முடிவிலி ஆட்டத்தின் இருமுனைகள் - தர்மராஜ் பெரியசாமி

ஓவியம் : செந்தில்

வெள்ளீயப் புரதங்களுக்குப் பழகிவிட்ட அராபிய
பூனைகளுக்கு வேட்டையின் ஆதிகுணம் இன்னுங்கூட
மீதமிருப்பது ஆச்சர்யம் ததும்புகிற செய்திதான்.
கொடுவாழ்வின் கூரிய நகங்களில் சிக்குண்ட
ஒரு சிறுஉயிரைப்போல இந்த ஜபீல் பூங்காவில்
ஓர் எலிக்குஞ்சு இப்படி நான்கு கால்களினிடை
எப்படி அகப்பட்டது தெரியவில்லை.
கொஞ்ச நேரம் உயிர் அலற ஓடவிடுவதும் பின்
மூச்சடங்க மென்னியை நெரிப்பதுமென அதனைத்
தனக்கு வாய்த்த ஆகச்சிறந்த விளையாட்டுப்
பொருளாய்ப் பாவிக்கும் மத்தியக்கிழக்குப்பூனையின்
குரூரப் புன்னகையில் ஒளிர்வது
‘வலியோருக்கு எளியோர் கேலிப்பொருள்’ எனும் உலக நியதி.
அன்றொரு நாள் நம் தலைக்கு மேல்
கொழுந்துவிட்டெரிந்த அதே வன்மம்தான் அது.
இந்த முடிவிலி ஆட்டத்தின் நுனிமுனைகள் முறையே
எலியின் கைகளிலும் காலத்தின் கைகளிலும்
சுழன்றுகொண்டிருப்பதை உணர்ந்தபோது
அதனிடம் நான் கெஞ்சிக் கேட்டேன்
பூனையே தயவுசெய்து என்னைச் சீக்கிரமே
கொன்றுவிடு.


ஜபீல் பூங்கா - துபாயில் கராமா (Al Karama) பகுதியிலிருக்கும் பூங்கா.
வெள்ளீயம்- Tin
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick