பனியாரக் குழியில் காலத்தை நகர்த்தி ஆடுதல் - பெரு விஷ்ணுகுமார் | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

பனியாரக் குழியில் காலத்தை நகர்த்தி ஆடுதல் - பெரு விஷ்ணுகுமார்

ஓவியம் : செல்வம் பழனி

ல்லாங்குழி ஆடுவதில் கெட்டிக்காரி பாட்டி
அவள் தன் பலகையில் செதுக்காமல்விட்ட குழி ஒன்று
ஊருக்கு வெளியே குளமானது.
எதை நிரப்பியாடுவது என்று தெரியாத சிறுவயதில்
குடத்தைத் தூக்கிக்கொண்டு குளத்துக்குப் போனவள்
வழியெல்லாம் ஒவ்வொரு குழியாகச் சிந்திக்கொண்டே வருவாள்
பின்பு வீட்டுக்கு வந்து இறக்கிவைத்த
வெறுங்குடத்தைத் தூக்கிக்கொண்டு அடுத்தாள் போய்
அதுபோலவே சிந்திக்கொண்டு வருவார்கள்.
இப்படியான வரலாற்றில்
புளியமுத்தை நிரப்பியாடும் வழக்கத்தைத் தொடங்கிவைக்க
வெற்றிலைக்கறை படிந்த
தன் பற்களைக் கொடுத்துவிட்டு - இப்போது
துருத்திக்காட்ட முடியாமல் செம்மண் நாக்கை
நீட்டி நீட்டிக் காண்பிக்கிறாள்.
அதாவது,
குளம் நிரம்பினால் மதகின் மீது
கொஞ்சங்கொஞ்சமாய் நீர் வழியுமே அதுபோல.
சரி, இன்று போதும்
மீதியை நாளை ஆடுவோம் என
பரண் மீது வைக்கச்சொல்லிக் கொடுத்தப் பலகையை
வேண்டுமென்றே நாம் தொலைத்துவிட,
அன்று அழுத அவள் கண்ணுக்குழியில்
காலம் மங்கிய பூஞ்சோழியிட்டு யாரோ ஆடிப்போயிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick