முந்தைய கணத்தின் ஓவியம் - சஹானா

ஓவியம் : மணிவண்ணன்

பறவை
கிளையிலிருந்து பறந்து சென்றதும்
ஊஞ்சல் ஆட வருகிறது வண்ணத்துப் பூச்சி

*
ஓடும் மேகத்துடன்
ஒட்டிப் பயணிக்கிறேன் பஸ்ஸில்
சில்லென்ற காற்று மெதுவாய் வந்து என்னை அசைக்க
ஒவ்வொன்றாகக் கடக்கிறேன்
முதலில் புல்மயமான தோட்டத்தை
இரண்டாவது ஆளற்று ஊஞ்சலாடும் ஆலமர விழுதை
மூன்றாவது குன்றின் மேல் மகுடமான குமாரக்கோயிலை
பின்பு நீரெல்லாம் மீன்கள்
மரமெல்லாம் பறவைகள்
எங்கு பார்த்தாலும் வண்ண வண்ணப் பூச்சிகள்
உதிர்கையில் சிறகு முளைத்த இலைகள்
ஒரு தேவதை மேகத்தின் உடையில் வந்து
என் இருக்கையின் ஜன்னலோரம் எட்டிப் பார்க்கிறாள்
என்னுடனே பயணிக்கிறாள்
என் துப்பட்டா பஸ்ஸிலிருந்து பறக்க யத்தனிக்கிறது
நுனி என் கையில் இருப்பதால்
பஸ்ஸுக்கு வெளியே
காற்றின் வடிவத்தைப் பறந்து காட்டுகிறது
வானெங்கும் பட்டங்கள் மிதக்கின்றன

*
புறாவின் கண்போலவும்
பூனையின் கண்போலவும்
மீனின் கண்போலவும்
முப்பரிமாணக் கண் உள்ள
இந்தப் பெண் ஓவியத்தை வரைந்தது யாரோ.
இமை சிமிட்டி
கருவிழி அசைத்து
உயிர் பெற்றெழும் கணத்திற்கு
முந்தைய கணத்தில் நிற்கிறது ஓவியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick