இலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா | Literature Article of Writer Siddalingaiah - Vikatan Thadam | விகடன் தடம்

இலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தமிழில்: பாவண்ணன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

ழுபதுகளில் கன்னட இலக்கியப் பரப்பில், எழுச்சியுடன் உருவான தலித் எழுத்து முயற்சிகளின் ஆரம்பப்புள்ளிகளில் ஒருவராகத் தொடங்கி, முக்கியமான ஆளுமையாக மலர்ந்தவர் சித்தலிங்கையா. மாணவப் பருவத்திலிருந்தே இலக்கியத்திலும் சமூகச் செயல்பாடுகளிலும் வற்றாத ஆர்வத்துடன் செயலாற்றிவருபவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதியான ‘ஹொலெமாதிகர ஹாடு’ கர்நாடகமெங்கும் இவருடைய பெயரும் புகழும் பரவக் காரணமாகியது. அடித்தட்டு வர்க்கத்திலிருந்து பல புதிய படைப்பாளிகள் எழுத்துலகில் அடியெடுத்து வைப்பதற்குத் தேவையான உந்துசக்தியாக இந்தத் தொகுதி அமைந்தது. கர்நாடக மாநிலத்தில் ‘தலித் சங்கர்ஷ சமிதி’ என்னும் அமைப்பைக் கட்டி எழுப்பியவர்களில் சித்தலிங்கையாவும் ஒருவர். இதுவரை இவருடைய ஆறு கவிதைத் தொகுதிகளும் இரண்டு நாடகங்களும் மூன்று கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கன்னடத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். கன்னட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். கன்னடக் கவிஞர் சித்தலிங்கையா எழுதிய `ஊரும் சேரியும்’ – தன்வரலாற்று நூலின் இரண்டாவது பாகம் சமீபத்தில் வெளிவந்து, கன்னட வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த நூலிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள் இங்கே...

புரட்சிகரக் கவிதைக்குத் தீ

என் கவிதைகளைக் கேட்ட சிலர், ஒருநாள் என் அப்பாவைச் சந்தித்தார்கள். என் அப்பா மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர். `நாம் யாருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது, நமக்கு யாரும் தொல்லை கொடுக்கக் கூடாது’ என்பது என் அப்பாவின் கொள்கை. `ஒருவேளை யாராவது தொல்லை கொடுத்தாலும், அவர்களுக்கு நாம் எந்தத் தொல்லையும் கொடுக்கக் கூடாது’ என்பது இன்னொரு கொள்கை. என் அப்பாவைச் சந்தித்தவர்கள், என் கவிதைகளைப் பற்றி இல்லாதது, பொல்லாததை எல்லாம் சொல்லி பயத்தை உண்டாக்கிவிட்டார்கள்.

 “இந்தக் கவிதைகளால் உங்கள் மகன் சிறைக்குச் சென்றுவிடுவான்” என்று அவர்கள் சொன்னபோது அப்பா பயந்துவிட்டார். என் அப்பாவின் பயத்தை அதிகமாக்கும் பொருட்டு, என் கவிதையின் சில வரிகளைச் சொன்னார்கள். அப்போது நான் எழுதிய ஒரு கவிதையின் வரி இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது. ‘பணக்காரர்களின் தலையுருளத் தொடங்கட்டும் கலகம், பொங்கியெழுந்து பாயட்டும் செங்குருதியின் கங்கை’ என்பதே அந்த வரி. இந்த வரியின் பொருளைப் புரிந்துகொண்டதும் என் அப்பா, மிகவும் பயந்து நடுங்கிவிட்டார்.

“என் மகன் சிறைக்குச் செல்லாமலிருக்க, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று என் அப்பா அவர்களிடமே கேட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick