வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள் : ராஜ்குமார் ஸ்தபதி

திகாலம் தொட்டு தமிழின் இலக்கிய வரலாற்றுச் சங்கிலியைக் கொஞ்சம் ஆராய்ந்தோமானால், அது கடந்துவந்த மொழிப்பாதையை அறிந்துகொள்ளலாம். சமஸ்கிருதச் சொற்கள் கலந்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைகாலத் தமிழும், அந்த மொழியில் இயங்கிய எழுத்தாளர்களும், அவர்கள் கொண்ட லட்சியவாதம், விடுதலை, அறம், நீதி, நேர்மை ஆகியவற்றை முக்கியத்துவப்படுத்தி படைப்பாக்கினார்கள். அந்த அளவில் ஒரு படைப்பை உருவாக்க அத்தகைய மொழி போதுமானதாக இருந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, பி.ஆர்.ராஜமய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’, பெரும்பாலும் கவிஞராகவே அறியப்பட்ட பாரதியாரின் உரைநடைகள் போன்றவற்றில் அந்த மொழி சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் உருவான ‘குடியாட்சி’ போன்ற பத்திரிகைகளில் திரு.வி.கல்யாணசுந்தரனார், மறைமலையடிகள், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பாவாணர் போன்றவர்கள் இலக்கணச் சுத்தத்துடன்கூடிய எழுத்துநடையைக் கையாண்டார்கள். அந்த மொழியை, செந்தமிழ் மொழி, தனித்தமிழ் மொழி என்று அவர்கள் அழைத்தார்கள். அந்த மொழியானது சற்றுக் கடினமானதும் இயல்பான பேச்சுக்கு உகந்ததாக இல்லாத மொழியாகவும் இருந்தது. பெரும்பாலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவதற்கே அது பயன்பட்டது.

அதற்கு அடுத்தபடியாகத் தமிழ்மொழியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் என்றால், திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றி, பேசியும் எழுதியும் வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, அன்பழகன், மதியழகன், கா.காளிமுத்து, சத்தியவாணிமுத்து போன்றோரைச் சொல்லலாம். இவர்கள் எழுதிய எழுத்துகளும், பேச்சுகளும் ‘அடுக்குமொழி’ என்றும், ‘அலங்கார மொழி’ என்றும் அழைக்கப்பட்டன. பெரும்பாலான இளைஞர்களால் பின்பற்றப்பட்ட இந்த மொழிநடையில் எழுதப்பட்ட பல்வேறு ஆக்கங்கள், சமூகம் சார்ந்த பிரச்னைகளை முன்னிலைப்படுத்தின. பெண் விடுதலை, வரதட்சணை, தீண்டாமை, அந்நிய மொழி எதிர்ப்பு, நாத்திகவாதம் முதலியவற்றை மையப்படுத்தின.

சுதந்திரத்தையும் விடுதலையையும் மையப்படுத்திய படைப்பாக்கங்கள், சுதந்திரத்துக்குப் பின்னர், எப்படி முக்கியத்துவம் அற்று, வெற்று ஆவணங்களாக மட்டுமே மாறிப்போனதோ அதேபோல, திராவிடக் கட்சிப் பிரமுகர்களின் சமூகப் பிரச்னைகள் பற்றிய ஆக்கங்களான பெண் விடுதலை, வரதட்சணை, தீண்டாமை, கலப்பு மணம், விதவை மறுமணம், மொழிக் கொள்கை போன்றவை, சட்டப் பாதுகாப்பு அந்தஸ்து பெற்ற பின்னர், முக்கியத்துவமற்று பின்னர் நீர்த்து காணாமலேயே போய்விட்டன. திராவிடக் கொள்கை சார்ந்த தலைவர்களும் தாங்கள் பேசுவதையும், எழுதுவதையும் முற்றாக மாற்றிக்கொண்டனர். கால ஓட்டமும், ஊடகங்களின் தாக்கமும், உலக மயமாக்கலால் ஏற்பட்ட பொதுத்தன்மை, நவீனத்துவம், விஞ்ஞான வளர்ச்சி, தொடர்பியல் வேகம் இவற்றால் முற்றிலும் புதிது புதிதாகத் தோன்றும் கலாசாரங்கள், மேற்கத்திய வாழ்வியல், உணவு, உடைகள் போன்றவற்றாலும் இதுவரை நாம் பயன்படுத்தி வந்த மொழிப்பண்புகள், அடையாளங்கள் முற்றாக மாறிவிட்ட நிலையில்தான் புதுமைப்பித்தனால் புதுவடிவ மொழி தோற்றுவிக்கப்படுகிறது.

புதுமைப்பித்தனால் அவருடைய படைப்புகளில் பயன்படுத்தப்பட்ட அந்த மொழியை நம்முடைய வசதிக்காகப் ‘பத்திரிகை மொழி’ என்று வைத்துக்கொள்ளலாம். ‘மணிக்கொடி’ காலம் தொட்டு இன்று வரை தமிழ் மொழியில் பெரும்பாலான எழுத்தாளர்கள் பயன்படுத்தும் மொழியாக இதுவே விளங்குகிறது. மௌனியும், லா.ச.ராவும் இம்மியளவு வேறுபடலாம். சமூகத்தின் அத்தனை பிரச்னைகளும், வரலாற்றுப் புதினங்கள் உட்பட எழுதப்பட்டது இந்தப் ‘பத்திரிகை மொழி’யில்தான்.

ஆனால், வட்டாரம் சார்ந்த, தனித்த கலாசார அடையாளங்களுடன் வாழும் இனக்குழுக்கள், பழங்குடியினர், தலித்துகள், கடல்சார்வாழ் பரதவர்கள், நாடோடிகள், திருநங்கைகள் போன்றோரின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்ட இலக்கியப் படைப்பாக்கங்களுக்கு பத்திரிகை மொழிநடை பயன்படவில்லை அல்லது போதவில்லை. ஆகவே, மேலே சொன்னவர்களின் தனித்த வாழ்க்கை அடையாளங்களைப் பதிவுசெய்ய, வேறு ஒரு மொழிநடையைக் கண்டடைய வேண்டிய கட்டாயத்தில் வட்டார மொழியின் முக்கியத்துவம் உணரப்பட்டது.

வீன தமிழ் இலக்கியப் பரப்பில் வட்டார எழுத்து என்றும், வட்டார இலக்கியம் என்றும் அடையாளம் காணப்பட்ட ஏராளமான இலக்கியப் பிரதிகளும் எழுத்தாளர்களும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்களா? அவர்களின் இலக்கிய ஆக்கங்கள் புதியவர்களால் பின்பற்றக்கூடிய இலக்கிய ஆக்கங்கள்தானா? அப்படி என்றால், அவர்களைத் தொடர்ந்து உருவான வட்டார இலக்கியங்கள் எவையெவை? முழுக்க முழுக்க வட்டார எழுத்தால் எழுதப்படும் இலக்கியங்களின் இன்றைய நிலை என்ன? வட்டார எழுத்தை தங்களது அடிநாதமாகக் கொண்ட தலித் இலக்கியங்கள், காத்திரமான இலக்கியப் படைப்புகளாக, காலத்தை எதிர்த்துப் பேசப்படும் இலக்கியங்களாக இருக்கின்றனவா, இல்லையென்றால் கால வெள்ளத்தில் காணாமல் போய்விட்டனவா என்று சற்றே சிந்தித்தோமானால், தற்கால நவீன தமிழ் இலக்கியங்களில் வட்டார இலக்கியப் போக்குகளை கீழ்க்கண்டவாறு அவதானிக்கலாம்.

முதலில் வட்டார இலக்கியத்துக்கான வரையறைகள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேறுபடும். கொங்கு வட்டாரத்தில் புழக்கத்தில் உள்ள சொற்கள், கரிசல் வட்டாரத்தில் வேறுபடும். தஞ்சை வட்டாரச் சொற்கள் நாஞ்சில் நாட்டு வட்டாரச் சொற்களின் அர்த்தத்தில் வேறுபடும். ‘மல்லாட்டை’ என்று சுட்டப்படும், வேர்க்கடலை பற்றிய சொல், கடலை மிட்டாய்க்குப் பெயர்பெற்ற கரிசல் வட்டாரத்தில் புரியாது. நிலக்கடலை என்றோ வேர்க்கடலை என்றோ சொன்னால்தான் புரியும். மொழியைப் போலவே ஒவ்வொரு வட்டாரத்திலும் தொழில்களும் வேறுபடும். அது  மொழியிலும் படிந்து செயல்படும். கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய நாஞ்சில் வட்டாரத்தில் முக்கியத் தொழில்கள் தும்பு, முந்திரி, ரப்பர் என்றால், கரிசல் வட்டாரத்தை உள்ளடக்கிய தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தீப்பெட்டி, பட்டாசு, அச்சு போன்றவை முக்கிய தொழில்கள். இவ்வாறு மாவட்டம் தோறும் மாறுபடும் தொழில்களைப்போலவே அந்தந்தப் பிரதேச மக்கள் பேசும் மொழியும், நடையும், உச்சரிப்பும், அர்த்தங்களும் மாறுபடுவதிலும், அவற்றை உள்ளடக்கிய இலக்கியங்களும், உரைநடைகளும் இடத்துக்கு இடம் மாறுபடுவதும் இயல்பானதே. முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பி வாழும் கரிசல் பிரதேசத்தின் மானாவாரி சாகுபடிமுறை மக்களின் வாழ்வும், ஆற்றுப் பாசன விவசாயத்தை பிரதானமாகக்கொண்ட தஞ்சைவாழ் மக்களின் வாழ்வும், பேச்சும், கலாசாரங்களும் நிச்சயம் வேறுபாடு கொண்டவைதாம்.

ஆக, அந்தந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் எழுத்துகள்,  ‘வட்டார எழுத்து’ அல்லது ‘வட்டார இலக்கியம்’ என்று சுட்டப்படுகின்றது. இதுபோன்ற வட்டார எழுத்துகளில் பாத்திரங்கள் பேசுகின்ற மொழி, குறிப்பிட்ட வட்டார மொழியாக இருக்கும். வாசகன் இந்த எழுத்து, இந்த வட்டார மக்களின் வாழ்க்கையைப் பற்றிய பதிவு என்பதை உணர்ந்துகொள்வான். பொதுவான இலக்கிய நடையிலிருந்து வட்டார இலக்கியம் வேறுபடுவதே பாத்திரங்களின் பேச்சு மொழி உரையாடல்களிலும், அதன் தொழில் சார்ந்த இயங்கு தளத்திலும்தான். தோல் தொழிற்சாலை பற்றிய எழுத்து என்றால், உடனே திண்டுக்கல் வட்டாரம் சார்ந்த படைப்பு அது என்று நாம்  அவதானித்துக்கொள்ள இயலும்.

இவ்வாறு தனித்த அடையாளங்களுடன் காத்திரமான படைப்புகளாக இயங்கிய எழுத்துகளுக்கு முன்னோடி எழுத்தாளராக, கொங்கு நாட்டின் வட்டாரப் பேச்சுகளையும், பாத்திரங்களையும், துல்லியமாகச் சித்தரித்துக் காட்டிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரத்தை ‘வட்டார எழுத்தின் முதன்மைப் பிதாமகன்’ என்று குறிப்பிடலாம். அவருக்குப் பின்னர், அவரைப்போலவே அந்தந்தப் பிரதேச மக்களை முதன்மைப்படுத்தி எழுதிய எழுத்தாளர்களை, முதல் தலைமுறை வட்டார எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்திக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick