அதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்! - சுகுணா திவாகர் | Book Review Ippadikku evaal - Sukirtharani - Vikatan Thadam | விகடன் தடம்

அதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்! - சுகுணா திவாகர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நூல் அறிமுகம்

வீன இலக்கியத்தின் தொடக்ககாலத்தில் அக உணர்வுக் கவிதைகளே அதிகம் எழுதப்பட்டன. அதிலும், ‘தமிழர்களின் சமகாலத்தோடு தொடர்புடைய சொற்களைப் பயன்படுத்துவது தீட்டு’ என்கிற மனோபாவத்தோடு மேட்டிமைக் கவிதைகள் படைக்கப்பட்டன. படைப்பாளிகளுக்கு என்று புனித வட்டங்கள் சூட்டப்பட்டு, அவர்களது தனிப்பட்ட அவஸ்தைகளும் மன உணர்வுகளுமே படைப்புகளின் பாடுபொருள்கள் ஆயின.

‘படைப்புகளில் அரசியலை எழுதுவது கேடானது’ என்ற மனப்போக்கைக் கொண்டவையாகவே அவை இருந்தன. தலித்தியம், பெண்ணியம், திருநங்கைகள் உரிமை, விளிம்புநிலை மக்களின் உணர்வுகள், படைப்புகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் ஆகியவை குறித்த உரையாடல்கள் தொடங்கியபோது தமிழ் இலக்கியத்துக்கு வீரியமிக்க பெண் கவிஞர்கள் கிடைத்தனர். அதில் முக்கியமானவர் சுகிர்தராணி. தனித்துவமிக்க தலித் மொழியையும் உடலைக் கொண்டாட்டமாக முன்வைக்கும் பெண்மொழியையும் கொண்டவை சுகிர்தராணியின் கவிதைகள். இவரது ஆறாவது கவிதைத் தொகுப்பான ‘இப்படிக்கு ஏவாள்’ நூலும் தனித்துவமிக்க மொழியைத் தாங்கியிருக்கிறது. இந்தத் தொகுப்பில், பெரும்பாலானவை அக உணர்வுக் கவிதைகளாக இருந்தாலும், அவை அரசியலைப் பேசக்கூடியவை என்பது முக்கியமானது.

மகளுக்கும் தாய்க்கும் இடையிலான உரையாடலாக விரியும் ‘ஆதிநிலம்’ கவிதை பெண்மொழிக்கு அழகிய சாட்சியம்.

‘மண் நிரப்பப்பட்ட சாலையில்
மகளோடு நடந்துகொண்டிருந்தேன்.
நேற்றவள் முத்தமிட்டதன் பற்கடிப்பில்
காலடியில் கிடக்கும் ஓர் ஆறென
அன்பு வழிந்து ஓடியது’
என்று தொடங்கும் கவிதை,
‘நீ வெளிப்பட்ட இடம் பற்றிச் சொல்லேன்
பிரபஞ்சத்தின் ஊற்றுக்கண் அது
சொல்லிக்கொண்டிருந்தவள்
ஆடையோடு சேர்த்து
அவ்விடத்தை முத்தமிடுகிறாள்.
மெதுவாக மலர்கிறதென் கருப்பை’


என்று முடியும்போது பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் நேசத்தைப் பொதிந்துவைத்திருக்கும் கவிதையாக மிளிர்கிறது.

சுகிர்தராணி, தமிழாசிரியராக இருப்பதால் பழந்தமிழ் இலக்கிய வாசிப்பும் அவருடைய கவிதைகளில் மிளிர்கின்றன. நிலத்தோடு பிணைக்கப்பட்ட வாழ்க்கை சமகால அனுபவங்களோடு இந்தக் கவிதைகளில் பதிவாகியிருக்கின்றன. ஆணாதிக்கத் திமிரால் ஆசிட் வீசப்பட்டு சிதைக்கப்பட்ட பெண்களின் துயரைச் சொல்லும் ‘தேவதைகள் சாட்சியாவதில்லை’ என்ற கவிதை, நம் காலத்தின் அவலத்தை அழுத்தமாகச் சொல்கிறது.

ஆசிட் வீசுபவனை நோக்கி நேரடியாகப் பேசும் கவிதை இப்படியாக முடிகிறது...

‘திராவகத்தை மீண்டும் வீசு.
உன் முகத்தை உனக்கே காட்டும்
ஒரு துர்தேசத்தின் கொடுஞ்சிலையாய்
புன்னகை உறைந்த தேவதைகள்
ஒருபோதும் சாட்சியாவதில்லை’


வன்மத்துடன் ஒரு பெண்ணின் அழகைச் சிதைக்க ஆசிட் ஊற்றுபவன்தான் மானுடத்தின் கொடூர முகம் என்று அழுத்தமாக அறைந்து சொல்கிறது இந்தக் கவிதை.

இலங்கை ராணுவத்தால் சிதைக்கப்பட்ட இசைப்பிரியா தொடங்கி சவுதி அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிசானா நபீஃக் வரை பல வரலாற்று மரணங்களைத் தன் கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார் சுகிர்தராணி.

இரண்டு வகைகளில் சுகிர்தராணியின் இந்தத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாக இலக்கியங்கள் என்பவை படைக்கப்பட்ட கால நிகழ்வுகளின் ஆவணங்களாக மதிக்கப்படுபவை. அதுவும் வெறுமனே தகவல் தொகுப்பாகவோ பதிவுகளின் குவியலாகவோ இல்லாமல், அழகியலோடு உணர்வுகளை வாசகர்களுக்குக் கடத்தும் இலக்கியங்களே காலங்கடந்தும் போற்றப்படுகின்றன. அந்த வகையில், சமகாலத்தில் பல்வேறு நிலப்பரப்புகளில் பெண்கள்மீது ஏவப்பட்ட வன்முறைகளை அழகியலோடு பதிவு செய்கின்றன சுகிர்தராணியின் கவிதைகள். இரண்டாவது குறிப்பிட வேண்டிய அம்சம், அக உணர்வுக் கவிதைகள் அரசியல் கவிதைகளாகப் பரிணமிக்கும் இடம். வெறுமனே தனது தனிப்பட்ட உணர்வுகளைப் பரவசங்களாகவோ கையறுநிலைப் புலம்பல்களாகவோ பதிவு செய்யப்படும் இலக்கியங்கள் மக்களிடமிருந்து விலகி நிற்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் அக உணர்வுக் கவிதைகள்தாம். ஆனால், அதே நேரத்தில் காலத்துக்கு அப்பால் பெண்களின் மன உணர்வுகளைப் பதிவுசெய்யும் தொடர்ச்சியை நம்மால் உணர முடிகிறது. அதனாலேயே அழகியலுடன் கூடிய அரசியல் கவிதைகளாக இவை தமக்கான இடத்தை உருவாக்கிக்கொள்கின்றன.

ஆதாம் காலத்தில் இருந்து தம்மீது விரியும் அதிகாரத்தை விசாரணை செய்யும் ‘இப்படிக்கு ஏவாள்’ முக்கியமான தொகுப்பு.

இப்படிக்கு ஏவாள் - சுகிர்தராணி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்:
72, விலை: ரூபாய் 75

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick