புத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சந்திப்பு : வரவனை செந்தில் - படங்கள் : கே.ராஜசேகரன்

‘படிப்பு என்பது வேறு, வாசிப்பு என்பது வேறு’ - இந்தப் புரிதலைச் சரியான வயதில் எனக்குள் விதைக்க ஆள் இருந்தது என் பெரும்பேறு. அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள் என்பதால், புத்தகம் குறித்து எந்த அச்சமும் எழவில்லை. அப்பா திராவிட இயக்கப் பின்னணியில் வளர்ந்து இருந்ததால், வாசிக்கும் பழக்கத்தின் நன்மைகளை உணர்ந்தே இருந்தார். ஆனால், புத்தக வாசிப்பு குறித்த பெரிய விழிப்புஉணர்வு இல்லாத கிராமத்தில்தான் நான் வளர்ந்தேன். பிற மனிதர்களின் அனுபவங்களும் சொந்த அனுபவங்களுமே வாழ்வில் நாம் கற்கும் உண்மையான பாடம். எல்லா அனுபவங்களையும் நாம் கண்டடைந்துவிட முடியாது. ஆனால், அதைப் புத்தகங்களின் வாயிலாக உணர முடியும் என்பதையும், நமக்கான சிறகுகள் புத்தகத்தின் உள்ளேதான் இருக்கின்றன. அதை எடுத்து அணிந்துகொள்ள, நாம் அதனுள் செல்லவேண்டும்’ என்பதையும் பதின்ம வயதுகளிலேயே உணரவைத்தார் அப்பா.

எங்கள் ஊர் மல்லாங்கிணற்றில் ஒரு கிளை நூலகம் இருந்தது. அதிசயிக்கத்தக்க விதமாய் அதைச் சரியாகப் பராமரிக்கவும் ஆள் இருந்தது. வீட்டைத் தாண்டி ஊருக்குள் மிகப் பிடித்த, நேசிக்கத்தக்க இடமாய் அது இருந்தது. ‘இரும்புக் கை மாயாவி’களும்,  ‘அம்புலிமாமா’ சுமந்து வந்த ‘விக்கிரமாதித்தனின் வேதாளங்களும்’ அங்கேதான் இருந்தார்கள். அதன் பின், எல்லா பெண் பிள்ளைகளுக்கும்போல ரமணிச்சந்திரன், லஷ்மி போன்றவர்களை நோக்கியே கைகாட்டப்பட்டாலும், சங்ககால மகளிரை, அவர்களின் வாழ்க்கைப்பாடுகளைச் சரியாக அறிமுகப்படுத்தியது விருதுநகர் சத்திரியர் மேல்நிலைப் பள்ளி. சங்க இலக்கியங்களை வெறுமனே மனனம் செய்ய மட்டும் படிக்காமல் அதில் கேள்விகளைக் கேட்க அப்பா பழக்கப்படுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick