யார் வீட்டில்தான் கரப்பான்பூச்சிகள் இல்லை - வசந்த் ஆதிமூலம் | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

யார் வீட்டில்தான் கரப்பான்பூச்சிகள் இல்லை - வசந்த் ஆதிமூலம்

ஓவியம் : செந்தில்

வனுக்கும் கரப்பான்பூச்சிகளுக்குமான தொடர்பு
30 வருடங்களுக்கும் மேலானது.
எத்தனையோ கரப்பான்களை உடைத்தே கொன்றிருக்கிறான்
அவற்றின் உயிர்த்தெழுதல்களுக்கும் கணக்கில்லாமல் போனது.
அவை டினோசர்களைப்போல அவ்வளவு பலவீனமானவையா என்ன?
படுக்கையறைக்குள் நுழையும் கரப்பான்களை
அவன் அறவே வெறுக்கிறான்.
ஏதோ ஒரு விதி
அவர்கள் இருவரையும் இணைத்துக்கொண்டேயிருக்கிறது.
அவனின் மனைவி
அதை ஒரு பொருட்டாகக் கருதவே இல்லை.
மனைவியின் அசட்டையிலும் புன்னகையிலும் ஏதோ ரகசியம் இருக்கிறது.
பனி கவிந்த ஒரு நள்ளிரவில்
நீண்ட உணர் கொம்புகளுடன்
மனைவியின் அந்தரங்கத்தின் மீது விளையாடிக்கொண்டிருந்த
கரப்பான்களைக் கண்டு திடுக்கிட்டு விழித்தான்.
மென்சிரிப்புடன் புரண்டு படுக்கிறாள் சகதர்மினி
அவள் கரங்களைப் பற்றி மென்மையாக முத்தமிட்டான்.
கருஞ்சிவப்பு உகிரிப்பூச்சிட்ட அவளது கூர்நகங்களில்
கரப்பான்கள் சிரித்துக்கொண்டிருந்தன.
ஏவாளும் அவனுமாக
அந்த ஆதி செந்தூர மாலைப்பொழுதில்
விருட்சத்தின் வேர்களிடையே கண்ட மீசையுள்ள பூச்சியா இது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick