அடுத்து என்ன? - லீனா மணிமேகலை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரேப் நேஷன்படம் : சொ.பாலசுப்பிரமணியன்

டைப்பியக்கம் என்பது படைப்பதைவிட காத்திருத்தல்தான் என்று ஆழமாக நம்புகிறேன். படைப்பின் உன்னதத் தருணங்களை அந்தக் காத்திருப்பே பெற்றுத் தருகிறது. கதாபாத்திரங்களின் இசைவுக்காக, அவர்கள் பகிரும் வாழ்க்கையின்அதிஅந்தரங்கத் துண்டுகளுக்காக, கண்களில் நிறையும் நம்பிக்கைக்காக, ஈரம்கூடிய கைப்பற்றுதலுக்காக, ஒளிக்கீற்றுகளின் சாய்வுக்காக, இதயத்தின் அடுக்குகளிலிருந்து கிளம்பும் குரலுக்காக நான் காத்திருக்கிறேன். கால தூரங்களை அந்தக் காத்திருப்பின் சுகத்தில் கடக்க முயல்கிறேன்.

2014-ல் தொடங்கிய ‘ரேப் நேஷன்’ என்ற எனது முழுநீள அபுனைவு திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறேன்.

“என்னை நிர்வாணப்படுத்துவதாலும், என் உடலில் மின்சார அதிர்ச்சியைக் கொடுப்பதாலும், என் உறுப்பில் கற்களையும் போத்தல்களையும் நுழைத்துத் துன்புறுத்துவதாலும்  இந்த நாட்டின் நக்ஸல் பிரச்னைகளை நீங்கள் ஒழித்துவிட முடியுமா?” என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியை நோக்கிக் கேள்வி எழுப்பினார் சோனி சூரி. சத்தீஸ்கரின் பஸ்தரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த சோனி சூரியை, நக்ஸல்பாரியின் அனுதாபி எனச் சந்தேகித்துக் கைதுசெய்த போலீஸ், அவரைச் சிறையில்வைத்து பலாத்காரம் உள்பட பல கொடுமைகளுக்கு உட்படுத்தியது. அவரின் மீதான பொய் வழக்குகள் சட்டரீதியாக முறியடிக்கப்பட்டன. என்றாலும், அவரைச் சிறையில்வைத்துச் சித்ரவதை செய்த ‘அங்கித் கர்க்’ என்ற போலீஸ் அதிகாரியின் மீது ஒரு எஃப்.ஐ.ஆர் (FIR)கூடப் பதிவுசெய்ய முடியாத சூழ்நிலைதான் இந்த நாட்டில் நிலவுகிறது. சோனி சூரியின் யுத்தம் இன்று தனக்கான நீதிகோரும் யுத்தம் மட்டுமல்ல; நக்ஸல்பாரிகளை அடக்குகிறோம் என்ற பேரில், இந்தியாவின் சிவப்பு பூமியான பஸ்தரின் ஆதிவாசிப் பெண்களுக்குக் காவல் துறை இழைத்துவரும் அத்தனை கொடுமைகளுக்கும் எதிரான யுத்தமும்கூட.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick