ஈழ இலக்கியம் ‘‘ரயில் புறப்பட்டுவிட்டது!’’ - அ.முத்துலிங்கம்

உரையாடல்: வெய்யில், தமிழ்மகன் - படங்கள்: எஸ்.யோகரத்தினம்

லங்கையில் உள்ள ‘கொக்குவில்’ கிராமத்தில் பிறந்தவர் அ.முத்துலிங்கம். தமிழின் தனித்துவமான கதைசொல்லி. உலகளாவிய இலக்கிய வாசிப்பும் அறிதலும் கொண்டவர். உலகின் எந்தத் திசையில் வாழ்கிற மனிதர்களின் கதைகளையும் நமது அன்றாட வாழ்வோடு இணைத்துவிடுகிற லாகவமும் எளிமையுமே இவரின் புனைவு பலம். சிறுகதை, கட்டுரை, புதினம், மொழிபெயர்ப்பு, பயணம் என விரிவாகத் தொடர்ந்து இயங்குகிறவர். உலகின் பல்வேறு மொழி எழுத்தாளர்களை, பல்துறை ஆளுமைகளை நேர்காணல் செய்து பதிவுசெய்தவர்; செய்துவருபவர். பணி ஓய்வுக்குப் பின், குடும்பத்துடன் கனடாவில் வசித்துவரும் 80 வயது அ.முத்துலிங்கத்தோடு மின்னஞ்சல் வழியாகச் செய்த உரையாடல் இது. சமீபத்திய மின்னஞ்சலில் ‘மழை பெய்துகொண்டிருக்கிறது’ என்று அனுப்பினார். ஒரு செய்தியே என்றபோதும், புனைவில் எவ்வளவு அற்புதமான ‘படிமம்’ இது!

“புனைவு என்ற வார்த்தையை, அதன் சாத்தியங்களை முழுமையாக எப்போது உணர்ந்தீர்கள்? அந்தக் கணம் நினைவிருக்கிறதா?”

“நிச்சயமாக. எங்கே, எந்த நேரத்தில், என்ன படித்தேன் என்பதும் நினைவில்  இருக்கிறது. கல்கி, மு.வரதராசனார், காண்டேகர் எல்லோரையும் படித்துவிட்டேன். புதுமைப்பித்தன் இரவலாகக் கிடைத்து முதன்முதலாகப் ‘பொய்க்குதிரை’ சிறுகதையைப் படித்தேன். அப்படியே சில நிமிடங்கள் திகைத்து நின்றேன். மறுபடியும் படித்தேன். இப்படியும் தமிழிலே எழுத முடியுமா!

 ‘அன்றும் அவனுக்குச் சம்பளம் போடவில்லை’ என்று கதை தொடங்கும். அவனுக்குப் பசி, மனைவிக்கும் பசி. சற்று வசதியான நண்பன் வீட்டு நவராத்திரி கொலுவுக்குப் போகிறார்கள். மனைவி பாடுகிறாள். பசியில் தொண்டை கட்டிவிடுகிறது. கணவன் பாட்டைப் பாடி முடிக்கிறான். எல்லோரும் அமர்ந்து சாப்பிடும்போது இவனின் மனைவியும் பரிமாறுகிறாள். நண்பன் வேடிக்கையாகச் சொல்கிறான், “ஊரார் வீட்டு நெய்யே, பெண்டாட்டி கையே” அவள் திடுக்கிடுகிறாள். வீட்டுக்கு வந்த பின்னர் விம்மி அழுகிறாள். ‘அசடு... அசடு...’ என்று தேற்றுகிறான் இவன்.  “என்னவோ மனசு நெலை கொள்ளலை” என்கிறாள் அவள்.

அன்று படித்ததை இன்றும் மறக்க முடியவில்லை. இந்தக் கதைதான் என்னை மாற்றியது. புனைவு என்றால் என்ன என்பது ஒருவாறு புரிய ஆரம்பித்தது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick