நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வேர் பற்றிய நிலம் காய்ந்து, பாளம் பாளமாய் வெடித்து, பச்சைவயல்கள் பொன்னிறக் கதிர்களாய் பால்முற்றும் காலத்தில், காவிரியும் கைவிட வான்மழை நோக்கி நின்ற கண்களும் பஞ்சடைத்துப்போயின. இன்று பொட்டல் வெளிகளில் நீர் தேடி அலைக்கழியும் காவிரிப்படுகைப் பெண்களின் நிலை, பெண்கள் காலம்காலமாக வறுமையோடு நடத்திவரும் போராட்டத்தின் ஒரு களமாய் விரிகிறது.

பெண் வாழ்வின்-இருப்பின் தவிர்க்க முடியாத பாகம், பெண் உழைப்பு. உழைக்காத பெண்ணொருத்தி உலகில் இல்லை. இந்தியாவில் 60 சதவிகிதத்துக்கும் மேலான பெண்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். காவிரிப்படுகை, விவசாயப் பெருநிலம்.

வறட்சிநிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள சென்ற பயணத்தில் கீழ்வேளூரில் உள்ள ஓர் அடகுக்கடைக்குச் சென்றபோது, அங்கே ஓர் அட்டையில் பளீரிடும் கவரிங் கம்மல்கள் கண்களைப் பறித்தன. தங்களது கடைசிப் பொன்னான காதணிகளையும் அடகுவைத்துவிட்டுச் செல்லும் பெண்கள், பெற்ற கடனில் வாங்கியணிந்து செல்லும் அந்தக் கம்மல்கள் அந்த நிலம் காணும் வறுமையின் உச்சத்தைச் சொல்லின. அதிகமாகத் தாலிக்கொடிகள் அடகுக்கு வருவதாக அடகுக்கடைக்காரர் சொன்னார். தாலிக்கு மாற்றுத்தாலி தேவை இல்லை, அது மறைக்கக்கூடியது என்பதால்.

கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்தபோது, பெரும்பாலானவர்களின் காதுகளில் அந்தப் புத்தம் புதிய கவரிங் கம்மல்களைப் பார்க்க முடிந்தது. அது, கேட்காமலேயே எங்களுக்கு நிலைமையைப் பறைசாற்றியது. மிகச்சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் முற்றிலுமாக சாகுபடி இழந்திருக்கிறார்கள். விவசாயி என்கிற அடையாளம் நில உரிமை ஆவணங்கள் சார்ந்து கணக்கிடப்படுவதால், பெண்கள் விவசாயிகளாகப் பார்க்கப்படுவது இல்லை. இந்த ஆண்டின் வறட்சியில், பல பெண் விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். இதுவரை விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் அதிகமாக நிகழ்ந்த பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆந்திர மாநிலங்களில்கூட நிகழாத இந்தப் ‘பெண் விவசாயிகளின்’ தற்கொலை/அதிர்ச்சி மரணங்கள்தான், இன்றைக்குத் தமிழகத்தில் பெண் விவசாயிகளின் இருப்பை, தவிப்பை அவர்கள் இல்லாதழிந்த பின் உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

 பல விவசாயக் குடும்பங்களில், பெண்கள் கணவர்களை இழந்து கடன் சுமை சேர்ந்து நசுங்கிக்கொண்டிருக்கிறார்கள். கீழ்வேளூர் ஓர்குடி கிராமத்தில் விவசாயம் பொய்த்ததால், நெஞ்சடைத்து இறந்த கலியபெருமாள் அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். விவசாயிகளின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டுப் பெய்கிறதோ என எண்ணும்படியாகக் காலம் தப்பித் தூறிக்கொண்டிருந்தது வானம். அந்த வீட்டின் முன் பந்தல் போட்டு மக்கள் கூடி இருந்தனர். ஒரு ஆட்டோவில் காய்கறிச் சோறு வந்து இறங்கியிருந்தது. தனது கணவரின் காரியத்திலிருந்து வெளியே வந்தார் அறிவின்கொடி. ஐந்து மா நிலம், உரிய காலத்தில் நீர் வராததால் நேரடியாக விதை தெளித்து இருக்கிறார்கள். கூட்டுறவு வங்கியில் கடன் கிடைத்தும் காலத்தில் பணம் கிடைக்கவில்லை. தவணை மைக்ரோஃபைனான்ஸ் குழுக் கடன், நகை அடமானம் என ஏராளமான கடன்கள். புலம்பி புலம்பி கணவர் உணவருந்தாமல் இறுகிக் கிடந்து பின், காய்ந்துகிடந்த வயலில் விழுந்து மாரடைப்பில் இறந்தும் போய்விட்டார்.

அருகில் கடம்பங்குடி மாரியம்மன் தெரு. ஒரு பழைய கோயிலை ஒட்டிய மண்பரப்பில் ஓலைக் குடிசைகள். பெரும்பாலானவை மிகச் சிறிய சுவர் பூசப்படாத வறிய வீடுகள். சுவர்ப்பூச்சு பெருமளவு உதிர்ந்து செங்கற்கள் தேய்ந்துபோன ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்தார் கவிதா. இருளில் கிடந்தது வீடு. அவருக்கு வயது 29. கணவர் வீரமணிக்கு வயது 30. விவசாயத் தொழிலாளிகளாக இருக்கும் ஏராளமான தலித் மக்களது கனவு, சொந்தமாக நிலம் வாங்குவது. நிலத்தை குத்தகைக்கு எடுப்பது என்பது அதை நோக்கிய முதல் கட்டமாகப் பலருக்கு இருக்கிறது. வீரமணியும் கவிதாவும்கூட இப்படியான மேம்பாட்டுக் கனவுகளோடே இருந்த நகைகளை அடகுவைத்து, 50,000 ரூபாய்க்கு நான்கு மா நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தனர். பின், தட்டுமுட்டுச் சாமான்களைக்கூட அடகுவைத்து, குழுவிலும் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களிடமும் கடன் வாங்கிப் பயிர் செய்தனர். “எல்லாம் கருகிட்டு” என வெறுமையாகச் சொன்னார் கவிதா. கருகிய பயிரைக் கண்டு, வாடி உதிர்ந்து போய்விட்டார் 30 வயது வீரமணி. நித்யஸ்ரீ, திவ்யதர்ஷினி எனும் இரு சின்னஞ்சிறு மகள்களோடு ஓர் உடைசல் வீட்டில் ஏராளமான கடன்களோடு நிற்கிறார் கவிதா. கைநிறையக் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தார். அதைப் பார்ப்பதைக் கண்டு, “இன்னும் சடங்கு முடியல” என்னும்போதே அது வரை படர்ந்திருந்த வெறுமை சிதறித் துயரத்தில் கரைந்தது அவர் முகம். பெரும்பாலான விவசாயிகளையும் அரசின் தரப்பில் அதுவரை எவரும் வந்து பார்த்திருக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick