சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன் | History tamil culture words - Vikatan Thadam | விகடன் தடம்

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படம்: சி.சுரேஷ்பாபு

ங்கள் மகன் ‘அறிவுமதி’ வயிற்றிலிருக்கும்போது ஆரம்பித்த நடுநாட்டுச் சொற்சேகரப் பணி, அவனுக்கு ஆறு வயதாக இருக்கும்போது 2007-ம் ஆண்டு டிசம்பரில் முடிந்து அகராதியாக வெளிவந்தது. கிட்டத்தட்ட 3,000 சொற்கள், 400 பழமொழிகள், 200 மரபுத் தொடர்கள் என பெரிய மாக்காணமான வேலை. இயல்புச் சொல்லா, மரபுச் சொல்லா… பெரிய ‘ற’ வருமா சின்ன ‘ர’ வருமா… இந்தச் சொல், வேறெந்த வட்டாரத்திலாவது வந்திருக்கிறதா என அதையும் இதையும் புரட்டிப் பார்த்து, குட்டையைக் குழப்பிக்கொண்டு கிடந்து, அதிலிருந்து வெளியே வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ‘இனிமேல்பட்டு இந்த அகராதி பக்கமே தலை வைச்சுப் படுக்கக் கூடாது” என எரிந்துகொண்டிருக்கிற நிறைவிளக்கை அணைத்துச் சத்தியம் செய்யாத குறையாக கறாராய் முடிவெடுத்திருந்தேன். காரணம், அகராதி வேலை என்பது கதை, கவிதை, நாவல் படைப்புப் பணிகள்போல ஓர் உற்சாகம் தருகிற வேலை கிடையாது. மிகவும் மனவறட்சி தரும்படியான எழுத்துப் பணி அது. தொடர்ந்து ஐந்தாறு வருடங்கள்  அதிலேயே கிடந்ததில் மூஞ்சியில் குத்துகிற மாதிரி அச்சேறி வந்த புத்தகத்தைக்கூடப் பிரித்துப் பார்க்கத் தோணாமல், அப்படியே எறவானத்தில் செருகுகிற மாதிரி தூக்கி பார்வைக்கூட்டில் வைத்துவிட்டேன்.

அதுவரைக்கும் வந்த வட்டாரச் சொல்லகராதிகளிலேயே ‘நடுநாட்டுச் சொல்லகராதி’தான் நல்ல உழைப்பு என்று பார்த்தவர்களும் படித்தவர்களும் சொன்னார்கள். தமிழ், தமிழகராதி வரிசையில் போட்டிக்கு ஏதும் இல்லாத காரணத்தினால், 2007-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசும் அதோடு 20,000 ரூபாயும் கொடுத்தார்கள். ஆனால், இந்தப் பரிசு, பாராட்டு எதுவும் அகராதி தயாரிப்பினால் எனக்கு ஏற்பட்ட ஆயாசத்தைத் தணிப்பதாக இல்லை. அதிலிருந்து தப்பிக்கத்தான் ஒரு வேகத்தில் ‘வந்தாரங்குடி’ நாவலை அரிபிரியாய் எழுத ஆரம்பித்திருந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick