பம்ப் விற்பவன் கதை அல்லது மோடி அல்லது... - ராணிதிலக்

ஓவியம்: செந்தில்

ன்றைய உதயநாழிகைக்கு முன்பாக
அவன் எழுந்துவிட்டான்
தெருவில் இருந்த குழாய் பசியாற்றவிட்டது
தோளில் நான்கு சைக்கிள் பம்புகள்
இன்றைக்கு விற்றாக வேண்டும்
இன்றைக்கான ரொட்டியில்
சைக்கிள் பம்பின் பெயர் எழுதியுள்ளது
சூரியனைத் தலையில் கிரீடமாகச் சூடி
தெருவெங்கும் அலையத் தொடங்கிவிட்டான்
முச்சந்தி, நாற்சந்தி, இடது வலது, வலது இடது
முட்டுச்சந்து எல்லாவற்றிலும்
அவனின் காலடித் தடங்கள்.
அவன் தலைக்குமேல் இப்போது சூரியன்.
மதிய உணவு இப்போது இல்லை
ஏனெனில் குழாயில் நீர் வரவில்லை.
கொஞ்சம் அயர்ச்சியாக
கடைத்தெருத் திண்ணையில் சாய்ந்திருக்கிறான்.
யாதும் ஊரில்லை
யாவரும் கேளிரில்லை
நாய் ஒன்றின் குரைப்பில் மயக்கம் தெளிந்து
திரும்பவும் தெருவெங்கும் சுற்றுகிறான்
இப்போது சூரியன் அவன் முகத்தைப் பார்க்கும்படி.
அந்தி சாய
இன்னும் சில பொழுதுகள்.
அவன் அம்மா இப்போது சாப்பிட்டிருக்க மாட்டாள்
அவன் தந்தை இப்போது இருமிக்கொண்டிருக்கலாம்.
இன்றைக்கு எந்தப் பம்பும் வாங்கப்படவில்லை.
இன்றைய அவனுக்கான ரொட்டி பிறக்கவேயில்லை
பிழைப்பிற்காக
ஒருவன் தன் நிலத்தைப் பிரிவது அவமானம்
அதைவிட அவமானம்
வேறொரு நிலத்தில் அவனால் பிழைக்க முடியாதது
ஏன் ஒருவன் அநாதையாக அலைய வேண்டும்?
ஏன் என் தேசத் தலைவர்களால்
ஒரு கவளம் உணவைக்கூடத் தர முடியவில்லை?
இவற்றிற்கு யார்தான் காரணம்?
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick