திக்கிப் பேசுகிறவன் - ஜான் சுந்தர்

ஓவியம் : செந்தில்

வெல்டிங் பணிமனையின் வெளிச்சப் பொறி
அவன் பேச்சு.

வார்த்தைகளைப் பெற்றுப் புறந்தள்ள
கர்ப்ப வலி தின்னும் நெஞ்சிலிருந்து
மேடேறும் குதிரைகள்
மணலில் புதைந்து திமிறுகின்றன.

கோபங்கொள்ளுகையில்
அவனது நாவுக்குத் தாளம் தப்பிவிடுகிறது
அக்கினி அம்புகள் வாயிலிருந்து புறப்பட்டு
பகைஞரின் காலடியில் மல்லிப் பந்துகளாய் மாறி விழ
மூர்க்கர்களும் மரணாயுதங்களைத்
தரையில் எறிந்துவிட்டு
சிறியோனை முத்தஞ்செய்வார்கள்.

மனதுருகும் வேளைகளில்
நீள்குழல் விளக்குகள்
உயிருக்குத் துடிப்பதைப்போலவே
அவன் இன்னும் அதிகமாகத் திக்குவான்.
பொறியில் சிக்கித் துடிக்கும் பன்றியென
அந்த உதடுகள் துடித்திருக்க
துருவேறிய ஆணியை விழுங்குவதைப்போல
நாம் நமது எச்சிலை விழுங்க வேண்டும்.

நேற்றைக்கு அவன் என்னிடம்
தனது அன்பைச் சொன்னான்.
மற்றவர்களுடையதைக்காட்டிலும்
கூடுதல் எடையோடிருந்த
அவனுடைய அன்பில்
எழுத்துருக்கள் திரளாயிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick