”இட்டு நிரப்ப முடியாத இடம்!” - ரவிசுப்பிரமணியன் | Writer Aranganathan passes away - Vikatan Thadam | விகடன் தடம்

”இட்டு நிரப்ப முடியாத இடம்!” - ரவிசுப்பிரமணியன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படம் :பண்நிறை, ஓவியம் : ஞானபிரகாசம் ஸ்தபதி

மா. அரங்கநாதனை 90-களின் துவக்கத்தில் நான் சந்தித்தேன். அப்போது அவர் நங்கநல்லூரில் குடியிருந்தார். அதற்கு முன்பு எங்களுக்குள் கடிதத்தொடர்பு இருந்தது. அவரது ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலை நான் ஏற்கெனவே வாசித்திருந்தேன். புதுக்கவிதைக்கு இலக்கணம்போல கவிதையியல் சார்ந்த அந்தப் புத்தகம், அவரை நேரில் சந்திக்க என்னைத் தூண்டிக்கொண்டிருந்தது. ஒரு மூத்த படைப்பாளியைச் சந்தித்த அனுபவம்போல் அல்லாமல், பழகிய நண்பன் ஒருவனை நீண்ட நாள் கழித்து சந்தித்துத் திரும்பியதுபோல் இருந்தது அந்த முதல் சந்திப்பு. இத்தனைக்கும் அன்று நாங்கள் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஆனாலும், அவர் அப்படி உணரவைத்தார். அவர் படைப்புகளிலும் அப்படி உணரவைக்கும் தன்மை உண்டு. பொதுவாகவே மா.அரங்கநாதன் சுருக்கமாகத்தான் பேசுவார். அப்போது நான் பழகும் எல்லா இலக்கியவாதிகளிடம் ஒரு கோரிக்கை வைப்பேன். கும்பகோணத்தில் உள்ள எங்கள் விடுதியில் வந்து என் விருந்தினராகச் சில நாள்கள் தங்கிச் செல்லவேண்டும் என்று. அதை ஏற்று மா. அரங்கநாதன் தன் நண்பரோடு வந்திருந்தார். நான்கைந்து நாள்கள் தங்கியிருந்து கும்பகோணத்தில் உள்ள கோயில்களையும் அதைச் சுற்றியுள்ள ஸ்தலங்களையும் சுற்றிப் பார்த்தார். அப்போது இன்னும் நெருக்கமாக அவரைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் தங்கியிருந்த நாள்களில் தினமும் இரவு வெகுநேரம் அவரோடு பேசிக்கொண்டிருப்பேன். எவ்வளவு கலைநுட்பமும் மனிதநேயமும் வாஞ்சையும் உள்ள மனிதர் இவர் என்று வியந்தேன். எனது சில கவிதைகள் குறித்தும் அவரது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு, அவரது ‘முன்றில்’ இதழில்  ‘பிச்சை எடுக்கும் யானை’ என்ற தலைப்பில் என் கவிதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு மூத்த படைப்பாளியான அவர், என் கவிதைகள் குறித்து எழுதிய கட்டுரை எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. அது எனக்கு வாய்த்த பேறு. என் கவிதைகள் குறித்த ஒரு விமர்சனக் கூட்டத்தையும் ‘முன்றில்’ சார்பில் அவர் நடத்தினார். அதையும் என்னால் மறக்க இயலாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick