தும்பிகள் தொலைந்த காலம் - ஸ்ரீதர்பாரதி

ஓவியம் : ரமணன்

சவுடன் வாரித்தூற்றும் சுட்டெரிக்கும் பொட்டல்காடு
கொடை கொடுத்தும் மனமிறங்கா மாரி
கோடை உழவில் இழவு விழ
விதைத்தவசம் விற்று வீடு சேர்கிறான் குறுக்கொடிந்த சம்சாரி
நா உலர்ந்த ஆவினங்கள் கானல் தேடிக் களைப்புற
ஊற்றுக்குழி நாடி நெடுந்தொலைவு ஊறும் ஞெகிழிக் குடங்கள்
நாரைகள் ஆய்ந்த ஏரியில்
ஒற்றைப் பட்டியக்கல் ஸ்தூபியாய் நிற்க
பாளம்பாளமாய் வெடித்த பூமியில்
பச்சையம் ராவும் மறிகளின் விழிகள்
குட்டையாய் சுருங்கிய கொஞ்சூண்டு கண்மாயில்
கரையாது மிதக்கிறது முத்தாலம்மனின் முளைப்பாரி
வெயில் குடித்து நிலம் கீறும் வேளாண்குடிப் பெண்டுகளின் வியர்வையில்
விளையும் இனி திறண்ட வெள்ளரிகள்
அனல் காற்றுக்கு அஞ்சிப் பெருமூச்செறிந்து
ஆல்நிழலில் பதுங்கும் ஆடோட்டிகளோடு
ஆகாசம் வெறித்து நிற்கிறார்கள்
வீரங்கி அய்யனும் நல்லதங்காள் அம்மையும்
தும்பி பறக்கும் காலத்திற்காய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick