உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : ப.சரவணகுமார்

மொத்தம் ஏழு குடித்தனங்கள். அம்மையும் அண்ணியும்தான் குடித்தனங்களின் பிரதான தலைகள். அண்ணி என்றால், எனது அண்ணி அல்ல. எல்லோருக்குமான அண்ணி. அண்ணி எனும் பெயரில் அன்னபூரணி. சனிக்கிழமைகளில் குடித்தன வாசலைப் பார்க்க வேண்டும். ஞாயிறுகளின் விருந்துக்கான வாசலில் பெண்கள் பரபரத்துக்கொண்டிருப்பார்கள். ஏழு வீட்டு அரிசியும் உளுந்தும் தண்ணீரில் குளிர்ந்து ஒரு பதத்துக்கு வந்திருக்கும். வாசலில் ஒரே ஆட்டுஉரல்தான். வெயில் தாழ, அம்மையும் அண்ணியும் அத்தைகளும் ‘ருப்பு’க் கல்லின் அருகே சுற்றிலும் அமர்ந்துகொள்வார்கள். ‘ருப்பு’க் கல்லை கழுவுகிறபோதே, மறுநாளுக்கான தோசையின் வாசம் நாசியில் வந்துபோகும். பேட்டையின் கதைகளோடு பலரது வண்டவாளங்கள் மாவோடுமாவாக அரைபட்டுக் கொண்டிருக்கும்.

ஞாயிறுகளில் இட்லிச் சட்டியை வைக்கோலால் தேய்த்துக் கழுவிக் கொண்டிருப்பார்கள் அக்காக்கள். எனக்குப் பிடிக்குமே என்று வேர்க்கடலைச் சட்னியை அம்மியில் மையாக அரைத்துக் கொண்டிருப்பாள் அம்மா. அப்போதுதான் வாசலே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பையோடு உள்ளே நுழைவார் கங்காதர மாமா. அப்புறம் ஏது உறக்கம்? ஜோட்டுப் பயல்களோடு மாமாவை முற்றுகை இடுவோம். மறக்காமல் தேன்மிட்டாய்களைக் கொடுத்துவிட்டு, அண்ணிக்குத் தெரியாமல் குதிரை படம் போட்ட பிராந்திப் புட்டியைப் பதுக்கிவிடுவார். கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, வெற்றுடம்போடு கையில் அரிவாளுடன் தயாராவார் மாமா. அண்ணி, பெரிய சட்டியைக் கொண்டுவந்து வைக்கும். பையைச் சுருக்கு முடியிலிருந்து அவிழ்த்து சட்டியில் பொத்தெனப் போடுவார் மாமா. நன்றாகச் சிவந்து கனிந்து களிகூர்ந்து காத்துக்கொண்டிருக்கும் ‘பெருசை’ (மாட்டுக்கறியைப் பேட்டையில் பெருசு என்றுதான் சொல்வார்கள்) ஒரு குழந்தையைப்போல குளிப்பாட்டிக் கொண்டிருப்பாள் அண்ணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick