வேட்டைக்காரர்கள் - அ.முத்துலிங்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘மதிய உணவுக்கு வாருங்கள்.’ இப்படித்தான் அழைப்பு வந்தது. அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்தில் இருந்து சிலர் கூட்டாக  அனுப்பிய அழைப்பு அது. பல வருடங்களுக்கு முன்னர் இவர்கள் எல்லோரும் மாணவர்களாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டிருக்கிறார்கள். மகப்பேறு மருத்துவர், விஞ்ஞானி, பேராசிரியர் மற்றும் மேலாண்மை ஆலோசகர் எனப் பல துறைகளைச் சார்ந்தவர்கள். இவர்களிடமிருந்த ஒரே ஒற்றுமை எல்லோருமே வேட்டைக்காரர்கள்.

‘நிச்சயம் வாருங்கள்’ என்றார் அழைத்தவர் மறுபடியும். மனைவி  சொன்னார், ‘நானும் ஏதாவது செய்து கொண்டு வருகிறேனே.’ அவர்  ‘வேண்டாம். எதற்கு சிரமம்?’ என்றார். அத்துடன் சம்பாஷணை முடிந்தது.

மொன்ரானா மாநிலத்தில் வசிப்பவர்களில் பலர் வேட்டைக்காரர்கள். செப்டம்பர் மாதம் தொடங்கியவுடன் வேட்டையாடும் உரிமத்துக்கு விண்ணப்பித்துவிடுவார்கள். எல்லோருமே தங்கள் தொழில்களில் மூழ்கியவர்கள். திருமண நாளை மறந்துவிடுவார்கள். பிறந்த நாளை மறந்துவிடுவார்கள். விடுப்பில் உல்லாசப் பயணம் போவதைக்கூட மறப்பார்கள். ஆனால், வேட்டைக்கான உரிமத்துக்கு  விண்ணப்பம் அனுப்ப மறக்கவே மாட்டார்கள். ஒவ்வொரு வருடமும் காட்டுக்குள் தனியாகவோ, கூட்டாகவோ சென்று மிருகங்களை வேட்டையாடுவார்கள். அந்த இறைச்சியை, பல மாத காலம் குளிர் பெட்டியில் சேமித்துவைத்து உண்பார்கள். அவர்கள் கூடும் இடங்களில் பேச்சு முழுதும் வேட்டையைப் பற்றியே இருக்கும். என்ன விலங்கு? என்ன எடை? எந்தக் காடு? ஆகிய விடயங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.

விருந்து நாள் அன்று ஏதாவது சமைத்துக்கொண்டுபோக வேண்டும் என்ற எண்ணம் என் மனைவிக்கு மீண்டும் தோன்றியது. நேரத்தை மாற்ற மறந்த கடிகாரத்தில் அலாரம் வைத்ததால், காலை ஆறு மணிக்கு அடிக்கவேண்டிய அலாரம் அதிகாலை நாலு மணிக்கே அடித்தது. மனைவி, அந்த நேரம் எழும்பி அவசரமாகச் சமைத்தார். ‘எதற்காக இப்படிக் கஷ்டப்பட வேண்டும்?’ என்று கேட்டபோது, ‘எப்படி வெறும்கையோடு போவது? கத்திரிக்காய்க் குழம்பு அவர்களுக்குப் பிடிக்கும்’ என்றார். ‘மாணவராக இருக்கும்போது எல்லாமே பிடிக்கும், இப்பொழுது அவர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ?’ என்றேன்.  ஆனாலும், அவரைத் தடுக்க முடியவில்லை. குறித்த நேரத்தில் விருந்துக்கு அழைத்தவரின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

அன்று முழுக்க வேட்டைக்காரர்களின் கதைகள்தான். ஒவ்வொருவரும் தங்கள் வேட்டை அனுபவத்தையும்,  பிரதாபத்தையும்  வர்ணித்தார்கள். ஒருவர் கதையை முடிக்கும்போது இன்னொருவர் தொடங்கினார். விருந்துக்கு வந்தவர்களிலும் பார்க்க வராத ஒருவர் கதையும் அங்கே அடிபட்டது. ‘ஜோ’ என்பது அவர் பெயர். அவர் ஒரு கோடீஸ்வரர். விருந்துகளுக்குப் போகும்போது தனக்குப் பிரியமான ஆறு பியர் போத்தல்களை எடுத்துச் சென்று அவற்றை அவரே குடிப்பார். விருந்து முடிந்ததும் மீதமான பியர் போத்தல்களைத் திரும்பவும் வீட்டுக்கு எடுத்துச் செல்வார். அந்த விசேடமான பியரை மற்றவருடன் பகிர மாட்டார். அணு ரகஸ்யத்தைப் பாதுகாப்பதுபோல பியர் ரகஸ்யத்தைக் காப்பாற்றுவார். கஞ்சன் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், சில விடயங்களில் தாராளமாகவும் இருப்பார்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் 50 மில்லியன் பைசன்கள் (ஒருவிதமான எருமைகள்) இருந்தன. சிவப்பு இந்தியர்களுக்கு அவைதாம் உணவு. அவை வலசை புறப்படும்போது, அவர்கள் அவற்றின் பின்னாலேயே அலைவார்கள். வெள்ளையர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தபோது, சிவப்பு இந்தியர்கள் எதிரிகள் ஆனார்கள். அவர்களுடைய நிலம் வெள்ளையர்களுக்குத் தேவை. சிவப்பு இந்தியரை அழிக்க வேண்டுமென்றால், அவர்களுடைய உணவை அழிக்க வேண்டும். பைசன்களைச் சுட்டுத் தள்ளினார்கள்.

100 வருடங்களுக்கு முன்னரே, அமெரிக்காவில் பைசன்கள் கிட்டத்தட்ட அழிந்தேவிட்டன. இப்பொழுது அவை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்படுகின்றன.

பியர் பிரியரான கோடீஸ்வரர் ஜோ, பல ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி அங்கே பைசன்களைச் சுதந்திரமாக உலவ விட்டார்.  அவர் அவற்றைப் பராமரிப்பது இல்லை. காட்டிலேயே இயற்கையாக அவை வாழ்ந்தன. வருடத்தில் ஒருமுறை வேட்டைக்குச் சென்று ஒரேயொரு பைசனைச் சுட்டுக் கொல்வார்.  இறைச்சியாக  அவருக்கு 700 றாத்தல் கிடைக்கும். அதை ஆழ்குளிரில் பாதுகாத்து, வருடம் முழுக்க உண்பார். நண்பர்களுக்கும் பகிர்ந்து அளிப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick