கோர்ட் சித்திரங்கள் - வே.பாபு

ஓவியம் : ரமணன்

ம்பியிட்ட வெள்ளை வேனிலிருந்து
கை விலங்கோடு இறக்குகிறார்கள் அவனை
குழந்தையின் கடைவாயைத் திருப்பி
அப்பா பாரு... அப்பா பாரு... என
அடையாளங்காட்டுகிறாள் அவள்
வலுக்கிறது மழை.

ஜாமீனுக்காக
கூண்டுக்குள்ளே அமர்ந்திருக்கும் அப்பாவை
அழைத்தவண்ணமிருக்கிறாள் மகள்
“சார் பேசாதீங்க
செல்போனை ஆஃப் பண்ணுங்க”
வராண்டாவெங்கும் அலைகிறது
டவாலியின் குரல்
செல்ல மகளே
இந்த ஐந்தாம் நம்பர் கோர்ட்டுக்கு
வெளியே இருக்கும்
கொன்றைமரத்திலிருந்து
ஒரு பூங்கொத்து
நிசப்தமாய் உதிர்வதுபோல்
அப்பா என்று சொல்லேன்.

முதல் வாய்தாவுக்கு ஆஜராகி
வெளியே வந்தவள்
கொஞ்சம் காற்று வீசுவதாக உணர்கிறாள்
இவ்வளவு நேரமும்
இரு சிறகுகளும்
எங்கே மாயமாயினவென்று
தொட்டுப்பார்த்துக்கொள்கிறாள்
இருபுறங்களிலும்.

அவ்வளவு பசி
சுண்டல் பொட்டலம் வாங்கிவிட்டாள்

ஆஜர்படுத்தும்போது
அவனிடம்
இரண்டு வார்த்தைகளாவது
பேசிவிடவேண்டும்தான்
ஒரேயொரு கடலையை
வாயில் போடுகிறாள்
அது பலகோடி
மேடுபள்ளங்களைத் தாண்டி
தொண்டைக்குள் இறங்குகிறது.

“உங்கள்மீது
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு
என்ன பதில் சொல்கிறீர்கள்?”

“பொய்க் குற்றச்சாட்டுங்க ஐயா!”
“சாட்சிகள் இருக்கா?”
“இருங்குங்க ஐயா!”

ஒரு கணம்
உண்மையோ பொய்யோ
சற்று கண்ணயர்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick