பித்தம் முற்றிய மதயானை! - வெய்யில்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நூல் அறிமுகம்

‘அவள் தன் வாழ்வின் துயர் துடிக்கும்
உண்மைகளை
மீண்டும் மீண்டும் கவிதைகளில்
புதைத்துவைத்ததால்தான்
அவை மீண்டும் மீண்டும் உயிர்பெறும்
வலிமையைப் பெற்றன.
தளதளவெனக் கொதிக்கும் 
உண்மைகளைப் பாதுகாக்க
அவளுக்கு இல்லை வேறு நிலம் இந்தப் பூமியில்’


கொதிக்கும் உண்மைகளைப் புதைத்துவைக்க கவிதையைத் தவிரவும் வேறு ஒரு நல்ல நிலம் இல்லைதான். கவிதை என்ற வடிவத்தின் மீதான குட்டிரேவதியின் இந்த அணுகுமுறையும் அதன்மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பும்தான் அவரை தொடர்ந்து காத்திரமாக இயங்கச் செய்கிறது.

‘காலவேக மதயானை’ என்ற தொகுப்பின் தலைப்பு இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் உள்ள ஒரு பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட பாடலில் உதயகுமரனின் புகழை எடுத்துரைக்கும் விதமாக ‘காலவேகம்’ என்னும் மதயானையை அவன் அடக்கியதாகச் சொல்லப்படுகிறது. குட்டிரேவதி, இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பதை இரண்டு வகைகளில் நாம் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். ஒன்று உதயகுமரனால் அடக்கப்பட்ட அந்த மதயானையை அடங்க மறுக்கும் ஒரு ‘பெண் மதயானையாக’ கவிதைகளின் வழியே எதிர் மறுஆக்கம் செய்வது. இரண்டாவது உதயகுமரனின் அன்பினால் அடக்கப்படுவதை விரும்பும் யானையின் குரலாக ஒலிப்பது. இந்த இரண்டு பண்புகள்கொண்ட கவிதைகளும் தொகுப்பில் நிறைந்திருக்கின்றன. அதேசமயம், காலம் மற்றும் விசை சார்ந்த கவிதைகள், மதமேறிய மொழியாலான காதல் கவிதைகள் என உள்ளடக்கம் சார்ந்து முற்றிலும் வேறொரு வகையிலும் முழுத் தொகுப்பையும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடிகிறது.

‘பித்தம் முற்றிய ஒரு மதயானை ஒளிந்திருக்கிறது
நம் ஒவ்வொரு தசை முறுக்கிலும்’


என்ற வரிகளின் வழியே குட்டிரேவதி நமது அனுமானத்தை உறுதிப்படுத்தவும் செய்கிறார்.

ஏதொன்றையும் மையம்கொள்ளாது கலவையான பாடுபொருள்களைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பில் சூரியன் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு குறியீடாக இருக்கிறது. கருப்பையில் ஏந்தும் சூரியன், காலில் விழும் சூரியன், தனக்காக வளரும் சூரியன், மிருகமாகும் சூரியன், குடைந்து செல்லக்கூடிய பெரும்பாறையான சூரியன் என ஏராளமான சூரியன்கள் இந்தத் தொகுப்பு எங்கும் பல்வேறு அர்த்தக் குறிப்பான்களாகக் கவிச்செறிவோடு சுழன்று திரிகின்றன.

‘தனிமையின் தருணங்களில்
சூரியன் மொத்தமுமாய்
என் ஒருத்திக்கு ஆகி வளர்கிறது இவ்வேளையில் நீங்கள் எல்லோரும்
எங்கே சென்றீர்கள்’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick