நீதிக் குற்றம் - ஆதவன் தீட்சண்யா

ஓவியம் : செல்வம் பழனி

ம்மில் யாரேனும் கொல்லப்பட்டதாக
வரும் செய்தி
குன்றச் செய்கிறது எனது ஆன்மாவை
வெடிகுண்டில் பொருத்திய கடிகாரமென
அவமானத்தால் துடிதுடிக்கும் என்னிதயம்
நடுங்கிச் சீறுகிறது:
நாங்கள் கொல்லப்பட முடியாதவர்கள்.

கற்றாழைபோல நம் திரேகத்தை
கண்டந்துண்டமாய் அரிந்தெடுப்பவர்களின்
நினைவுத்தைலத்தில்
பதனமாகிவிடும் நமதுயிரை
கொல்லும் வழியறியாது குமைகிறார்கள்.
- ஆம், கொல்லப்பட முடியாதது நமதுயிர்.

நெற்றிப்பொட்டைத் துளைத்தேகும் தோட்டா
கிட்டித்த பற்களுக்கிடையே பாயும் மின்கம்பி
ஏன், விர்ரென மோதும் ரயிலினாலும்கூட 
எதுவும் செய்துவிட முடியாது நம் உயிரை.

வாழும் நம் உடல் மீது
ஐம்பூதங்களையும் அரசப்படைகளையும் ஏவி
முடிவற்றதாய் தொடுக்கும் தாக்குதல்கள் 
அற்பமான கொலைமுயற்சிகளே
உயிரை விடும் கணத்தை நாமே தீர்மானிப்பதால்
நம் மரணம் இயல்பானது
நம்மைக் கொல்லும் வழியை எமனுமறியான்.
 
நமக்கு அஞ்சி தப்பியோடும் மரணத்தை
இவ்வுலகின் விளிம்பு வரை துரத்திப்போய்
நாமாகவே விரும்பிச் சாகும் மாயத்தை 
மை தடவிக் கண்டறியும் நீதிமன்றங்கள்
சந்தேகத்தின் பலனை
எப்போதும் குற்றவாளிகளுக்கே தந்து
தம்மையும் விடுவித்துக்கொள்வதோடு
நம்மை
பிணக்கிடங்கில் பதப்படுத்தி
கண்காணிக்கின்றன.

இனி உயிர்த்தெழ மாட்டோமென
உறுதிப்படும் நாளொன்றில்
ஆசுவாசமாகி வழங்கப்படும் தீர்ப்பில்
நாம் தற்கொலையாகியிருப்போம்.
ஆம், நாம் கொல்லப்பட முடியாதவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick