நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 7 - சி.மோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
க்யூபிஸம் - பிகாஸோ: இருபதாம் நூற்றாண்டின் கலைமுகம்

1860-களில் நவீனக் கலையின் முதல் அலையாகத் தோன்றிய இம்ப்ரெஷனிஸ இயக்கம், தம் கால வாழ்வியக்க சலனத்தின் ஒரு கணத்தை ஒளி மற்றும் வண்ணம் சார்ந்து வசப்படுத்தியது. படைப்பில் ஒளியின் ஜாலத்தைக் கைப்பற்றும் அதீத முனைப்பில் வடிவ அழகியலை இம்ப்ரெஷனிஸம் இழந்துவிட்டிருந்ததில் அதிருப்தி அடைந்த பால் செசான், வடிவவியல் சார்ந்த பகுப்பு முறையில் ஓவிய வெளியைக் கட்டமைப்பதில் முனைப்பு கொண்டார். இயற்கையில் காணப்படும் கோடுகள், தளங்கள் மற்றும் வண்ணங்களைப் படைப்புவெளியில் தீர்க்கமாகவும் அறிவார்த்தமாகவும் வடிவமைக்கும் கலைச் செயல்பாட்டை செசான் மேற்கொண்டார்.  ‘கண்கள் கிரகிக்கின்றன; மூளை வடிவமைக்கிறது’ என்பது அவருடைய கருத்தாக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, பின்–இம்ப்ரெஷனிஸப் படைப்பாளிகளான வான்காவும் காகினும் வடிவம் மற்றும் வண்ணங்களின் அழகியல் மற்றும் மெய்மை சார்ந்து படிமங்களாலும் குறியீடுகளாலும் தம் படைப்புகளை உருவாக்கினர். செசான், வான்கா, காகின் ஆகியோரின் கலை அணுகுமுறைகள் மீது அவர்களைத் தொடர்ந்த ஃபாவிஸ்ட்டுகள் பெருமதிப்பு கொண்டிருந்தபோதிலும் வண்ணத்தின் சுதந்திர வெளிப்பாடே அவர்களுடைய பிரதான அக்கறையாக இருந்தது. அவர்களைத் தொடர்ந்த க்யூபிஸ்ட்டுகள் படைப்புப் பொருளின் மெய்மையை, வடிவவியல் சார்ந்த பகுப்புகள் மூலம் முழுமுற்றாக வசப்படுத்த முனைந்தனர். படைப்புப் பொருளை ஓவிய வெளியில் வடிவவியல் ரீதியாகக் கட்டமைக்கும் செசானுடைய தீட்சண்யமான கலை அணுகுமுறைதான், க்யூபிஸ இயக்கம் உருவாகிட முகாந்திரமாக அமைந்தது. அதனால்தான் செசானை, ‘அரவணைத்துப் பாதுகாக்கும் தாய்’ என பிகாஸோ கருதினார்.

இரட்டைப் பரிமாணமுள்ள ஓவியத் தளத்தில் முப்பரிமாணப் பொருளை, மாயத் தோற்றத்துக்கு இடமளிக்காமல், படைப்பில் எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதே இவர்களுடைய கலைரீதியான சவாலாக அமைந்தது. வடிவவியல் ரீதியாகப் படைப்புப் பொருளைத் துண்டுதுண்டாகப் பகுத்துப் பரிசீலித்து, எவ்வித மாயத் தோற்றத்துக்கும் இடமளிக்காமல், பொருளின் துல்லியமான படிமத்தை ஓவியத்தளத்தில் உருவாக்குவதன் வழியாக க்யூபிஸ்ட்டுகள் இந்தச் சவாலைக் கலை ரீதியாகக் கடந்தார்கள். அதனால்தான் அவர்களுக்குப் பின் வந்த ஓவிய மேதையான பால் லீ, ‘வடிவத்தின் தத்துவவாதிகள்’ என்று க்யூபிஸ்ட்டுகளைக் குறிப்பிட்டார்.

ஜார்ஜ் பிராக்கும் பிகாஸோவும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இணைந்து உருவாக்கிய ஒரு கலை பாணி க்யூபிஸம். அதன் தொடக்கத்தில் பிராக் வரைந்த ஓவியங்கள் பற்றி ஹென்றி மத்தீஸ், “பிராக்கின் ஓவியங்கள் சிறுசிறு கனசதுரங்களால்(cubes) வடிவமைக்கப் படுபவை” என்று குறிப்பிட்டார். இதுவே இந்த வகை ஓவியங்கள் க்யூபிஸம் என அழைக்கப்படக் காரணமாயிற்று. சிறு வயதிலேயே யதார்த்த பாணியிலும் குறியீட்டு பாணியிலும் தன் படைப்புகளை உருவாக்கிய பிகாஸோ, க்யூபிஸக் கலை பாணியைக் கைக்கொண்டபோது, அந்தக் கலை இயக்கத்தின் அபார மேதையாக உருவெடுத்தார்.

இருபதாம் நூற்றாண்டுக் கலைவெளியின் முதல் பாதியை வடிவமைத்த மகத்தான கலை ஆளுமை, பாப்லோ பிகாஸோ (1881-1973) எனும் ஸ்பானிய ஓவியர். இளம் வயதிலேயே பாரிஸில் குடியேறிக் கலை வாழ்க்கையை மேற்கொண்டவர். 11 வயதில் வரையத் தொடங்கிய இவர், பதின் வயதுகளிலேயே யதார்த்த வகை ஓவியங்களை வெகு தத்ரூபமாக வரைந்தவர். 92 வயது வரை வாழ்ந்த பிகாஸோவின் கலைப் பயணம் 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. வாழ்நாள் முழுவதும் தன்னுடைய படைப்பு வகைமைகளை இடையறாது மாற்றிக்கொண்டே இருந்த அபூர்வ ஆளுமை. நீண்ட நெடும் கலை வாழ்க்கையில் வெகு சகஜமாகத் தொடர்ந்து மாறுபட்ட சாத்தியங்களில் தன்னை இருத்திக்கொண்டவர். புதுப்புதுக் கண்டுபிடிப்புகளில் திளைத்திருந்தவர். ‘கொலாஜ்’ என்ற கலை வகை இவருடைய கண்டுபிடிப்புதான். நாடகார்த்தத்திலிருந்து தன்னுணர்ச்சி, செவ்வியலிலிருந்து எக்ஸ்பிரெஷனிஸம், யதார்த்தத்திலிருந்து குறியீட்டியல், க்யூபிஸத்திலிருந்து சர்ரியலிஸம் என விரிந்து செழித்த பயணம் இவருடையது. நவீன யுகத்தின் துரித சலனத்தில் படைப்பாளி எந்தவொன்றிலும் தங்கியோ தேங்கியோ விடக்கூடாது என்பதில் கடும் பிரயாசைகள் மேற்கொண்டவர். வாழ்ந்த காலத்திலேயே வாழும் காலத்தின் கலைச்சின்னமாக உருவானவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick