காட்டாளன் - மௌனன் யாத்ரீகா

ஓவியம் : செல்வம் பழனி

ச்சிமரங்களும் விளாமரங்களும்
காட்டின் தொடக்கத்தை அடைத்து நிற்க
உள்ளிருக்கும் மரச்செறிவுக்குள் நுழைந்தோம்.
தரை படர் தாவரங்களுள்
உயிர்கள் தப்பிப்பதன் சலனம்.
இரை விழுங்கிய பாம்பின்
அழுந்தப் பதிந்த உடல் தடம்போல்
ஒரு தடம் கண்டோம்.
விரியனின் வாசத்தை மூச்சிழுத்து நுகர்ந்தான் இருளன்.
பெரியதொரு காட்டுப்பன்றியை
ஒத்தையாய் வீழ்த்தக்கூடிய உடற்கட்டுக்கு
அக்கரிய நிறம் எடுப்பாயிருந்தது.
இந்தக் காட்டின் மையத்தில் வைத்துக் கொன்று
சுட்டுப் பொசுக்கி தோல் உரித்த விலங்கொன்றின்
சுவைமிக்க மாமிசம் பற்றி
நாவில் எச்சில் சுரக்கும் கதையொன்றைக் கூறினான்.
வேலத்தின் சந்தன நிறத்தைத் தொட்டுத் தடவி
வாளிப்பான ஓரிடத்தில் கத்தியைப் பதித்த எனக்கு
நாட்டுச்சாராயத்தின் சுர்ரென்று ஏறும் போதை
நினைவுக்கு வந்துபோனது.
முரடான கறிகொண்டிருக்கும் உடும்பு
பக்கத்தில் எங்கோ தன் இணையை நுகர்ந்து கூடுகிறதென்றும்,
அப்போது பீறிடும் பனித்துவர்ப்பு வாசனை
காடெங்கும் பரவியிருக்கிறதென்றும் கூறிவிட்டு
ஒரு வேட்டை நாயைப்போல் சட்டெனப் பாய்ந்து
காட்டில் மறைந்தான்.
காட்டிலிருந்து அவன் வெளியேறியபோது
புராதனமான இரண்டு வாளுறைகளைப்போல்
இரண்டு உடும்புகள் அவன் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்தன.
இன்றைய இரவில் மூட்டப்படும் தீயில்
தொண்டகச் சிறுபறையைக் காய்ச்சி அடித்து
இவ்வேட்டையைக் கொண்டாடுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick