்டும். வயிறு நிறைய தண்ணீர் குடித்தால்தான் மாடு தெளுச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறது என்று நம்ப முடியும். வீட்டில் இருக்கும்போது பகலில் இருமுறை தண்ணீர்காட்டினால், சந்தையில் குறைந்தது ஐந்து முறையாவது தண்ணீர்காட்டுவார்கள்.

மாட்டுச் சந்தையில் இவ்வளவு பெரிய தண்ணீர்த் தொட்டி கிணற்றுக்குப் பக்கத்திலேயே இருப்பதற்கும் அன்றைய நாள் முழுவதும் நீர் இறைத்து அதில் ஊற்றிக்கொண்டே இருப்பதற்கும் காரணம் கரிசனம் அல்ல, அங்கு நடைபெறும் ஏமாற்று வேலையின் பகுதியே என்பது பிறகான நாட்களில் புரிந்தது.

மாடுகளை விற்பவர்கள் வாங்குபவர்கள் மட்டுமல்ல, மாட்டோடு சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்காரர்களும் மாட்டுச் சந்தைக்கு வந்துசேருவார்கள். மாடுகளுக்குச் சூடு போடுபவர்கள் மாட்டுச் சந்தையில் தனித்திருக்கும் மரத்தடியில் அமர்ந்திருப்பார்கள். வந்தவர்களே மீண்டும் மீண்டும் வர மாட்டார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வந்து உட்காருவார். யார் வந்து உட்கார்ந்தாலும் “மாட்டு வாகடம் இவருக்கு அத்துப்படி” என்று நாலு பேர் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனாலும், குறிப்பிட்ட ஆள் வந்தால் மட்டுமே தனது மாட்டைப் பிடித்துவந்து சூடு போடுவேன் என்று சொல்லி, காத்திருந்து மாட்டைக் கொண்டுவருகிறவர்களும் உண்டு.

மாட்டுக்குச் சூடு போடுதல் என்பது அடையாளத்துக்காகச் செய்வது அல்ல; அது நோய்க்கான ஒரு மருந்து. ஆதிகாலம் தொட்டு இருந்துவரும் பழக்கம். உதாரணமாக, கொல்லிநோய் வந்தால், மாட்டின் கன்னம் வீங்கி, மயிர் சிலிர்க்கும். நடக்காது. அந்நோய் சரியாக வேண்டுமென்றால், வீங்கின இடத்தில் சிலுவைக்குறி போன்று இரண்டு குறுக்குக் கோடுகளைக்கொண்ட புள்ளடிச்சூடு போட வேண்டும்.

அதேபோல வரிநோய் தாக்கினால், நான்கு கால்களும் வீங்கி, நிற்க முடியாமல் தத்தளிக்கும். அப்படி இருந்தால், அரைவட்டத்தில் ஒன்றுக்கு அருகில் ஒன்றாக இரண்டு கோடுகள் போட வேண்டும்.

பெருஞ்சிலந்தி நோய் தாக்கினால், மாட்டின் கால்கள் வீங்கி, மயிர் சிலிர்க்கும். அவற்றைச் சரிசெய்ய ஆறு என்ற எண்ணை மேலேயும் சுழித்துப் போடவேண்டும். ஆனைச்சிலந்தி நோய் தாக்கினால், முன்னங்கால் வீங்கும். அதற்கு பட்டைபோல மூன்று கோடுகளைப் போட்டு இரு பக்கமும் புள்ளிவைக்க வேண்டும். இதுபோல மாட்டின் நோய்க்கு ஏற்ப சூடுகளைப் போட்டு அனுப்புவார்கள்.

லாடம் அடிப்பவர்களும் விதவிதமாகத்தான் இருப்பார்கள். மிகப் பக்குவமாகவும் லாகவமாகவும் லாடம் அடிப்பதில் சிறந்தவர்களைத் தேடி தங்களின் மாட்டைக் கொண்டுவந்து நிறுத்துவார்கள். மாட்டின் குளம்புக்கு ஏற்ப லாடத்தைத் தேர்வுசெய்து அடித்து, அதன் முனையைப் பக்குவமாக மேல்நோக்கி அமுக்கிவிடுவார்கள்.

எங்களது வீட்டில் இருந்த வண்டி மாடுகளுக்கு லாடம் அடிக்க, இருமுறை சந்தைக்குக் கூட்டிப்போயும்கூட அடிக்காமல் திரும்பினார் என் தாத்தா. ஏனென்று கேட்டால், “கோவிந்தன் வரலடா, அவெந்தான் மாடறிஞ்சு அடிக்கிறவெ” என்று சொல்லுவார். “கோவிந்தன் அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டால், “அவெ யானைக்கே லாடம் அடிச்சவன்டா” என்று சொல்லுவார். நீண்டகாலம் அது உண்மை என்றே நான் நம்பியிருந்தேன்.

‘நெல்லூர் மாடு கறவைக்குச் சிறந்தது; மெதுவான வேலைக்குத் தகுந்தது. புங்கனூர் குட்டை மாடு பாலுக்குப் பெயர்பெற்றது. ஓம்பளச்சேரி காங்கேய மாடுகள் உழவுக்கும் வண்டிக்கும் பயன்படுபவை. ஆலம்பாடி மாடு வேலைக்கு நன்கு ஈடுகொடுக்கும்’ என்று மாட்டுச் சந்தையில் கேட்கும் குரல்கள் பலநேரம் வீட்டிலும் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்.

விவசாயக் குடும்பங்களில் தலைமுறை அறிவு, எப்போதும் பேச்சுக்குள் மிதந்துகொண்டே இருக்கும். மண், தாவரங்கள், மாடுகள், பருவகாலங்கள், விண்மீன்கள் எனக்  களைபிடுங்கிக்கொண்டும் நீர்பாய்ச்சிக்கொண்டும் அவர்கள் சொல்லிய செய்திகள்தாம் எவ்வளவு முக்கியமானவை. காலத்தின் மிகநீண்ட பயணத்தில் வந்துசேர்ந்த அவற்றின் இறுதிக்கால சாட்சிகள்தாம் நாமா?

‘காவல் கோட்டம்’ நாவலுக்கான கள ஆய்வில் இருந்தபோது மாடு திருடி அனுபவம் பெற்ற பலரைச் சந்தித்தேன். மாடுகளைப் பற்றிய விவசாயிகளின் அறிவுக்கும் வணிகர்களின் அறிவுக்கும் முற்றிலும் மாறுபட்ட ஓர் அறிவுச்சேகரம் அவர்களிடம் இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick